Breaking News :

Friday, May 09
.

மகா பெரியவா நம்பி வந்தவரை கைவிட மாட்டார்!


காருண்ய மூர்த்தியான மகா பெரியவா தன்னை நம்பி வந்தவரை எப்போதும் கைவிடமாட்டார்.

காணாமல் போன பையன், திரும்பி வந்த அதிசயம்.

(பையன் யார் தெரியுமா? இன்று பிரபல பாடகராக இருக்கும், திரு நெய்வேலி சந்தான கோபாலன்)

கட்டுரையாளர்- ரா.வேங்கடசாமி
புத்தகம்-காஞ்சி மகானின் கருணை உள்ளம்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

நெய்வேலி மகாலிங்கம், மகாபெரியவாளின் அத்யந்த பக்தரில் ஒருவர். அவரிடம் ஒருவர் வருகிறார்.

"தன் மகன் சென்னையில் படித்துக் கொண்டு இருந்தவன், காணாமற் போய்விட்டதாகவும், அவன் திரும்பிவர வேண்டும் என்று காஞ்சி மகானைப் பிரார்த்திக்க வேண்டும் என்றும், மகாலிங்கம் தரிசனத்திற்குப் போகும்போது, தன்னை அழைத்துக் கொண்டு போக வேண்டும்" என்று வேண்டுகோள் விடுக்கிறார்.

மகாலிங்கத்திற்கோ, ஒன்றும் புரியவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்புதான் சகாராவில் தரிசனம் செய்துவிட்டு வந்திருக்கும் நிலையில், திரும்பவும் அவ்வளவு தூரம் போக வேண்டுமே என்கிற தயக்கம்.

"பாவம், அவரை அழைத்துக் கொண்டு போய் வாருங்கள்" என்று மகாலிங்கத்தின் மனைவி, அவரை அனுப்பி வைத்தார்.

நெய்வேலியிலிருந்து கிளம்பி சகாராவை அவர்கள் அடைந்தபோது விடியற்காலை மூன்று மணி. அங்கிருந்து சங்கர மடத்திற்கு வந்தவர்கள், அங்கு மூன்று நாட்களாக மகாராஜபுரம் சந்தானம், மகானின் தரிசனத்திற்காக .காத்துக் கொண்டு இருப்பது தெரிந்தது. அவருக்கே, மகானைப் பார்க்க முடியவில்லை என்றால்,தன் நிலை என்னவாகும் என்று மகாலிங்கத்தின் நண்பர் கவலைப்பட, "கவலையை விடுங்கள் காருண்ய மூர்த்தியான மகா பெரியவா தன்னை நம்பி வந்தவரை எப்போதும் கைவிடமாட்டார்" என்று ஆறுதல் சொன்னார் மகாலிங்கம்.

"கதவு திறக்கும். தரிசனம் கிடைக்கும்" என்று மகாலிங்கம் சொல்லிக் கொண்டே இருந்தார். தன் நண்பருக்கு ஆறுதலாக.

மகாலிங்கம் சொன்னதைப் போல, ஜன்னல் திறக்கப்பட, மகான் தரிசனம் தர, பையனின் அப்பா, தன் மகனைக் காணவில்லையென கதறி அழுதார்.பையனின் புகைப்படம் ஒன்றையும் மகானிடம் காட்டினார்.

அந்த தெய்வம் தனது கருணை பார்வையில், மகாலிங்கத்தின் நண்பரையும், சந்தானத்தையும் மாறி,மாறி நோக்கினார். அப்போது விடியற்காலை நான்கரை மணி. தன் பங்குக்கு மகாலிங்கமும் தனது நண்பரின் வேதனையை மகானிடம் கோடிட்டுக் காட்டினார். புகைப்படத்தை உற்றுப் பார்த்த அந்தக் கிருபாநிதி,தன் திருக்கரத்தை உயர்த்தி அனுக்கிரகம் புரிந்தார்.

மகாலிங்கத்திற்கு நம்பிக்கை வந்துவிட...

"நீங்கள் நெய்வேலிக்குத் திரும்பலாம்.மகானின் அருளாசியால் உங்கள் பையன் நிச்சயம் கிடைத்து விடுவான். பையன் கிடைத்தவுடன், இங்கே மடத்திற்கு தந்தியடியுங்கள்" என்று சொல்லி நண்பரை அனுப்பி வைத்தார்.

அவர் போன சில நாட்களில் பையன் திரும்பி விட்டதாகத் தந்தி வந்தது. அவனைப் பற்றி விபரங்களுடன். பையன் பல இடங்களைச் சுற்றி விட்டு,மந்திராலயம் சென்று இருக்கிறான். அங்கே காலையில் துங்கபத்திரா நதியில் அவன் குளிக்கும்போது அவன் மனதில் ஓர் உள்ளொளி, " நீ உடனே வீட்டிற்குச் செல்" என்று சொல்லியதாம்.

எந்த விடியற்காலையில் மகான், அவன் தந்தைக்கு ஆசி வழங்கினாரோ, அதே நேரத்தில் தான் பையன் மனதிலும் உள்ளொளி.

மகா பெரியவா, சில வினாடிகள் இங்கே புகைப்படத்தை தன் அருட்பார்வையால் நோக்க, எங்கோ மந்திராலயத்தில் பையனுக்கு அது உணரப்பட்டு, அவன் வீட்டிற்குத் திரும்பி விட்டான்.

அன்று பையனாக இருந்த அவன், இன்று நல்ல பாடகராய்த் திகழும்,நெய்வேலி சந்தான கோபாலன் தான் அது.

அருட்செல்வர்,'நெய்வேலி மகாலிங்கம்' சொன்ன தகவல் இது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.

News Hub