கே.பாக்யராஜ் (Bhagyaraj, பிறப்பு: ஜனவரி 7, 1953) ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளன்கோயில் என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் பெயர் கிருஷ்ணசாமி-அமராவதி அம்மாள் மூன்றாவது மகனாக பிறந்தார். செல்வராஜ், தன்ராஜ் இரு அண்ணன் உண்டு. தமிழ்த் திரையுலகில், நடிகர், வசன எழுத்தாளர், திரைக்கதை அமைப்பாளர், இயக்குனர், சிறப்பு வேடமேற்கும் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பத்திரிகையாளர் எனப் பன்முகம் கொண்ட ஒரு கலைஞர். இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக, 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள்ஆகிய படங்களில் திரைப்படக்கலை பயின்றவர்.
தனது முதல் இரண்டொரு படங்களுக்குப் பிறகு, பாக்யராஜ் அப்போது துணைக்கதாபாத்திரங்களில் நடித்து வந்த "பிரவீணா" என்னும் நடிகையை மணந்தார். இவர் பாக்யராஜின் "இன்று போய் நாளை வா", "மௌன கீதங்கள்", "பாமா ருக்மணி" ஆகிய சில படங்களிலும் நடித்தவர். சில வருட மண வாழ்க்கைக்குப் பிறகு, நோய்வாய்ப்பட்டு பிரவீணா இறந்தார். சில காலத்திற்குப் பின்னர், பாக்யராஜ் அப்போது முன்னணி நாயகியரில் ஒருவராக இருந்த பூர்ணிமா ஜெயராமை மணந்தார்.
. இவர்களுக்கு, சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற மகனும் உண்டு. இவர்கள் இருவரையுமே பாக்யராஜ் திரையுலகில் அறிமுகம் செய்திருக்கிறார். சரண்யா முதல் படத்திற்குப் பிறகு நடிக்கவில்லை. சாந்தனு தன் முதல் படமான சக்கரக்கட்டி என்னும் படத்தில் நாயகனாக அறிமுகமாகி தற்போது வரை நடித்து வருகிறார்.
துவக்கம் முதலே தன்னை எம். ஜி. ஆரின் ரசிகராக வெளிப்படுத்தியிருந்த பாக்யராஜ், ருத்ரா திரைப்படம் வெளியான காலகட்டத்தில் அ.தி.மு.க.கட்சியில் இணைந்திருந்தார். இப்படத்தில், ஒரு பாடல் காட்சியில், ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆரின் உருவப் படங்கள் திரையில் தோன்றுமாறு அமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பிறகு, அக்கட்சியிலிருந்து வெளியேறி சொந்தக் கட்சி ஒன்றைத் துவக்கினார். பின்னர், நாளடைவில் அது கலையவே, தற்போது, தி.மு.க. கட்சியில் உள்ளார்.
அவர் பிஸியாக இருந்த காலத்தை விட, இன்று அவருக்கு கூடுதலாக வாழ்த்துகள் குவிகின்றன... இதற்கு ஒருபக்கம் மீடியா, இன்னொரு பக்கம் அவரது அருமை இன்றைய தலைமுறைக்கும் புரிந்திருப்பது!
திருமணம் என்பதில் நமது சமூகப் பார்வை என்ன என்பதையும் தாலியின் புனிதத்தையும் அந்த 7 நாட்கள் படத்திலும், 'இது நம்ம ஆளு' சாதிப் பிரிவினை எந்த அளவுக்கு சமூகத்தைப் பாதித்திருக்கிறது என்பதையும், அதிகப் பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்தின் பரிதாப நிலையைத் 'தாவணிக் கனவுகள்' படத்திலும், ஏழையின் காதல் படும் பாட்டை 'சுவரில்லாத சித்திரங்கள்' படத்திலும், கணவன் மனைவி இடையே ஏற்படும் பிணக்குகளை மையமாக்கி 'மௌன கீதங்கள்' படத்திலும் இப்படி இவரது படைப்புகள் எல்லாம் ஏனோதானோ என்றில்லாமல் படம் பார்ப்பவரைப் பாதிக்கும் அளவுக்கு இருக்கும். பாமா ருக்குமணி, சின்னவீடு சிரிப்போடு சிந்திக்க வைத்தவை. சிவன் தலையிலேயே சின்னவீடு என்று காட்டின துணிச்சல் யாருக்கு வரும்?
டார்லிங்...டார்லிங்...டார்லிங்.... திரைப்படம் அவரது சொந்த வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்ததை நாம் மறக்க முடியுமா?
