மாகாபாரத்தில் பல கிளைக்கதைகள் உண்டு. அதில் வரும் ஒரு கிளைக்கதையே இந்த ஆரவல்லி, சூரவல்லி கதை. என்னுடைய சின்னவயசுல என் தாத்தா இந்தக் கதையெல்லாம் சொல்லுவாரு. அவர் காலத்துல தெருக்கூத்து , தோல்பாவை கூத்துகலிலெல்லாம் இந்த ஆரவல்லி, சூரவல்லி கதை மிகப்பிரதானமாக இடம்பெறுமாம். நம்மிடையே இப்பொழுது நம் தலைமுறையினருக்கு பெயரளவில் கூட தெரிந்திராத ஆரவல்லி சூரவல்லியின் வீரசாகசங்களை தாத்தா சொன்னதையும், பரிமேலழகர் எழுதிய உரையையும் வைத்து பார்க்கலாம்...
🥁
பஞ்சபாண்டவர்களுக்கும், துரியோதனனுக்கும் சண்டை மூள்வதற்கு முன்பே தருமனின் தலைமையில் அவர்கள் நாடாண்ட காலத்தில் நடைபெற்றதாக சொல்லப்படுது. மகாபாரதத்தின் கிளைக்கதையில் வரும் இந்த கதை ஆரவல்லி சூரவல்லி, வீரவல்லி உள்ளிட்ட ஏழு சகோதரிமார்களை பற்றியது. எழுவரில் ஆரவல்லியும், சூரவல்லியுமே முக்கியமானவர்கள். அவர்களோடு அழகான வீரவல்லி என மூவரைப் பற்றியே எல்லா குறிப்புகளிலும் இருக்குது. ஆனா, அவர்களுக்கு இளையவர்களான முத்துசாலை, மிந்தசாலை, நாகதாளி மேலும் ஒருவர் (பெயர் சரியாக நினைவில் இல்லை). மூத்த சகோதரிகளான மூவருக்கும் இணையாக வீர தீர, மந்திர, தந்திரக்கலைகளில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள். அவர்களை எதிர்த்தவர்கள் அனைவரும் தோல்வி கண்டனர். எல்லா நட்டு அரசர்களையும் வெற்றிக்கொண்டு அவர்களை அடிமையாக்கி வேலை வாங்கினர். அவர்கள் கொட்டத்தை அடக்க கிருஷ்ண பரமாத்மா தருமனின் சபையில் ஒருவேண்டுகோளை வைத்தார். கொடிய எண்ணங்கொண்ட அந்த சகோதரிகளை அடக்கி, அவர்கள் நாட்டில் அடிமைகளாக இருக்கும் அரசர்களையும், இளவரசர்களையும் மீட்கவேண்டுமென வேண்டினார். இதைக்கேட்ட தருமன் கிருஷ்ணனிடம், அந்த சகோதரிகள் நமக்கு எதிராக எதுவும் செய்யவில்லை. பந்தயமும் கட்டவில்லை. அப்படியிருக்கையில் நாம் ஏன் வீணாக அவர்களிடம் சண்டைக்கு போகவேண்டும்? அது தெருவில் வீணே கிடக்கும் வாளை எடுத்து, தன் கையை கிழித்துக் கொள்வதற்கு சமமாகுமே என தருமன் கூறினான்.
அப்பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களை விடுவிக்க நாம்தான் முயற்சியெடுக்கவேண்டும் என கிருஷ்ணன் சொல்ல, பீமனும், ஆரவல்லி சூரவல்லி இருந்த நெல்லூர் பட்டணத்திற்கு செல்வதாகச் சொல்லி அண்ணனை வணங்கி நின்றான். அப்பொழுது தருமன், பீமனிடம் ஆரவல்லி, சூரவல்லி இருந்த நெல்லூர் பட்டணத்தைப் பற்றியும் ஆரவல்லி சகோதரிகளை பற்றியும் பீமனிடம் கூறினான். மந்திர, தந்திர வித்தைகளில் ஆரவல்லி, சூரவல்லியை வெல்ல இந்த உலகத்தில் யாருமில்லை. சூனிய வித்தைகளில் கைதேர்ந்த அவர்களை எதிர்த்த ராஜாக்களெல்லாம் அழிந்து போனார்கள். மீதி உள்ளவர்கள்லாம் சிறைபிடிக்கப்பட்டார்கள். அதனால், அந்த நாட்டிற்கு யாரும் செல்வதில்லை என்று தருமன் கூறினான். இதைக்கேட்டு வெகுண்டெழுந்த பீமன். அண்ணா! நம்மைவிட அவர்கள் பராக்கிரமசாலிகளா அண்ணா? பராக்கிரமசாலிகள் என்று நீங்கள் சொல்லும் அவர்களால் இந்த காயம் அழிந்து கயிலாயம் சென்றாலும் பரவாயில்லை நான் முன்வைத்த காலை பின்வைக்கமாட்டேன் ,என்றுக்கூறி நெல்லூர் பட்டணத்திற்கு புறப்பட்டான் .
