Breaking News :

Wednesday, February 05
.

வியாதிகள்.. வரமா அல்லது சாபமா?


உடலை நேசிப்பவருக்கு வியாதி ஒரு சாபமே.. ஏனெனில், முதலில் நாக்கைக் கட்டுப் படுத்தவேண்டும்.. பிறகு ஆசையை அடக்கவேண்டும்.

இவையிரண்டும் உடல் மேல் ஆசை உள்ளவரை மிகவும் கஷ்டமான காரியம்.. ஆனால் பகவானையும், பக்தியையும் நேசிப்பவருக்கு வியாதி ஒரு ஆசிர்வாதமே.. ஸ்ரீ நாராயண பட்டத்திரிக்கு பக்கவாதம் என்னும் வியாதியே அவரை நாராயணீயம் எழுத வைத்தது. வாசுதேவ கோஷுக்கு அவரின் தொழு நோயே அவருக்கு ஸ்ரீ க்ருஷ்ண சைதன்யரின்  தரிசனத்தை பெற்றுத் தந்தது. ஸ்ரீ நாராயண தீர்த்தருக்கு அவரின் வயிற்று வலியே வராஹ தரிசனத்தையும், க்ருஷ்ண லீலா தரங்கிணியையும் தந்தது.

ஸ்ரீ சனாதன கோஸ்வாமிக்கு அவரின் உடல் புண்களே அவருக்கு ஸ்ரீ சைதன்யரின் பரிபூரண ப்ரேமையைக் கொடுத்தது.. பீஷ்ம பிதாமகருக்கு அவரின் உடலில் தைத்த அம்புகளின் வலியே அவரை
சஹஸ்ரநாமத்தை சொல்ல வைத்தது.. மாரனேரி நம்பிக்கு ராஜபிளவை நோயே அவருக்கு ஆளவந்தாரின் அனுக்ரஹத்தையும் மோக்ஷத்தையும் சாபல்யமாக்கியது.

இப்படி பல மஹாத்மாக்களின் வாழ்வில் வியாதிகளே மிகப்பெரிய மாற்றத்தையும், பக்குவத்தையும் கொண்டு வந்திருக்கிறது . புண்ணிய நதிகளான கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகள் கூட , மக்கள் நீராடியதால் அவர்களின் பாவக்கறை தங்கள் மீது படிந்துள்ளதைப் போக்க சிவபெருமானின் அருளாசிப்படி துலா மாதத்தில் - ஐப்பசி மாதத்தில் - காவிரியில் நீராடி தங்களைப் புனிதப்படுத்திக் கொண்டன என புராணங்கள் கூறுகின்றன. அப்படியானால் மஹாத்மாக்களும் கூட தங்களை புனிதப்படுத்திக் கொண்டிருக்கலாம்.

அதற்காக நீங்கள் வியாதிகளை வரவேற்க வேண்டாம்.. ஆனால் வியாதிகளில் துவண்டு போகாமலிருக்க வேண்டும். நீங்கள் வியாதியால் வாடும் வெறும் உடலல்ல.. நீங்கள் வியாதியே இல்லாத சுத்தமான ஆத்மா.

வியாதிகள் உங்கள் வாழ்வை தீர்மானிப்பதில்லை.. பக்தியே உங்கள் வாழ்வை நிர்ணயிக்கிறது. உடலை கவனித்துக் கொள்ளுங்கள்.

வியாதி வராமல் காத்துக் கொள்ளுங்கள்.. வியாதி வந்தால் சரி செய்து கொள்ளுங்கள்.. வியாதிக்காக மனமுடைந்து போகாதீர்கள்.. வியாதியில் வாழ்வை வெறுக்காதீர்கள்.. வியாதியை வெல்ல முயற்சி செய்யுங்கள்.

வியாதியில்லாமல் நீங்கள் வாழ என்றும் பகவானின் ஆசீர்வாதங்கள் உண்டு.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.