அவர்களின் இயற்பெயர் ஆதப்பன் ஆகும்.இவர் நகரத்தார் குலத்தில் பிறந்தவர்.
காரைக்குடி அருகில் இருக்கும் கோவிலூர் மடாலயத்தில் ஸ்ரீ முத்துராமலிங்க சுவாமிகளின் சீடராக இருந்துள்ளார்.
இளமையிலேயே இறை வழியில் அதிக வேட்கைகொண்டு தமது குருவிடம் பிரம்மோபதேசம் பெற்று தம் குருபணியும் இறைபணியும் தொடர்ந்து வந்துள்ளார்.
கோவிலூர் ஸ்ரீ முத்துராமலிங்க சுவாமிகளை தரிசிக்க வந்த வேம்பத்தூர்ப் புலவர்கள், 'சிவரகசியம்' என்ற நூலில் கூறியவாறு 25 மூர்த்தம் (விக்ரகங்கள் ) வைப்பது சிறந்த சிவப்பணி என்று கூறியுள்ளனர்.
அதைக் கேட்டருளிய ஸ்ரீ முத்துராமலிங்க சுவாமிகள், அச்சிவப் பணியை மதுரையம்பதியில் செய்ய வேண்டும் என்று திருவுளம்கொண்டு அனைத்துப் புலவர்களிடமும், "இது என்ன பிரமாதம்? நமது குட்டையனை அனுப்பினாலும் செய்துவிடுவான்." என்று கூறித் தம் சீடர் ஶ்ரீ குட்டைய சுவாமியை அழைத்து அதனை செய்ய பணித்திருக்கிறார்கள்.
தமது குருவின் கட்டளைபடி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருபத்தைந்து மூர்த்திகள் வைக்கும் பணியை சிரமேற்கொண்டு ,மதுரை தெற்குவெளிவீதியில் ஸ்ரீ குட்டைய சுவாமிகள் மடாலயம் நிறுவி ,அனைத்து வேலைகளையும் செய்துவந்திருக்கிறார்கள்.
சுந்தரேஸ்வரர் சன்னதி மற்றும் கொடிமரத்தில் அருகில் இருக்கும் நந்தி மண்டபம் அதில் உள்ள அற்புதமான வேலைபாடு எல்லாம் பெரும் பொருட்செலவில் அய்யா அவர்கள் அப்பொழுதே உருவாக்கி இருக்கிறார்கள்.
அய்யா அவர்கள் நந்தி மண்டபத்தில் விசித்திரக்கல் விஷேட சித்திரவேலை,
அம்மை, அப்பர் மூலஸ்தான விமானங்கட்குப் பொன் தகடு வேய்தல், கொடி மரத்திற்குப் பொற்கவசம் அமைத்தல், சுவாமி கோயில் இரண்டாம் பிராகாரத்தில் கல் தள வரிசை அமைத்தல், ஆடி வீதி முன்புறம் கல் தள வரிசை அமைத்தல் முதலிய திருப்பணிகளைச்
செய்து வந்திருக்கிறார்கள்.
சுவாமி சந்நிதியில் கொடிமரத்தைச் சுற்றி சிற்பக் கலை எழிலுடன் அமைந்துள்ள மண்டபமே நந்தி மண்டபம்.
இப்பொழுது இம்மண்டபத்தைக் கம்பத்தடி மண்டபம் என்று அழைக்கிறார்கள்.
இம்மண்டபத்தையும் ஶ்ரீ குட்டைய சுவாமிகளே உருவாக்கி இருக்கிறார்கள்.
இந்த கம்பத்தடி மண்டபத்தில் இருக்கும் கீழ்கண்ட 25 விக்ரகங்கள் ஶ்ரீ குட்டைய சுவாமிகள் அவர்களால் அமைக்கபட்டதாகும்.
1. கயிலாசரூடர் ,
2. சந்திரசேகரர்,
3.இடபாந்திகர்,
4.இலிங்கோத்பவர்,
5.காமதகனர்,
6. நடராசர்,
7.சுகாசனர்,
8.காலசம்மாரர்,
9.மார்க்கண்டேயர்,
10.சோமசுந்தரர்,
11.கலியாண சுந்தரர்,
12.திரிபுராந்தர்,
13.சங்கர நாராயணர்,
14.அர்த்த நாரீசுவரர்,
15.இடபாரூடர்,
16.ஏகபாத மூர்த்தி,
17.சக்ரதாரர்,
18.சலந்தரானுகிரஹர், 19.தக்ஷிணாமூர்த்தி,
20.கஜசம்ஹாரர், 21.சண்டேசானுகிரஹர், 22.சோமசுந்தரர்,
23.கிராதார்சுனர்,
24.உருத்திரர்,
25.பிக்ஷாடனர்
ஶ்ரீ குட்டைய சுவாமிகள் வேதாந்த நூல்களில் விற்பன்னர் ஆவார்.