பீமன், ஆரவல்லி தேசத்திற்கு வந்துக் கொண்டுருப்பதைக்கண்ட, நாரதர் உடனே ஆரவல்லி நாட்டிற்கு விரைந்துச்சென்று ஆரவல்லி! உன் கொட்டமெல்லாம் அடங்கப்போகின்றது. உன்னை வெல்ல தருமனின் தம்பி மதயானைப் போன்ற பீமன் வந்துக் கொண்டிருக்கிறான் எனச்சொன்னார். அதைக்கேட்டு நகைத்த ஆரவல்லி, அதையும்தான் பார்த்து விடுவோமென அலட்சியமாய் கூறியதோடு, நம் நகருக்குள் புதியதாக யாரும் வந்திருக்கிறார்களா என கண்காணிக்க தன் தங்கையருக்கும், தோழியருக்கும் உத்தரவிட்டாள். அப்பொழுது கார்மேகங்கள் ஒன்றாய் சூழ்ந்ததுப்போல் கர்ஜனைக் கொண்டு பீமன் புயலென வந்து கொண்டிருந்தான். உடனே ஆரவல்லி தன்னுடைய பெண்படைகளை உருமாறும் மந்திரப்பொடிகளை கொண்டு மாயவித்தைகள் செய்து கரடிகளாக உருமாற்றி போர்செய்யலாகினர்.
முக்கியமான ஒரு விசயத்தை சொல்ல மறந்துட்டேனே! ஆரவல்லி சகோதரிகளுக்கு ஆண்வாடையே ஆகாது. அதனால், அரண்மனை முழுக்க மந்திரி, சமையல்கலைஞர், சேவகம், என அனைத்து பணிகளுக்கும் பெண்பணியாளர்களே! போர்ப்டையில்கூட முழுக்க முழுக்க பெண்கள்தான். வந்த கரடியை தன்னுடைய கதாயுதத்தினால் தாக்கி அழித்துவிட்டு, வெற்றிக்களிப்போடு நிற்கும்போது, ஆரவல்லியின் சூன்யப்படைகள் உடனே கோட்டைக்குள் சென்று மந்திரப்பெட்டிகளை எடுத்துவந்து மந்திரங்களை ஓதினார்கள். அதிலிருந்து பயங்கர வெறியுடன் வேங்கைகள் சீறிப்பாய்ந்து வந்தன. அதனைக்கண்ட பீமன், ஐயோ! அண்ணனுடைய சொல்கேளாமல் தனியே வந்து மாட்டிகொண்டோமே! இந்த வேங்கைகளை எப்படி எதிர்கொள்வது என சிந்திக்கலாயினான்
சரி என்னவானாலும் பரவாயில்லை. முன்வைத்த காலை பின்வைக்க வேண்டாமென வேங்கைகளுடன் மோத ஆரம்பித்தான். கஷ்டப்பட்டு வேங்கைகளை எதிர்கொண்டபின்
பயந்தோடிய அவை ஆரவல்லியிடம் தஞ்சமடைந்தன. கோபங்கொண்ட ஆரவல்லி நம் மந்திர தந்திரத்துக்கு அடிப்படியாத ஒருவனா?! எனத்திகைத்து, இன்னும் கடுமையான மந்திரங்களை உச்சரித்து, தேவலோகத்திலும் காணக்கிடைக்காத அழகான பெண்களை உருவாக்கி பீமனுக்கு எதிராக யுத்தம் செய்ய அனுப்பினாள். வந்த பெண்களின் அழகைக்கண்டு, மதிமயங்கி நின்றான் பீமன். நாகலோகத்திலும் இந்திரலோகத்திலும் இதுப்போன்ற அழகான பெண்கள் உண்டோ என வியந்து நோக்கிநின்றான். ஆனால் அவர்கள் வாளுடன் யுத்தத்திற்கு வந்த மாயகன்னியர்கள் என்று பின் தெளிந்து, அவர்களுடன் யுத்தம் செய்து கொன்று வீசலானான். தப்பிப்பிழைத்து மீதி இருந்தோர், ஆரவல்லியை நோக்கி தஞ்சம் புகுந்தனர். நெல்லூரையே நிர்மூலமாக்கிடுவான்போல எனக்கூறி ஆரவல்லியை வணங்கி நின்றனர். சரி, இனி அவனை தந்திரமாகத்தான் வெல்லவேண்டுமென்று ஆரவல்லி முடிவெடுத்து பீமனை பந்தயத்துக்கு வருமாறு சவால் விட்டனுப்பினாள்.
