Breaking News :

Thursday, November 21
.

விசேஷம் (Vishesham) மலையாள படம் எப்படி இருக்கு?


இரண்டாம் திருமணத்தில் இணையும் இருவர், ஒரு குழந்தைக்காகக் காத்திருப்பதும் அந்தக் கருவுறுதலுக்கான போராட்டங்களுமே கரு. படம் நெடுக எதார்த்தமான நகைச்சுவை மிளிர்கிறது. சிரிப்புடன் சேர்த்துச் சிந்திக்கவும் வைக்கிறார்கள்.

நாயகனாக நடித்திருக்கும் ஆனந்த் மதுசூதனன், அப்பாவியாக, வழுக்கைத் தலையுடன், ரகளை செய்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் அடிபொலியாக ஈர்க்கிறார். கழுகு சிறகடிப்பது போல் கைவீசி, இன்னும் இன்னும் உயரப் பற எனத் தன்முனைப்பு வகுப்பு நடத்துகிறார். இயற்கை விவசாயியாகக் களத்திலும் உழைக்கிறார்.

இவரது முதல் திருமணத்தில், தாலி கட்டிய அடுத்த நிமிடம், இவர் கண்ணெதிரே மனைவி தன் காதலனுடன் ஓடிப் போகிறார். மனம் தளராமல் ஆனந்த், அடுத்த திருமணத்திற்குத் தயாராகிறார். பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த போது, போராட்டக்காரர்கள் மீது விழ வேண்டிய அடி, ஒதுங்கி, ஒளிந்து நின்ற இவருக்கும் விழுகிறது. அடித்து விளாசிய காவல் துறை அம்மணியே இவருக்கு இரண்டாவது மனைவியாக வருகிறார்.

ஆனந்தின் இரண்டாவது மனைவியாக வரும் சின்னு சாந்தினி நாயர், படத்தின் மிகப் பெரிய சுவாரசியம். பெண் காவலராக லத்தியைச் சுழற்றுவது ஆகட்டும், ஏதும் விசேஷம் உண்டா என நச்சரிக்கும் பாட்டியிடம் சிங்கமெனச் சிலிர்த்துச் சண்டைக்குப் போவது ஆகட்டும், காதல் காட்சிகளில் குழைவது ஆகட்டும், குழந்தைக்காக ஏங்கிச் சோகத்தில் ஆழ்வது ஆகட்டும்... நவரசங்களையும் வாரி வழங்கியிருக்கிறார். காவல் உடுப்பில் நீ செக்சியாக இருக்கிறாய் என ஆனந்த் உணர்ந்து சொல்கிறார். இப்படி புஷ்டியாக இருப்பதும் சிலருக்கு அழகைத் தருகிறது. நடிப்பிலும் மிரட்டுகின்ற சின்னு சாந்தினி நாயருக்கு விருதுகள் காத்திருக்கின்றன.

கருவாக்க மருத்துவமனைகளின் வேறு முகத்தைப் படத்தில் காட்டுகிறார்கள். பணமே குறியாக இயங்கும் இத்தகைய நிறுவனங்கள் குறித்துப் படம் விழிப்புணர்வு ஊட்டுகிறது. தன்னைக் கொடுமைப்படுத்திய முதல் கணவரைப் பழிதீர்க்கவே காவல் துறையில் இணைந்ததாக, சின்னு சாந்தினி நாயர் கூறுகிறார்.

ஆனால், காவலர் ஆன பிறகும் தானாகவே அவர் மீது புகார் கொடுக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ இல்லை. ஏதோ ஒரு வழக்கில் அந்த முதல் கணவர் சிக்கி, இவரது காவல் நிலையத்துக்கு வரும் வரைக்கும் காத்திருக்கிறார். இது சற்றே இடிக்கிறது. மற்றபடி, சிறப்பான படம். அத்புதமே அத்புதமே என்ற பாட்டு, மிக அருமை (ஆனந்த் மதுசூதனன், இந்தப் படத்தின் இசையமைப்பாளரும் கூட).

புதுமணத் தம்பதிகளிடம் ஏதும் விசேஷம் உண்டா என்றும் தம்பதிகளிடம் உங்களுக்கு எத்தனைக் குழந்தைகள் என்றும் கேட்பதைத் தடுத்து நிறுத்துவதே இந்தப் படத்தின் விசேஷம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.