ஒருவர் நடிகராவதற்குத் தேவையான யோக்கியதாம்சம் டைரக்டருடைய திறமை தான்.அடிப்படை நடிப்பாற்றல் இல்லாத ஒருவரைக் கூட திறமை மிக்க இயக்குநரால் நடிக்க வைத்து விட முடியும்.
உதாரணமாக பரிசு பெற்ற காஞ்சன சீதா படத்தில் சாதாரண ஆதிவாசி ஒருவரைத் தான் அப் பட இயக்குநர் ராமனாக நடிக்க வைத்தார்.— with Abdul Samath Fayaz.
என்னையே எடுத்துக்கொள்ளுங்கள்!..நான் பிறவி நடிகனல்ல.சொல்லிக் கொடுத்ததை புரிந்து கொண்டு பயிற்சி மூலமாக நடிகனானவன்.கிளிசரின் போட்டால் தான் என்னால் அழுது நடிக்க முடியும்.இன்றைய சூழலில் ஒரு நடிகனை கண்ணாடிக்குப் பூசப்படும் சாயத்தைப் போல் தான் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.நடிக்க வேண்டிய கதா பாத்திரத்தையோ கதையைப் பற்றியோ முழுமையாகத் தெரிந்து கொள்ள போதுமான அவகாசம் தருவதில்லை.அந்த மாதிரியான நேரங்களில் மேலெழுந்தவாரியாகத் தான் என்னால் நடிக்க முடிகிறது.
புடோவ்கின் தனது புத்தகத்தில் ஒரு நடிகனுக்கு அந்தப் படத்தின் எடிட்டரோடு நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும் என்கிறார்.அல்லது எடிட்டருக்கு இருக்க வேண்டிய ஞானமாவது நடிகருக்கு இருக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.இங்கே நடிகருக்கும் எடிட்டருக்கும் எந்தவித தொடர்புமே இல்லை.இன்னமும் சொல்லப்போனால் கதையோடு கூட நடிகருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தால் தான் அவரது பாத்திரத்தையாவது உணர்ந்து நடிக்க முடியும்.
ஓர் உதவி டைரக்டருக்குத் தெரிந்திருக்கும் அளவிற்காவது நடிக்கக் கூடியவர்களுக்கு கதை பற்றி தெரிந்திருக்க வேண்டும்.டைரக்டர் பாலச்சந்தர் இயக்கும் படங்களில் நடிக்கும்பொழுது என்னை அவர்கள் குழுவில் ஒருவராகத் தான் கவனிப்பார்கள்.இதனால் தான் கதாபாத்திரத்தின் இயல்பு முன் கூட்டியே தெரிநதுவிடுகிறது.அவரது படங்கள் சிறப்பாக அமைவதற்கு இது தான் காரணம்.
கதைக்காக அல்லாமல் ஒரு பெரிய தொகையை அட்வான்ஸாக கொடுத்துவிட்டார்களே என்பதற்காக பிடித்தமில்லாத சில கதாபாத்திரங்களில் நடிக்கும்போதும் திறமை குறைவான இயக்குநர் முன்பாக நடித்துக்காட்டும்போதும் நாடகத்தனமாக சிலர் நடிக்கும்படி வற்புறுத்தும்போதும் என் நடிப்பு பாதிக்கப்படுகிறது.என்னால் அவர்கள் எதிர்பார்க்கும்படி நடிக்க முடியும்.ரியாலிட்டிக்காக நடிக்க வேண்டும் என நினைக்கும் சந்தர்ப்பங்களில் அப்படி நடிக்க முடியாமல் போவதை ஒரு தடையாகவே நான் கருதுகிறேன்.
நடைபாதை ஓரத்தில் உள்ள விளிம்பின் மீது சில சமயங்களில் நடந்து போவோம்.அப்போது நமது கவனம் முழுவதும் நம்மை கீழே விழாமல் சமாளித்துக்கொள்வதில் தான் இருக்கும்.அதே மாதிரி காதல் காட்சிகளில் நெருங்கி நடிக்கும்போது நடிப்பிற்கு அப்பாற்பட்ட உணர்வுகளுக்கு இடம் கொடுக்காமல் காமிரா கோணம் நடிப்பு இவற்றில் தான் கவனம் செல்லும்.என் அனுபவத்தில் நான் பார்த்த வரை நடிகரும் சரி நடிகையும் சரி நிஜ வாழ்க்கையில் பலதரப்பட்டவர்களுடன் நெருங்கிப் பழகி தொடர்பு கொண்டு கஷ்டப்பட்டவர்களால் தான் நடிப்பில் பரிமளிக்க முடிகிறது.அப்படிப்பட்ட சிலருக்கு சுக துக்கங்களை மனதில் தேக்கி வைத்துக்கொண்டு நடிப்பது சாத்தியமாகவும் இருந்திருக்கலாம்.என் வழி அதுவல்ல.