முதலில் எங்களுடன் மோதும்முன் எங்கள் சேவலுடன் உன் சவாலை காட்டு என ஆரவல்லி கொக்கரித்து, தன் தங்கை சூரவல்லியிடம் நமது சேவலை கொண்டுவா என கர்ஜித்தாள். அப்பொழுது அவள் கொண்டுவந்த இரு சேவலில் ஒன்றை தன்னிடம் வைத்துக்கொண்டு, இன்னொன்றை பீமனிடமும் தந்தாள். இரு சேவலுக்கும் போட்டி வைப்போமென சொல்லி, தன்னிடமிருந்த மாயசேவலின்முன், பதினோரு கலம் பச்சரிசிவைக்க அதை ஒரே மூச்சில் தின்று தீர்த்தது . அதைக்கண்டு சந்தோஷப்பட்ட ஆரவல்லி அதைத் தடவிக்கொடுத்து ஏதோவொரு பானத்தினை ஊட்டிவிட்டாள். இதை கண்ட பீமன் தன்னுடைய சேவலின்முன், சிறுசம்பா அரிசியெடுத்து குவித்து வைக்க , பீமனது சேவல் அதை திங்க ஆரம்பிக்கும்போது ஆரவல்லியினுடைய சேவல் பாற்கடலை கடைந்தபோது எழுந்த அலையின் ஓசையைப்போல் பேரிரைச்சலுடன் கூவ ஆரம்பித்தது. அதைக்கேட்டு அரசவையே நடுநடுங்கிற்று. அத்தோடு பீமனிடமிருந்த சேவல், கதிகலங்கி மயங்கி விழுந்தது. இதைக்கண்ட பீமன், அந்த சேவலை தூக்கி, மயக்கம் தெளிவித்து தூக்கிப்பிடிது நிறுத்தி வைத்தான். அதைப்பார்த்த ஆரவல்லி ,எள்ளிநகையாடினாள். எங்களை வந்து வெற்றிக்கொண்டு யாரும் சென்றதில்லை. மாண்டவர் போக மீதி உள்ளவர்கள் எங்கள் சிறையில் அடிமைகளாக இருக்கின்றார்கள். எங்களுக்கே சவால் விடுகிறாயா என எள்ளிநகையாடினாள்....
ஆண்களை வம்புக்கு இழுக்க அவர்களிடமிருந்த துருப்பு சீட்டு இளைய சகோதரியான அலங்காரவல்லி என்னும் பல்வரிசை. (இவளை ஆரவல்லியின் மகள்ன்னும் சொல்வாங்க. ஆண்வாடையே ஆகாத ஆரவல்லிக்கு எப்படி குழந்தைன்னு புரில. ஒருவேளை தத்துப்பெண்ணாய் இருக்குமோ!!) மிகச்சிறந்த அழகி இவள். இவளை மணக்கனும்ன்னா தான் வைக்கும் போட்டியில் ஜெயிக்கனும்ன்னு சொல்லி பெரிய இரும்பு குண்டை பொடியாக்கனும், சேவல் கோழியோடு சண்டைன்னு கடின போட்டிகளை வைத்தனர். அழகுக்கு ஆசைப்பட்டு வந்து தோற்ற ஆண்கள் சிறையில் அடைத்தனர்.
அந்த சூழலில்தான் பீமன் அல்லி ராஜ்ஜியத்திற்குள் வந்தான். மாயவடிவில் வந்த அழகிகளுடனும், சேவல் சண்டையிலும் பீமனே ஜெயித்தான். அடுத்த போட்டி, வாளினால் ஒரே வெட்டில் மூன்று துண்டாய் உடைக்கனும்ன்னு சொல்லி ஒரு இரும்புக்கம்பியை நீட்டினர். வீரம் இருக்கும் இடத்தில் விவேகம் இருக்காதுன்னு நிரூபிக்குற மாதிரி பீமனுக்கு மூளை வேலை செய்யலை. எத்தனை யோசிச்சும் அவனால் மூன்றாய் உடைக்க முடியாமல் இரண்டாய் மட்டுமே உடைத்து, தோற்று சிறைப்பட்டான்.
