நவகிரகங்களில் புதன் பகவான் புத்திகாரகன் என்று அழைக்கப்படுகிறார். சூரியனுக்கு மிக அருகாமையில் இருக்கக்கூடியவர் புதன் பகவான். இதன் காரணமாக சூரியனுடைய அருள் புதன் பகவானுக்கு அதிகமாக உள்ளது.
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்ற பொன்மொழி புதனின் சிறப்பை உணர்த்துகிறது. புத்தி கூர்மை, அறிவாற்றல், ஞானம் ஆகியவற்றை கொடுக்கக் கூடியவர் புதன்.
ஜாதகத்தில் புதன் வலிமை குறைந்து காணப்பட்டால், புதன்கிழமைகளில் எளிய முறையில் விரதம் மேற்கொண்டு வழிபட்டு வருபவர்களுக்கு, சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரங்கள்.
புதன்கிழமையானது, புதன் பகவானை வழிபட மிக உகந்த நாளாகும். மாணவர்கள் கல்வியில் சிறப்பாக விளங்க புதன்கிழமை வழிபாடு ஏற்றது.
புதன் பகவானின் அதிதேவதை ஸ்ரீமஹாவிஷ்ணு என்பதால், இந்நாளில் மகாவிஷ்ணுவை வழிபட்டு, புதன் பகவானை வழிபாடு செய்யலாம்.
புதன்கிழமை வழிபாடு செய்வதால் நரம்பு தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் விலகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
இந்நாளில் தொட்டது துலங்கும் என்பதால், புதிய தொழில் தொடங்குவது, புதியனவற்றை கற்க தொடங்குவது, வங்கி தொடர்பான விஷயங்களை தொடங்குவது போன்றவற்றை செய்யலாம்.
கோவிலுக்கு சென்று புதன் பகவானுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்வதன் மூலம் புதன் தோஷத்திலிருந்து விடுபடலாம்.
மேலும் இந்நாளில் பச்சைப்பயிறு போன்ற பயறு வகைகளை தானமாக கொடுக்கலாம். கல்வி கற்கும் மாணவர்களுக்கு பேனா, புத்தகம் போன்றவற்றை வாங்கி கொடுக்கலாம்.
புதன்கிழமையில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய செயல்கள் :
சமையலறையில் உள்ள அஞ்சறை பெட்டியில் இருக்கும் பொருட்களை புதன்கிழமை அன்று புதியதாக நிரப்பி வைத்து வந்தால் இல்லங்களில் நவதானியங்கள் எப்பொழுதும் குறையாமல் இருக்கும்.
சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் அல்லது பூஜைக்கு பயன்படுத்தும் எண்ணெய் இவற்றில் ஏதேனும் ஒன்றினை புதன்கிழமைகளில் வாங்கி வைத்து பயன்படுத்தினால் அதன்மூலம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும்.
புதிய பொருட்கள் வாங்குவது என்றாலும் புதன்கிழமையில் வாங்குங்கள். புதன்கிழமையில் பொருட்கள் வாங்குவதால் உங்கள் வீடுகளில் அதிக பொருட்கள் சேர்வதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
தங்க நகை வாங்குவதாக இருந்தாலும் புதன்கிழமை குளிகை நேரங்களில் வாங்கும் பழக்கத்தை வைத்து கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் வீட்டில் எப்பொழுதும் பொன், பொருள் குறையாமல் அதிகமாக சேர்ந்து கொண்டே இருக்கும்.
புதன்கிழமை விநாயகர் வழிபாடு :
புதன்கிழமை புதன் பகவானுக்கு மட்டுமல்லாது, விநாயகர் வழிபாட்டிற்கும் மிக உகந்த நாளாகும்.
செய்யும் செயல்களில் உள்ள காரியத்தடைகள் நீங்க, புதன்கிழமையில் விநாயகர் வழிபாடு சிறந்த பலனை தரவல்லது.
நீண்ட நாள் நிறைவேறாத காரியங்கள் அனைத்தும் புதன்கிழமை விநாயகர் வழிபாட்டால் நிச்சயம் கைகூடும்.
இந்நாளில் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி, சுண்டல், கொண்டைக்கடலை போன்றவற்றை பிரசாதமாக வழங்கலாம்.