மனித வாழ்வின் உண்மையை கூட்டாமலும், குறைக்காமலும் சினிமாத்தனம் சிறிதும் இல்லாமல் இயல்பாக திரைப்படுத்தியிருக்கும் ஒரு பிரான்ஸ் திரைப்படம். ஒரு சாதாரண குடும்பம், ஒரு சாதாரண சூழ்நிலை, சாதாரண நிகழ்வுகள். வில்லன்கள் இல்லை,
ஆனாலும் மனதை நெகிழ வைக்கும் திரை ஓவியமாக படைத்திருக்கின்றனர். இயக்குனர் இரட்டையர்கள் ஜீந்பெர்ரி டார்டன்னும், லக் டார்டன்னும். கதாநாயகி சான்ட்ர, கதாநாயகன் மனு மிகவும் அற்புதமாக நுட்பமான கதாபாத்திரத்தில் பொருந்தியிருக்கிறார்கள். மிகைப்படாமல் இயல்பாக வாழ்ந்திருக்கிறார்கள்.
இரண்டு நாட்கள், ஒரு இரவு என்னும் தலைப்பிற்கேற்ப படம் கால கட்டனையில் விறுவிறுப்பாக செல்கிறது.
குடும்ப வாழ்க்கையின் அடிப்படை தேவை பணம், அன்பு, பாசம், புரிதல் அத்தனையும் கடந்து பணம் வாழ்க்கைக்கு அவசியமாகிறது. சமுதாயத்தில் குடும்பம் நிலைத்திருக்க பணம் மிகவும் அவசியம்தான். ஒரு சிறு தொழிற்சாலை மிகக் குறைந்த தொழிலாளர்கள், அதில் ஸான்ட்ராவும் ஒருத்தி. அங்கே யூனியன் கிடையாது. அடிப்படை உரிமை பற்றி பேச வாய்ப்பு கிடையாது.
யாரும் யாருக்கும் பகை கிடையாது. குறிவைத்து தாக்குதலும் கிடையாது. நிர்வாகம் திறமையாக ஊழியர்களை கையாள்கிறது. உற்பத்தி பாதிக்காமல் ஊக்குவிக்க போனஸ், ஆனால் அதை அடைய ஊழியர்கள் தங்களில் ஒருவரை திறமையற்றவராக விலக்க வேண்டும்.
ஆட்குறைப்புக்கு நிர்வாகம் உலகம் முழுவதும் விதவிதமான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன) அப்படி விலக்கப்பட்டவர்தான் ஸான்ட்ரா. அவளை விலக்குவது மற்றவர் குறிக்கோள் அல்ல. ஆனால் அதனால் கிடைக்கும் போனஸ், ஒரு சில ஆயிரங்கள் அவர்களுக்கு தேவை. அவள் வேலை இழந்த நிலை பற்றி ஆதங்கப்பட அவர்களுக்கு அக்கறை ஏதும் இல்லை.
ஸான்ட்ராவுக்கோ அவள் வேலை, வருமானம் அத்திவாசியமானது. அவள் குடும்பத்தை கட்டிக்காக்க அவளுக்கு அந்த வருமானம் தேவை. மனு அன்பான கணவன், அவள் தவித்து நிற்கும்போது தோள் கொடுத்து தேற்றுகிறான். அவள் பயத்தை போக்கி நடைமுறைக்கு கொண்டு வருகிறான். அந்த இரண்டு நாட்கள், ஒரு இரவில் அவள் சக பணியாளர்களை சந்தித்து அவர்களின் முடிவை மாற்றி அமைக்க முயலுகிறாள்.
ஒரு சிறிய விளக்கம். திரும்ப திரும்ப அதையே ஒவ்வொருவரிடமும் கூற வேண்டும்.
குடும்ப சூழ்நிலையில் தன்னால் வருமானம் ஈட்டமுடியாத நிலையில் அவள் தன்னை ‘‘ஒன்றுக்கும் உபயோகமில்லாதவள்’’ என்று கருதி வருகிறாள். ஆனால் அவளது கணவன் மனு அங்கே பிரம்மாண்டமாக செயல்படுகிறார்.
அவளுடைய தாழ்வு உணர்ச்சியை நீக்குகிறார். அவளுக்கு ‘‘முடியும்’’என்று தைரியமளித்து சக ஊழியர்களை சந்திக்க வைக்கிறாள். அவர்களது குழந்தைகளும் இந்த முயற்சியில் கை கொடுக்கிறார்கள். சக ஊழியர்களின் இருப்பிடத்தை கண்டுபிடித்து உதவுகிறார்கள்.
உயர்விலும், தாழ்விலும் கணவனும், மனைவியும் ஒருவருக்கு ஒருவர் துணையாகி, வாழ்க்கையில் போராடி இறுதியில் வெற்றியும் பெறுகிறார்கள்.
நன்றி ராஜேந்திரன்