நன்றிசுரா
கட்டுரைகள்/NOVEMBER 19, 2014
சமீபத்தில் நான் மதுரைக்குச் சென்றிருந்தேன்.ஒரு கட்டிடத்தைப் பார்த்ததும் நான் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகி விட்டேன்.அந்த கட்டிடம்-‘ந்யூ சினிமா’ என்ற திரையரங்கம்.1960களில் நான் மதுரை நாகமலை புதுக்கோட்டை ஜெயராஜ் நாடார் உயர்நிலைப் பள்ளியில் படித்தபோதும்.அதே இடத்திலிருந்த எஸ்.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் 70 களில் படித்தபோதும்,அதற்குப் பிறகு அஞ்சல் வழி கல்வி மூலம் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ.படித்தபோதும் இந்த திரை அரங்கத்தில் எவ்வளவு திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன்!காலத்தின் ஓட்டத்தில் இந்த திரையரங்கத்திற்கு இப்படியொரு நிலையா உண்டாக வேண்டும்?ஒரு காலத்தில் எத்தனையோ வெள்ளி விழா படங்களும்,வெற்றி விழா கொண்டாடிய படங்களும் ஓடி திரைப்பட ரசிகர்களுக்கு சொர்க்கத்தின் நுழை வாயிலாக விளங்கிய ‘ந்யூ சினிமா’திரையரங்கம் தன்னுடைய வர்ணத்தையெல்லாம் இழந்து,பகட்டெல்லாம் இல்லாமற் போய்,சிதிலமடைந்து,செடிகள் முளைத்து,அலங்கோலமாக நின்றிருந்த காட்சியைப் பார்த்தபோது என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது.காலம் கட்டிடங்களை மட்டுமல்ல,மனிதர்களையும் இப்படிப்பட்ட நிலைக்கு பந்தாடி தூக்கி விட்டெறியும் என்ற உண்மை தெரிந்தவனாக இருந்தால் கூட, திரையரங்கத்தின் இப்போதைய தோற்றத்தைப் பார்த்தபோது,மனதில் உண்டான பாரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
ஒருகாலத்தில் பரபரப்பான திரையரங்காகவும்,இப்போது மூடப்பட்டுக் கிடக்கும் பாழடைந்த பழைய கட்டிடமாகவும் இருக்கும் ‘ந்யூ சினிமா’ பூட்டப்பட்டு 20 வருடங்கள் ஆகிவிட்டனவாம்.திரையரங்கின்பங்குதாரர்களுக்கிடையே பிரச்சினைகள் இருப்பதால்,அப்படியே அது கவனிப்பாரற்ற நிலைக்கு ஆளாகி விட்டது என்று எதிரில் கடைகள் வைத்திருப்பவர்கள் கூறினார்கள்.
இன்றும் மறக்க முடியாத எத்தனையோ படங்களை நான் இந்தத் திரையரங்கில் பார்த்திருக்கிறேன்.இன்னும் சொல்லப் போனால்,நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த பல மிகச் சிறந்த திரைப்படங்கள் இந்தத் திரையரங்கில்தான் அந்தக் காலத்தில் திரையிடப்பட்டிருக்கின்றன.எம்.ஜி.ஆர்.நடித்த படங்கள் மீனாட்சி,சிந்தாமணி ஆகிய திரையரங்குகளில் திரையிடப்படுகின்றன என்றால்,சிவாஜி நடித்த படங்கள் ந்யூ சினிமா,தேவி,சென்ட்ரல் ஆகிய திரையரங்குகளில் திரையிடப்படும்.நான் நடிகர் திலகத்தின் ரசிகன்.அவர்
நடித்த திரைப்படம் வருகிறது என்றால்,படம் திரைக்கு வந்த முதல் நாள் அல்லது இரண்டாவது நாளிலேயே நான் அந்தப் படத்தைப் பார்த்து விடுவேன்.இந்த ‘ந்யூ சினிமா’வில்தான் நான் சிவாஜி நடித்த ‘ராமன் எத்தனை ராமனடி’படத்தைப் பார்த்தேன்.ஆரம்ப காட்சிகளில் வெகுளித்தனமான சாப்பாட்டு ராமனாகவும்,பின்னர் வரும் காட்சிகளில் திறமையால் முன்னுக்கு வந்த விஜயகுமார் என்ற திரைப்பட நடிகராகவும் சிவாஜி கணேசன் நடித்திருப்பார்.படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது திரையரங்கிற்குள் ஒலிக்கும் கைத்தட்டல்களையும்,நடிகர் திலகம் வரும் காட்சிகளில் திரையின் மீது வீசி எறியப்படும் பூக்களையும் இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.’அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு’ என்ற பாடல் சந்தோஷ சூழலில் பாடப்படும்போது,நடிகர் திலகத்துடன் சேர்ந்து திரையரங்கிற்குள் நாங்களும் மகிழ்ச்சிக் கடலில் மிதந்து,கும்மாளமிட்டோம்.அதே பாடலை தான் மனதில் உயிருக்குயிராக நேசித்த கே.ஆர்.விஜயா தன்னை மறந்து விட்டு,முத்துராமனைத் திருமணம் செய்து கொண்ட தகவல் தெரிந்ததும்,சிவாஜி கணேசன் கதாபாத்திர
மாகவே மாறி,முகம் முழுவதும் சோகத்தையும்,ஏமாற்றத்தையும்,கவலையையும்,இழப்பின் வேதனையையும் கொண்டு வரும்போது,அவருடன் சேர்ந்து நாங்களும் அழுதோம்…நாங்களும் காதல் தோல்வியில் துடித்தோம்..,நாங்களும் கண்ணீர் விட்டு கதறினோம்.இதுதான் உண்மை.’ந்யூ சினிமா’வின் இருக்கைகள் எங்களின் கண்ணீரால் நனைந்தன.
