Breaking News :

Tuesday, April 22
.

திருக்குறள் கதைகள் - குறள் 23


அசோக், குமார் இருவரும் ஒரே பள்ளியில்தான் படித்தார்கள். அசோக் படிப்பில் புலி. பள்ளி இறுதித்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதல் மாணவனாகத் தேறியவன். குமாரும் ஓரளவுக்கு நன்றாகப் படிப்பவன்தான். ஆனால் அசோக் அளவுக்கு இல்லை.

இருவருக்கும் ஒரே கல்லூரியில் இடம் கிடைத்தது. இருவரும் விடுதியில் தங்கிக் கல்லூரிப் படிப்பைத் தொடங்கினர்.

இருவரின் பெற்றோரும் அறிமுகமானவர்கள்தான். குமாரின் அப்பா அசோக்கிடம், "நீதாம்ப்பா என் பையனைப் பாத்துக்கணும்" என்றார்.

கல்லூரியில் சேர்ந்ததும் அசோக்கிடம் சில மாற்றங்கள் ஏற்பட்டன. பெற்றோரின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு விடுதி வாழ்க்கை அளித்த சுதந்திரத்தை அனுபவிக்கத் துவங்கிய உற்சாகத்தில் அசோக் சற்று எல்லை மீறிப் போனான். புதிய நண்பர்களுடன் சேர்ந்து சினிமா, ஊர் சுற்றுதல் என்று ஆரம்பித்த பழக்கம் சிகரெட், மது என்று விரிந்தது.

குமார் அசோக்கைப் பலமுறை எச்சரித்தும் அவன் காதில் போட்டுக் கொள்ளவில்லை. "இதெல்லாம் சின்ன விஷயம்டா. இதனால எல்லாம் யாரும் கெட்டுப் போயிட மாட்டாங்க. இந்த வயசுல இந்த ஜாலி கூட இல்லேன்னா அப்புறம் வாழ்க்கையை அனுபவிக்கவே முடியாது. நீ ஏன் இப்படிச் சாமியார் மாதிரி இருக்கேன்னு எனக்குப் புரியல!" என்றான்.

விடுமுறையில் ஊருக்கு வந்தபோது குமார் தன் அப்பாவிடம் அசோக்கின் புதிய பழக்கங்கள் பற்றித் தயக்கத்துடன் சொன்னான். அவர் அதிர்ச்சி அடையவில்லை. "இந்த வயசுல இது மாதிரி ஆசைகள் எல்லாம் வரும். நாமதான் எது நல்லது எது கெட்டதுன்னு சீர்தூக்கிப் பாத்து நடந்துக்கணும். உனக்கு அந்தப் பக்குவம் இருக்கு. அசோக்குக்கு இல்லாம போச்சே!" என்றார் வருத்தத்துடன். "இது தெரியாம, அசோக்தான் பக்குவமா சிந்திப்பான்னு நெனச்சு அவன்கிட்ட  உன்னைப் பாத்துக்கச் சொல்லிச் சொன்னேன்!"

"அசோக் அப்பாகிட்ட இதைப்பத்திச் சொல்லப் போறீங்களா அப்பா?"

"சொல்லணும்தான். ஆனா அவருக்கும் எனக்கும் ஓரளவுக்குத்தான் பழக்கம். அவரு தன் பிள்ளை நல்லாப் படிக்கிறதைப் பத்திப் பெருமையோட இருக்காரு. இப்ப நான் போய் இதைச் சொன்னா, பொறாமையால சொல்றேன்னு கூட நெனச்சுக்கலாம். எப்படியும் கொஞ்ச நாள்ள அவங்களுக்குத் தானாத் தெரிய வரும். நான் எதுக்கு இப்ப சொல்லி அவங்க சந்தோஷத்தையும் கெடுத்து அவங்களோட நமக்கு இருக்கிற நல்ல உறவையும் கெடுத்துக்கணும்?"

அசோக்கின் பெற்றோருக்கு அசோக்கின் புதிய பழக்கங்கள் பற்றிய விவரம் விரைவிலேயே தெரிய வந்தது. அசோக்கின் அறையில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், உடனே வந்து அவனை விடுதியிலிருந்து அழைத்துச் செல்லும்படி அசோக்கின் அப்பாவுக்குக் கல்லூரி முதல்வரிடமிருந்து ஃபோன் வந்தது.

குறள் 23:

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.

பொருள்:
நல்லது தீயது, இம்மை மறுமை, பிறப்பு வீடு (மோட்சம்) போன்ற இரு வகை நிலைகளை உணர்ந்து (சரியானதைத் தேர்ந்தெடுத்து)  அறவழி நடப்பவர்களின் பெருமை இவ்வுலகில் மேலோங்கி இருக்கும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.