எனது தாயார் இறந்து போனதை மனதில் வைத்துக்கொண்டு அப்படிப்பட்ட சோகக் காட்சியை பழைய நினைவுகளை மனதில் வைத்துக்கொண்டு என்னால் அழ முடியாது.அன்றைய தினம் எனது அப்பா எப்படி அழுதார்?.அண்ணா சாருஹாசன் எப்படி அழுதார் என்பதை மனதில் பதிய வைத்திருக்கிறேன்.அதை ஞாபகப்படுத்திக்கொண்டு நான் அவர்களுள் ஒருவனாக நடிப்பேன்.இது ஒரு வகை நடிப்பு.இதே மாதிரி நடிகர் திலகத்தின் நிஜ வாழ்க்கையில் கடைபிடிக்கும் ஒரு சில மேனரிஸங்களை நான் படத்தில் செய்து காட்டியுள்ளேன்.
ஜெமினி கணேசனைப் பார்த்து அதையும் படத்தில் காட்டியுள்ளேன்.அந்த மாதிரி பதினாறு வயதினிலே சப்பாணி கேரக்டர் நான் எங்கேயோ பார்த்த கேரக்டராக இருக்கும்.சட்டம் என் கையில் ரத்தினத்தை நான் எங்கேயோ சந்திருப்பேன்.
சினிமாவில் நடிப்பவர்கள் அழகாக உயரமாக இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு நடிப்பிற்கு தேவைப்படாத ஒன்று.தன் முகம் படத்தில் அழகாகத் தெரிய வேண்டும் என நினைப்பவர்களும் உண்டு.நான் அப்படி நினைப்பதில்லை.அப்படி நினைத்திருந்தால் மன்மத லீலை போன்ற படங்களில் மட்டுமே நடித்திருக்க முடியும்.பதினாறு வயதினிலே படத்தில் நடித்திருக்க முடியாது.
பாகப் பிரிவினை போன்ற படங்களிலேயே சிவாஜி இத்தகைய மாற்றங்களைச் செய்துள்ளார்.நடிப்பு என்பது அனுபவ மெழுக ஏற ஏறத் தான் ஒளி வீசும்.குறத்தி மகன் கமலஹாசனையோ அரங்கேற்றம் கமலையோ இன்று என் முன்னால் நிறுத்தினால் ஸ்டுப்பிட் என்பேன்.கோகிலா கன்னடத்தையோ சப்பாணியையோ இன்னும் ஐந்து வருடங்களுக்குப் பிறகு பார்த்தால் என் நடிப்பை நான் ரசிக்கமாட்டேன்.
அ..ஆ....எழுத்துக்களை கோணல் மாணலாக கிறுக்கி அழித்து பிறகு சரியாக எழுதிப் பழகுவது போல தான் அறிந்த நடிப்புக் கலையும் அப்படித்தான். தச்சனைப் போன்றவன் நான்.உளியை வைத்துக்கொண்டு நானே என் நடிப்பைச் செதுக்கி வடிவம் கொடுக்க முயல்கிறேன்.
நடிப்புக் கட்டுப்பாடோ சட்ட திட்டங்களோ இருக்கக் கூடாது.சுருக்கமாகச் சொல்லப் போனால் என் கொள்கைகளுக்கும் எனது நடிப்புக்கும் சம்பந்தமே இல்லை.எப்போதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நடிப்பில் என் கொள்கை பக்கம் ரகசியமாக அப்படிப் போய் வருவேன்.பணத்துக்காக நடிக்கும் நிலை நீங்கி என் கொள்கைகளுக்காக நடிக்கும் காலத்தை ஆவலோடு நான் எதிர் நோக்கி காத்திருக்கிறேன்.