நடிகர் திலகத்தின் மிகப் பெரிய வெற்றிப் படமான ‘வசந்த மாளிகை’இந்த ‘ந்யூ சினிமா’வில்தான் திரையிடப்பட்டது.இப்போது நான் அந்த நாளை நினைத்துப் பார்க்கிறேன்.அப்போது நான் உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கிறேன்.பெருந்தலைவர் காமராஜர் அப்போது உயிருடன் இருக்கிறார்.பழைய காங்கிரஸ் கட்சியின் மாநாடு மதுரையில் நடக்கிறது.மதுரை மாநகரமே திருவிழாக் கோலம் பூண்டு காட்சியளிக்கிறது. காமராஜர் மாநாட்டிற்கு வந்திருக்கிறார்.நடிகர் திலகமும் அப்போது அந்தக் கட்சியில் இருக்கிறார்.அந்தச் சமயத்தில் ‘வசந்த மாளிகை’ திரைக்கு வந்தது.திரையரங்கிற்கு முன்னால் எப்படிப்பட்ட கூட்டம் திரண்டு நின்றிருக்கும் என்பதை கூறவும் வேண்டுமோ?
நான் முதல் நாள் பிற்பகல் காட்சிக்கே போய் வரிசையில் நின்று விட்டேன்.அதுதான் முதல் காட்சி.தாங்க முடியாத வெயிலில் சாலையில் வரிசையில் நிற்க வேண்டும்.ஆனால்,அதெல்லாம் ஒரு பிரச்சினையாகவே தெரியாது.எப்படியாவது படத்தைப் பார்த்தால் போதும் என்ற எண்ணம் மட்டுமே மனதில் இருக்கும்.அந்த காட்சியில் எனக்கு டிக்கெட் கிடைக்கவில்லை.எனக்கு முன்பு சிலர் நின்றிருக்க,கவுண்டரை மூடி விட்டார்கள்.எனக்கு தாங்கிக் கொள்ள முடியாத ஏமாற்றம்.எனினும்,தாங்கிக் கொண்டேன்.அந்த இடத்தை விட்டு நான் நகரவேயில்லை.நான் மட்டுமல்ல…எனக்கு முன்னால் நின்றிருந்தவர்கள்,பின்னால்நின்றிருந்தவர்கள் யாருமே வரிசையை விட்டு விலகிச் செல்லவில்லை.அனைவரும் சாயங்கால காட்சிக்காக மறுபடியும் அதே இடத்தில் நின்றிருந்தோம்.இன்றைய ரஜினி,கமல்,விஜய்,அஜீத்,சூர்யா,விக்ரம்,தனுஷ்,விஷால்,ஆர்யா,கார்த்தி,ஜெயம் ரவி ரசிகர்கள் இதையெல்லாம் நம்புவார்களா தெரியாது.நம்பினாலும்,நம்பாவிட்டாலும் இதுதான் உண்மை.