எப்பவும்போல, கிருஷ்ணன் பெருச்சாளி (யானைன்னும் சொல்வாங்க) வடிவமெடுத்து பீமனை சிறையிலிருந்து வெளிக் கொணர்ந்தார். ஆனா, தர்மவழியில் நடக்கும் தர்மர் அதனை தடுத்து நேர்வழியில் பீமனை மீட்டு வந்தால் போதும். இல்லையென்றால் சிறையிலேயே கிடக்கட்டுமென பீமனை மீண்டும் சிறைக்கே அனுப்பி வைத்தார். அல்லி சகோதரிகளை ஜெயிக்க வழி என்னன்னு சாஸ்திரக்கலையில் வல்லவனான சகாதேவனிடம் கேட்க, அவனும் வான சாஸ்திரத்தில் பார்த்து பல்வரிசையின் கணவன் அல்லிமுத்துவென இருக்கிறதாய் சொன்னான். அல்லிமுத்து பஞ்சபாண்டவர்களின் சகோதரியான சங்கவதியின் மகன். இது கிருஷ்ணனுக்கு வசதியாய் போயிற்று.
அல்லிமுத்துவை வரவைத்து அவனை அல்லி ராஜ்ஜியத்துக்கு அனுப்பி வைத்தனர். போகும்போது தனது தனது இஷ்ட தெய்வமான வனபத்ரகாளியை வணங்கி அல்லி ராஜ்ஜியத்துக்குள் செல்ல காளிதேவியிடம் அனுமதி கேட்டான். அப்போது காளி, அவன் முன்தோன்றி, மந்திரித்த திருநீறையும், ஒரு நீண்ட வாளையும் தந்து, ‘ வெற்றி பெற்று வரும்வரை, இவை இரண்டையும் எந்ததருணத்திலும் மறந்து விடாதே” இது உனக்கு உதவுமென வாழ்த்தி அனுப்பி வைக்கிறாள். அல்லிமுத்துவின் வருகை அரசவையில் தெரிவிக்கப்பட்டது. வழக்கம்போல் அலங்காரவல்லி என்னும் பல்வரிசையை அவன்முன் காட்டி மொத்தம் மூன்று போட்டிகள் என அறிவித்தாள் ஆரவல்லி.
பார்த்ததுமே பல்வரிசையை அல்லிமுத்துவுக்கு பிடித்துபோனது. அல்லிமுத்துவை பல்வரிசைக்கும் பிடித்துபோனது. முதல் போட்டி, சேவல் சண்டை. ஆரவல்லியின் மந்திர கட்டிலிருந்த சேவலை, அல்லிமுத்துவின் சேவல் எதிர்கொண்டது. சேவல் வீரம் மட்டும் இதற்கு போதாதென உணர்ந்த அல்லிமுத்து காளிதேவியை துணைக்கு அழைத்து காளிதேவியின் மந்திரங்களை உச்சரிக்க ஆரவல்லியின் மந்திரக்கட்டிலிருந்து சேவல் வெளிவந்தது. அதோடு அல்லிமுத்துவின் சேவல் மோதி, வீழ்த்தி வெற்றியும் கொண்டது.
அடுத்து, ஒரே வெட்டில் மூன்று துண்டுகள் விழவேண்டுமென இரும்பு கம்பியை நீட்டினர். இரும்பை வாளால் ஒரே துண்டில் வெட்டுவதே கடினம். இதில் எப்படி மூன்று துண்டுகள் என மலைத்து நின்று மனதிற்குள் வனபத்ரகாளியம்மனை வேண்டினான். வனபத்ரகாளியம்மன் அளித்த நீண்ட வாள் நினைவுக்கு வந்தது. அதை எடுத்து அப்படி இப்படியென ஆராய்ந்து பார்த்தான். வழக்கத்துக்கு மாறாய் அந்த வாள் மிகவும் நீண்டதாய் இருந்தது. அதை வளைத்து இரும்பு கம்பியை ஓங்கி வெட்ட, மூன்று துண்டாய் உடைந்து வீழ்ந்தது. இரண்டாவது போட்டியிலும் அல்லிமுத்து வென்றான்.