அவர் மதுரைத் திருமடத்தில் இருந்தபோது பல அன்பர்களுக்கு பிரம்ம வித்தையை உபதேசித்துக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
அய்யாவின் காலம் காலயுக்தி வருடம், கி.பி.1847 முதல் ஆங்கிரச வருடம், கி.பி. 1872 வரை ஆகும்.
அய்யா அவர்கள் ஆங்கிரசவருடம் ஆவணி 5 ஆம் நாள் திங்கட்கிழமை, கிருஷ்ண பக்ஷம், பிரதமை திதி, சதய நக்ஷத்திரத்தில் விதேக கைவல்லியமாகிய பிரம்மப் பிராப்தி அடைந்துள்ளார்கள்.
ஶ்ரீ மீனாக்ஷி அம்பாளுக்கு நாள் தோறும் நடைபெறும் அர்த்தசாமக் கட்டளையில் மூக்குத்தி மாலை ஶ்ரீ குட்டைய சுவாமிகள் மடாலயத்திலிருந்து அனுப்பி அணிவிக்கப்படுகிறது.
மீனாட்சி அம்மனே ஆதப்பன் ஐயாவை "குட்டையா" என்று செல்லமாக அழைத்ததாகவும்,
அதனால் அய்யாவிற்கு"குட்டையா" எனும் பெயர் ஏற்பட்டது என்ற செவிவழி தகவல்கள் கிடைக்கிறது.
ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் ஜீவசமாதி பற்றிய விபரங்கள்:
ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் அவர்களின் ஜீவசமாதி மதுரை தெற்கு வெளி வீதியில் இருக்கிறது.
மதுரை ,தெற்கு வெளி வீதியில் (தெற்கு வாசலில் இருந்து கிட்டத்தட்ட ஒரு ஐம்பது அடி தூரத்தில் இடது புறத்தில் பெரியார் செல்லும் வழியில்) சாலையின் இடது புறம் அய்யாவின் பெயர் பொறித்த ஒரு சிறிய பலகை அய்யாவின் சமாதிக்கு செல்லும் வழியை காண்பிக்கின்றது.
உள்ளே சென்றால் சிறிய சந்துபோன்று நீண்டு செல்கிறது.
வெளியில் கடைகள் ஆக்கிரமிப்பும் வாகனங்களின் சத்தமும் இருந்தாலும்,உள்ளே முற்றிலும் வேறுபட்டு அமைதியாக இருக்கிறது.
செட்டிநாட்டு அமைப்பில் வீடும்,அதன் தாழ்வாரமும் ,திண்ணையும் நம்மை செட்டிநாட்டுகே அழைத்துச்செல்கிறது.
உள்ளே அய்யாவின் ஜீவசமாதியும் மற்றும் அய்யாவின் சீடர்களின் சமாதியும் இருக்கிறது.
அய்யாவின் சமாதி அருகே கண்களை மூடி அமர்ந்தால்,அந்த இடம் மெழுவதும் காந்த ஆற்றல் அலைகள் அதிகம் நிறைந்துள்ளதை உணர முடிகிறது.
அய்யாவின் சமாதிக்கு யார் வந்து வேண்டி வழிபட்டாலும், அவர் தம் வேண்டுதலுக்கு ஏதோ ஒரு ரூபத்தில் அல்லது ஏதோ ஒரு நிகழ்வில் அவர் உணரும் வண்ணம் வேண்டுதல் எப்போது நடக்கும் என்பதை தெரிவித்து விடுகிறார்கள்.
ஆனால் இதற்கு பொறுமையும்,அன்பும் மிக அவசியமாகிறது.
அய்யாவின் சமாதி இருக்கும் இடம் அதிர்வலைகளால் நிரம்பி வழிகிறது.
இங்கு மனதில் உச்சரிக்கும் ஒவ்வொரு அட்சரமும் மிக அற்புதமாக மிளிர்கிறது.
இங்கு ஸ்ரீ லலிதாசகஸ்ரநாம பாராயணம் சொல்வது மிக சிறந்தது.
ஸ்ரீ லலிதாசகஸ்ரநாம பாராயணத்தை இங்கு உச்சரிக்கும் போது ஒவ்வொரு வார்த்தையும் பலமடங்கு ஆற்றல் பெருக்கம் அடைவதை நன்கு உணரமுடியும்.
மதுரைக்கு செல்லும் பொழுது ,அய்யாவின் அற்புத அருள் அலை ஆற்றல் நிறைந்து வீசிக்கொண்டிருக்கும் சமாதிக்கு சென்று தரிசித்து விட்டு பிறகு ஸ்ரீமீனாட்சி அம்மன் ஆலயத்திலுள்ள சுந்தரேஸ்வரர் சன்னதிக்கு அருகில் இருக்கும் நந்தி மண்டபம் சென்று, அய்யா அவர்களால் அமைக்கப்பட்ட ஒவ்வொரு சிற்பத்தின் எழில் மிகுந்த அமைப்பையும் கண்டு வியந்து அதன் தன்மையையும் ,அதற்கு மூல காரணமான அய்யாவையும் அவர் உழைப்பையும் உணர்ந்து பாருங்கள் நண்பர்களே!!