இவ்வளவு நேரம் வரிசையில் நின்றும்,சாயங்கால காட்சிக்கும் டிக்கெட் கிடைக்கவில்லை.எனக்கு அழுகையே வந்து விட்டது.எனக்கு முன்னால் ஐந்து பேர் நின்றிருக்க,கவுண்டரை மூடி விட்டார்கள்.எனக்குப் பின்னால் ஒரு நீண்ட வரிசை நின்று கொண்டிருந்தது.இறுதியில் சிவாஜி ரசிகர் மன்ற டிக்கெட் ஒன்று எனக்கு எப்படியோ கிடைத்து விட்டது.அவ்வளவுதான்…என் மனதில் உண்டான மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறி அமர்ந்து விட்ட சந்தோஷம் எனக்கு உண்டானது.துள்ளிக் குதித்துக் கொண்டு திரையரங்கிற்குள் ஓடினேன்.நான் போய் அமர்ந்ததும்,படம் ஆரம்பித்தது.’ஓ மானிட ஜாதியே’என்று சிவாஜி பாடியபோது,ரசிகர்களும் அவருடன் சேர்ந்து பாடினார்கள்.அந்தக் காலகட்டத்தில் கல்லூரி மாணவர்களில் 90%பேர் சிவாஜியின் ரசிகர்களாகத்தான் இருப்பார்கள்.சிவாஜி தன்னுடைய ஸ்டைலிஷான நடிப்பால்,இளைஞர்களை தன் பக்கம் காந்தமென இழுத்து வைத்திருந்தார்.அதை கண்கூடாக ‘ந்யூ சினிமா’வில் ‘வசந்த மாளிகை’ படம் பார்த்தபோது என்னால் உணர முடிந்தது.’ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்’ என்று திரையில் சிவாஜி பாடியபோது,இதுவரை பார்த்திராத சிவாஜியை ரசிகர்கள் பார்த்தார்கள்.’மயக்கமென்ன இந்த மவுனமென்ன’ என்று ஸ்லோ மோஷனில் சிவாஜி காதல் கீதம் இசைத்தபோது.தாங்களே காதலிப்பதைப்போல படம் பார்த்த ரசிகர்கள் உணர்ந்தார்கள்.’லதா.அதோ பார்…உனக்காக நான் கட்டியிருக்கும் வசந்த மாளிகை’ என்று அழகு தமிழில் சிவாஜி வசனம் பேசியபோது,மொத்த திரையரங்கும் அதில் சொக்கிப் போய் உட்கார்ந்திருந்தது.’இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்’ என்று சிவாஜி இருமிக் கொண்டே பாடியபோது,அவருடன் சேர்ந்து ரசிகர்களும் அழுதார்கள்.இறுதியில் ‘யாருக்காக?யாருக்காக?இந்த மாளிகை வசந்த மாளிகை…’என்று சிவாஜி காதலியின் இழப்பில் கண்ணீரில் கரைந்து நின்றபோது,திரை அரங்கமே கண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது.’ந்யூ சினிமா’வில் அந்தப் படம் 175 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது.
இதே திரையரங்கில் நான் பார்த்த இன்னொரு படம் ‘எங்கள் தங்கராஜா’.பட்டாக்கத்தி பைரவன் என்ற கதாபாத்திரத்தின் அறிமுகக் காட்சிக்காகவே அந்தப் படத்தை தொடர்ந்து மூன்று நாட்கள் இந்தத் திரையரங்கில் நான் பார்த்ததை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.
மோட்டார் பைக்கில்,பெல் பாட்டம் பேண்ட் அணிந்து,அசால்ட்டாக சூயிங்கத்தை மென்று கொண்டே வரும் ஸ்டைலிஷான சிவாஜி….’ந்யூ சினிமா’வே கைத்தட்டல்களால் அதிர்ந்தது.’கற்பாம்.,மானமாம்.,கண்ணகியாம்..சீதையாம்...’ என்று சிவாஜி பாடியபோது,அவருடன் இரண்டறக் கலந்து போய் அமர்ந்திருந்தனர் ரசிகர்கள்.மஞ்சுளாவுடன் இணைந்து இளமை தவழ ‘இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை?’என்று பாடி ஆடியபோதும்,’கல்யாண ஆசை வந்த காரணத்தைச் சொல்லவா? என்ற பாடலின் இறுதியில் மஞ்சுளாவை ‘பொத்’தென்று புல் தரையில் சிவாஜி போட்டபோதும் ரசிகர்கள் மத்தியில் உண்டான ஆரவாரம் இருக்கிறதே!அது இப்போது கூட என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.
காலம் மாறலாம்…கோலங்கள் மாறலாம்…மாற்றங்கள் ஆயிரம் நிகழலாம்.காலச் சக்கரத்தின் சுழற்சியில் இவையெல்லாம் நடக்கத்தான் செய்யும்…நேற்று இருந்தோர் இன்று இல்லை…இன்று இருப்போர் நாளை…? ‘ந்யூ சினிமா’விஷயத்திலும் அதுதான் நடந்திருக்கிறது.அதற்காக….கடந்த காலத்தில், படவுலக வரலாற்றில் அது செய்த சாதனையையும்,பதித்த முத்திரையையும் மறந்து விட முடியுமா?