இமயத்தோடு இணைகிறோம் என்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் பெருமைப்படுத்திய பாங்கு, என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே' என்று முதுபெரும் நடிகர் நம்பியார் அவர்களுடன் போதையில் ஆடிப்பாடிய தூறல் நின்னுப் போச்சு திரைப்படத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
மாணவி ஆசிரியரோடு தவறான உறவை வைத்துக் கொள்ளக் கூடாது என்ற படிப்பினையைச் சுந்தரகாண்டத்திலும், மனநிலை சரியில்லாப் பெண்ணின் அவலத்தை 'ஆராரோ ஆரிராரோ' படத்திலும் படம் பிடித்துக் காட்டிய விதம். நண்பன் மரணத்தை மறைத்து அவன் குடும்பத்தின் மகிழ்ச்சி பாதிக்காத வகையில் நடக்க. அதுவே பெரும் புயலாய் மாறி கதாநாயகனை எல்லோரும் தப்பா நினைக்கும் சூழலை அற்புதமாகப் 'பவுனு பவுனுதான்' திரைப்படத்தில் கையாண்ட விதம் இவரது திறமைக்குச் சான்று.
ஒரு கைதியின் டயரி:
கதை, திரைக்கதை தனக்கே உரிய பாணியில் பழி வாங்கும் கதை. அதையே "ஆக்கிரி ராஸ்தா" என்று இந்தியில் இயக்கமும் செய்து முடிவை மாற்றித் தான் ஒரு சிறந்த கற்பனை வளம் உள்ளவர் என்று நிரூபித்தார்.
சிறந்த வசனம்:
கணக்கிட முடியாத அளவுக்குச் சிறந்த வசனங்களைத் தந்தவர். தாவணிக் கனவுகள் அண்ணன் தங்கையிடம் பேசும் வசனம் "நான் திருமணத்திற்கு நாள் குறிச்சிட்டு வந்திருக்கேன். நீ வளைகாப்புக்கு நாள் பார்க்குறே". பத்தினி யாருங்கற கேள்விக்கு ஒருத்தரும் தன் மனைவி பெயரைச் சொல்லததை இடித்துக் காட்டும் வசனம், தாலியைக் கழட்டச் சொல்லும் பகுதி வசனம் அந்த 7 நாட்கள் படத்தில் இப்படிப் பல உதாரணங்களைச் சொல்லலாம்.
சிறந்த இயக்கம்:
முந்தானை முடிச்சு படத்தில் கைக் குழந்தையைக் கதாநாயகி தாண்டும் இடம், டார்லிங்...டார்லிங்...டார்லிங் படத்தில் இறுதிக்காட்சி 'விடியும் வரைக் காத்திரு' படத்தில் சமையல் கேஸ் வழியாகக் கொலை செய்யும் யுக்தி, அந்த 7 நாட்கள் படத்தில் காதலனையே மணமுடிக்கத் தீவிரம் காட்டும் பெண்ணுக்குத் திருமணத்தைப் புரிய வைக்கும் பகுதி, சொக்கதங்கம் படத்தில் பிரகாஷ்ராஜை அறிமுகப்படுத்தும் விதம் - என்று நீண்ட பட்டியல் உண்டு.
பிறமொழிப் படங்கள்:
இந்தியாவில் இவரது கதைகள் படங்கள்தான் பல்வேறு மொழிகளில் - இந்தி, தெலுங்கு, கன்னடம், ஒரியா என்று பல மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளன. தலைசிறந்த திரைக்கதை அமைப்பாளர் என்றும் பாராட்டுப் பெற்றவர்.
படைப்பாளி:
திரைப்படத் துறையோடு எழுத்துலகிலும் தன் முத்திரையைப் பதித்தவர். கடந்த 18 ஆண்டுகளாக பாக்யா வார இதழின் ஆசிரியர். 7 நாவல்கள் எழுதியுள்ளார். தொலைக்காட்சியில் தூர்தர்ஷனில் இவரது ரூல்ஸ் ரங்காச்சாரிதான் மிகவும் பிரபலமானத் தொடர் என்று பாராட்டப்படுகின்றது. இது ஒரு கதையின் கதை -டிடியில் 390 பகுதிகளாக ஒளிபரப்பப்பட்டது.
விருதுகள்:
தமிழ்நாடு அரசின் சிறந்த வசனத்திற்காகப் புதிய வார்ப்புகள் படத்திற்கு. சிறந்த திரைக்கதைக்காக தாய்க்குலமே தாய்க்குலமே படத்திற்கு, சிறந்த திரைப்படத்திற்கான சிறப்புப் பரிசு 'இது நம்ம ஆளு' படத்திற்கு, சிறந்த நடிகருக்கான பரிசு 'ஒரு கை ஓசை' படத்திற்கு மற்றும் பிலிம்பேர் சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் பலமுறை பெற்றவர். அவர் சிறந்த விருதாகக் கருதுவது உரிமையோடு உங்கள் பாக்யராஜ் என்று தன்னை ஒவ்வொரு படத்திலும் அறிமுகம் செய்து கொள்வது என்பதுதான். நல்ல திரைப்படம் இரண்டு வல்லுனர்களின் மேஜையில் பார்க்கப்படுகின்றது. ஒன்றை திரைக்கதை எழுதுபவர் மேஜை. இரண்டாவது எடிட்டரின் மேஜை என திரைக்கதையின் பெருமையைப் பற்றி அன்றே பிரபல பிரிட்டன் இயக்குனர் ஆல்பர்ட் ஹிட்சாக் கூறியுள்ளார். அந்தப் பாணியில் இன்று இந்தியாவிலேயே திரைக்கதை அமைப்பதில் சிறந்தவர் என இயக்குநர் மணிரத்னம் ஏன் இந்தி நடிகர் அமிதாப் பச்சன் வரை பாராட்டுப் பெற்றவர் நமது புரட்சித் திலகம் கே. பாக்யராஜ் அவர்கள்.