அடுத்து, அரையடி விட்டம்கூட இருக்காத, இரும்பு வளையத்தை நீட்டி இதில் நுழைந்து இந்தப்பக்கமிருந்து அந்தப்பக்கம் வரனும்ன்னு அல்லி சகோதரிகள் சொன்னாங்க. அந்த வளையத்தில் ஓரிரு வயசுக்கொண்ட குழந்தையால்கூட வரமுடியாது. இதில் எப்படி தான் நுழைவதுன்னு அல்லிமுத்து யோசித்தான். வழக்கம் போல காளிதேவியை வணங்க, அவள் தந்தனுப்பிய விபூதி நினைவுக்கு வந்தது. அதை அந்த இரும்பு வளையத்தில் தேய்க்க, வளையம் பெருசாக ஆரம்பித்தது. வளையம் போதுமான அளவுக்கு பெருசானதும் அல்லிமுத்து வளையத்துக்குள் நுழைஞ்சு வெளியேறி, மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்றான். வேறு வழியின்றி பல்வரிசைக்கும், அல்லிமுத்துவுக்கும் திருமணம் செய்விக்க சம்மதித்தாள் ஆரவல்லி.
சினிமாவில்தான் காதல் கைகூடுச்சுன்னா எல்லாமே நல்லபடியா நடக்கும்ன்னு சுபம் போட்டுடுவாங்க. ஆனா, அதுக்கப்புறம்தான் பல பிரச்சனைகள் உண்டாகுது. அதுமாதிரிதான் அலங்காரவல்லி, அல்லுமுத்துவின் கதையிலும் நடந்துச்சு. தன்னோடு, அலங்கார வல்லியை அழைத்துக் கொண்டு பாண்டவர்களிடம் சென்று, தன் மாமன்களின் தலமையில் திருமணம் செய்துக்கனும்ன்னு செல்ல முடிவெடுத்தான் அல்லிமுத்து. அதுக்கு முதல்ல ஒப்புக்காத ஆரவல்லி சகோதரிகள் அலங்காரவல்லியின் வற்புறுத்தலுக்காக அவளை அனுப்ப சம்மதித்தனர். ஆனால் அவளுக்கே தெரியாம விஷம் கலந்த நீரை தந்து, உன் கணவன் தாகம் தீர்க்க இதை கொடு எனச்சொல்லி வழியனுப்பி வைத்தனர்.
போகும்வழியில் அல்லிமுத்துவுக்கு தாகமெடுக்க, அலங்காரவல்லி விஷங்கலந்த நீரை தருகிறாள். அதை குடித்தபின் அல்லிமுத்து இறந்து போகிறான். நடந்த சூது அறியாத அலங்காரவல்லி, அவனை அங்கேயே விட்டுவிட்டு ஆரவல்லி, சூரவல்லியிடம் வந்து நடந்ததைச் சொல்லி புலம்புகிறாள். ஆரவல்லியோ மனம் மகிழ்கிறாள். அலங்காரவல்லி இறந்த தன் கணவனுக்காக புலம்பிக்கொண்டே இருக்க, அல்லிமுத்துவின் குதிரை, பஞ்சபாண்டவர்களிடம் சென்று விவரம் சொல்ல, அபிமன்யு மேலுலகம் சென்று, அல்லிமுத்துவை மீட்டுவருகிறான்.
மீண்டும் உயிர்ப்பெற்று வந்த அல்லிமுத்து, நடந்தவற்றையெல்லாம் கேள்விப்பட்டு அல்லி ராஜ்ஜியத்தின்மீது போர்தொடுத்தான். ஆரவல்லி, சூரவல்லி சகோதரிகளில் ஒருவள் மட்டும் தப்பிக்க, மற்றவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களும் பிற்காலத்தில் சிறையிலிருந்து தப்பி கேரளாவுக்கே தப்பி சென்றனர். மந்திர தந்திரகலைகளில் கைதேர்ந்தவர்களும், சாகாவரம்பெற்றவர்களுமான அல்லி சகோதரிகள் கேரளாவில் இருப்பதால்தான் கேரளா மாந்தீரக, தாந்தீரகத்தில் பேர்போனதாய் இருப்பதாக சொல்லப்படுது.
அலங்காரவல்லிக்கும் நடந்த சூதுக்கும் எந்த தொடர்புமில்லையென உணர்ந்த அல்லிமுத்து அவளையே திருமணம் செய்து மகிழ்ச்சியோடு வாழ்ந்தான். திருமணத்தையொட்டி சிறைப்பட்டிருந்த ஆண்களை விடுதலை செய்து அவர்களை அவரவர் நாட்டுக்கு அனுப்பி வைத்தான்., இப்படியாக பெண்களால் நடத்தப்பட்டு வந்த அல்லி ராஜ்ஜியம் அழிவை சந்தித்தது...