1.சுய ஜாதகத்தில் சனி வலுப் பெற்ற சுபர்களின் தொடர்பிலிருந்து ஏழாம் பாவக தொடர்பு பெறும்பொழுது சனி சம்பந்தப்பட்ட தசா புத்திகளில் ஊராட்சி மன்ற பணிகள், உள்ளாட்சி போன்ற மக்கள் சார்ந்த பணிகள் கிடைக்க வாய்ப்புண்டு.
2.பௌர்ணமி சந்திரன் சிம்மத்தை பார்ப்பது அல்லது சிம்மத்தில் இருப்பது தொடர்புடைய தசாபுத்திகளில் ஜாதகருக்கு நிச்சயம் ஒரு உயர்வைத் தரும்.
3.சூரியன் மற்றும் சந்திரன் இணைந்த அமாவாசை அமைப்பை உச்ச குரு தொடர்பு கொள்வது யோகமான அமைப்பாகும்.
4.சுய ஜாதகத்தில் முயற்சி ஸ்தானமான மூன்றாம் பாவகத்துடன் வலுப்பெற்ற சனி சுபர்களின் தொடர்பின்றி கொள்ளும்போது ஜாதகருக்கு முயற்சி செய்வதில் பிரச்சனைகள் இருக்கும். எந்த ஒரு விஷயத்திற்கும் முயற்சி செய்யாமலே ஆசைப்படக் கூடிய எண்ணத்தை சனி ஜாதகரிடத்தில் உண்டாக்குவார்.இது போன்ற அமைப்புள்ளவர்கள் முயற்சி செய்யக்கூடிய பழக்கத்தை வலுக்கட்டாயமாக தன்னிடத்தில் ஏற்படுத்திக் கொள்வது மட்டுமே நல்லதாகும்.
5.ஜாதக ரீதியாக அந்நியத்தில் வரன் அமைவதற்கான அமைப்பு என்ன?
இலக்ன, ராசிக்கு ஏழாம் இடத்திற்கு சனி, செவ்வாய், ராகு தொடர்பு இருக்கும்பொழுது
அவற்றுடன் தொடர்புடைய தசாபுத்திகளும் நடைமுறையில் இருக்கும் பட்சத்தில்
பெரும்பாலும் அவர்களுக்கு வரன் அந்நியத்தில்தான் அமையும்.
6.சனி அஸ்தங்கம் பெறுவது நல்லதா?
மனிதனுடைய ஆயுளுக்கு காரகம் வைக்கக்கூடிய கிரகமான சனி அஸ்தங்கம் பெறுவது ஆயுள் சார்ந்த பாதிப்புகளை ஏற்படுத்தும். சனி அஸ்தங்கம் பெற்று இருக்கும்பொழுது எட்டாம் அதிபதி வலுத்திருப்பது அவசியமாகும். அல்லது லக்னாதிபதி பலம் பெற்று இருப்பதும் (அ) லக்னத்திற்கு சுபர் தொடர்பு இருப்பதும் நல்லது.
7. சனி எவ்வித சுபர் தொடர்பும் இன்றி ஏழாம் பாவகத்துடன் தொடர்பு கொள்ளும்பொழுது ஜாதகருக்கு கூட்டுத்தொழில் பார்ட்னர்ஷிப் சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஒத்துவராது.
8. எந்தத் துறையாக இருந்தாலும் தங்கள் துறை சார்ந்த விஷயங்களில் நிபுணத்துவம் பெற வேண்டும் என நினைக்கக் கூடியவர்கள் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோவிலுக்கு தங்களது பிறந்த நட்சத்திர தினமன்று சென்று வழிபட்டு வருவது நல்லது. மகாகவி பாரதியார் அனுதினமும் இங்கே வீற்றிற்கும் பார்த்தசாரதி பெருமாளை வழிபடக்கூடிய வழக்கம் உடையவராக இருந்தார். அவர் எழுதிய கண்ணன்பாட்டு முழுவதும் இங்கே வீற்றிருக்கும் கண்ணனை பாடு பொருளாக கொண்டே எழுதப்பட்டது.
இது மட்டுமின்றி தங்களுடைய துறைகளில் தங்களுடைய தனிப்பட்ட திறமைகளை நிருபித்த கணிதமேதை ராமானுஜம், காமராஜரின் குரு அரசியல் மேதை சத்தியமூர்த்தி, தத்துவமேதை விவேகானந்தர், சங்கீத மேதை தியாகராஜ சுவாமிகள் வழிபட்ட கோவில் இத்திருத்தலமாகும்.
9.தம்பதிகளிடையே ஒற்றுமை உணர்வு ஏற்படுவதற்கு வழிபட வேண்டிய கோவில் ?
மணவாழ்க்கையில் அதிகப்படியான கருத்து வேறுபாடுகளை சந்திக்கும் தம்பதிகள் தங்களுக்கிடையே ஒற்றுமை உணர்வு அதிகரிப்பதற்கு வருடம் ஒரு முறையோ அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறையோ புதுச்சேரியில் முத்தியால்பேட்டை என்ற ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் ஆலயம் சென்று வழிபட்டு வருவது நல்லதாகும்.பொதுவாக தாயார் மட்டுமே ஹயக்ரீவரை தழுவுவது போல் மற்ற இடங்களில் சிலைகள் இருக்கும்.ஆனால் இந்த ஆலயத்தில் ஹயக்ரீவரின் இடது கரம் தாயாரையும், தாயாரின் வலது கரம் ஹயக்ரீவரையும் தழுவுவதுபோல் சிலை அமைக்கப்பட்டிருக்கும். தம்பதிகள் ஒன்றாக வந்து இங்கு வழிபடும் போது தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும் என்பது நம்பிக்கையாகும்.
10.சனிக்கு காரகோ பாவ நாஸ்தி அமைப்பு உண்டா?
உயிர் காரகத்துவ உறவுகளை குறிக்கும் கிரகங்களுக்கு மட்டுமே காரகோ பாவ நாஸ்தி அமைப்பு உண்டு. சனிக்கு கிடையாது.