சந்தோஷத்திலேயே பெரிய சந்தோஷம் அடுத்தவரை சந்தோஷப்படுத்திப் பார்ப்பதுதான் என்ற கொள்கையைப் பரவலாக்கிய ஒரு தர்ம சிந்தனையாளர், பண்பாளர் பாக்யராஜ் அவர்கள்.
ஆக்ரோஷமாகவும், மிகவும் உணர்ச்சி வசப்பட்டும், நடிகர்கள் நடித்துக் கொண்டிருந்த கால கட்டத்தில் இயல்பாக சராசரி அடுத்த வீட்டு வாலிபனாக நம் கண் முன்னே கொண்டு வந்து காண்பித்து இயல்பான நடிப்பால் நம்மையெல்லாம் கவர்ந்தவர்.
உன்னால் எதுவும் முடியும் என்று நினை ஆனால் எதைச் செய்ய முடியுமோ அதை மட்டும் செய்" இது புரட்சித் திலகம் பாக்யராஜ் ரசிகர்களுக்கு கற்றுத் தந்த வாழ்க்கைப் பாடம்.
ஒரு சிறிய தீக்குச்சிக்குள் பெரிய தீயே அடங்கி இருப்பது போல் கே. பாக்யராஜ் அவர்களிடம் நடிப்புத் திறமை, கதை, வசனம், ஜோக்கு, பாடல் போன்ற அத்தனை அம்சங்களும் ஒருங்கே அமைந்த அந்தக் காட்சிகளை வெண்திரை மூலம் வெளிச்சத்துக்கு கொண்டு வரும் தகுதி படைத்தவர்.
சினிமாவில் கதை, வசனம், நடிப்பு மூன்று மட்டுமல்ல. கதை நடக்கும் சுற்றுப்புறமும் மக்கள் மனதைத் தொடுவதாக இருக்க வேண்டும். இவை அனைத்திலும் வெற்றிக் கொடி நாட்டியவர் பாக்யராஜ் அவர்கள்.
தொலைக் காட்சியில் ரூல்ஸ் ரங்காச்சாரியில் தொடங்கி, ஜெயா தொலைக் காட்சியில் 'அப்படி போடு' தொடர்வரை வெற்றி நடைபோட்டு தனது காலடியை தமிழ் மக்கள் வாழும் இடங்களில் உள்ள எல்லார் வீடுகளிலும் நுழைந்து விட்டவர் பாக்யராஜ். பாக்யராஜ் அவர்களை, அவரது பல்வேறுபட்ட திறமைகளை வெளிக்கொணர்ந்து வெளிச்சம் போட்டுக் காட்ட முதலில் இயக்குநர் பாரதிராஜா அவர்கள் கிடைத்தார்கள்.
அவரிடம் நான் குறிப்பெடுத்துக் கொண்ட குணங்களுள் ஒன்று மிகையின்மை. கதை, நடிப்பு, கலைவாழ்க்கை, நடவடிக்கை இவற்றில் எதிலுமே ஒர மில்லிகிராம் கூட அவர் மிகை காட்டியதில்லை. தான் கதாசிரியன் மட்டுமில்லை. இயக்குநர் என்று நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்தது வென்றும் காட்டினார். யாரையும் சார்ந்திருப்பது ஒரு சாபம். சுயமாய் நிற்க முடியாதா என்று ஒரு சுடு கேள்வி பிறந்தபோது தான் தயாரிப்பாளராகவும் முடியும் என்று சாதித்துக் காட்டினார்.
முதல் மனைவி மறைந்தபோது பாக்யராஜின் இடம் வெற்றிடமாகி விடுமோ என்று காரணமுள்ள ஒரு கவலைப் பிறந்தபோது பூர்ணிமா என்ற அறிவார்ந்த பெண்மணியைத் துணைவியாக்கிக் கொண்டு நிரப்ப முடியாத இடத்தை நிரப்பிக் காட்டினார்.
தன் படத்துக்கு தானே இசையமைத்துக் கொள்ள வேண்டும் என்று தவிர்க்க முடியாத முடிவுக்கு அவர் தள்ளப்பட்ட போது அதுவரை தொட்டுப் பாத்திராத ஆர்மோனியத்தை தன் கட்டுக்குள் கொண்டு வந்தார். இந்தியாவின் விலை உயர்ந்த தற்கொலை என்று கருதப்படுகிற பத்திரிகைத் துறையிலும் நுழைந்து தன்னையும் காப்பாற்றி தன் பத்திரிகையையும் காப்பாற்றி இரவு பகலாய் புத்தி தானமும், ரத்த தானமும் செய்து உழைக்கச் சலிக்காமல் நிலைக்கச் செய்திருக்கிறார்.