ஆசிரியர்.பிரபஞ்சன்
பதிப்பு.காலச்சுவடு
பிரபஞ்சன் தமிழ் எழுத்தாளர்.விமர்சகர்.சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.யாருடைய படைப்பையும் முன் மாதிரியாகக் கொள்ளாமல் தன் சொந்த அனுபவங்களில் இருந்து எழுதுபவர்.பெரும்பாலும் நடுத்தர வர்க்கம் அல்லது கீழ்தட்டு வர்க்கத்தின் வாழ்வியல் அசைவுகளை அடிப்படையாகக் கொண்டது, அவரது படைப்புகள்.காட்டும் யதார்த்தம் மிகவும் நுண்மையானது.மனிதனின் துயரங்கள் பற்றி பேசும் இக்கதைகள் அன்பே பிரதானம் என்பதையும்வலியுறுத்துகின்றன.
மொத்தம் 75 சிறுகதைகள்.அவற்றில் ஒரு சிலவற்றை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள் கதை.கிருஷ்ணமூர்த்தி அரிசி கடை வைத்து,கடனுக்கே கொடுத்து கையறு நிலையில் இருப்பவன்.180ரூ.கோபாலு கடனுக்கு அரிசி வாங்கியவன் தான் கொடுத்தவன் மாதிரி பேச,ஒரு நாள் அவன் வீட்டிற்கே சென்று பணம் தராவிடில் நடப்பதே வேறு என எகிறுகிறான்.பயந்த கோபாலு 100ரூ கொடுத்து விட்டு அப்புறம் மீதி தருகிறேன் என்றான்.80வேண்டாம் 50 கொடு போதும் என்கிறான்.அதிலும் 20ரூபாய்க்கு அவனுக்குப் பிறந்த குழந்தைக்கு சட்டை வாங்கிக் கொள்ளும்படி கூறுகிறான்.மனித நேயம்,விட்டுக் கொடுக்கும் தன்மை,பிறர் துன்பங்களை உணரும் மனநிலை கதை அருமை.
அடுத்து 'பிரும்மம் '
என்ற கதை.சுந்தரம் ராமசாமியின் புளிய மரம் போன்று இதில் முருங்கை மரம்.புது வீட்டில்நாலு முழ வேட்டி விரித்தாற் போன்று சிறுஇடம்.எங்கிருந்தோ கொண்டு வந்து முருங்கைக் கொம்பு நடுகிறார்கள்.கிளை வளர்ந்து மரமாகிறது.அக்கம் பக்கம்,வீட்டிற்கு வருபவர்கள் அனைவருக்கும் கீரை,காய் கொடுக்கிறார்கள்.வீட்டாரின் வாழ்வில் அது தினமும் பேசுபொருளாகியது.கன மழையால் மரம் முறிந்து விழுகிறது.அனைவரும் சோகமாயினர்.பிரும்ம விருட்சம் அனைவரையும் கட்டிப் போடுகிறது.சில நாட்களுக்குப் பின் மீண்டும் துண்டாகி நின்ற மரத்தில் இருந்து சின்னதாய் கிளைத்திருந்தது புதிய உயிராய்.வாழ்க்கையை மறுபடியும் இயங்க வைக்கும் நம்பிக்கையை இது காட்டுகிறது.
ஆயுள் என்ற சிறுகதை.புதுச்சேரி செல்லும் பஸ் கதைக்களம்.சின்ன சின்ன பொருள்களை விற்கின்றனர்.ஒரு பெரியவர் அனைவரிடமும் ஜாலியாக பேசிக் கொண்டு வருகிறார்.வசதியான குடும்பத்திலிருந்து வந்தவர்.சூழ்நிலைக் காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து இப்பொழுது மீண்டும்ஊர் வருகிறார்.பொம்மை விற்கும் சிறுவன் விலை அதிகமில்லை.ஆனால் கலைப்பொருள் என்கிறான்.விலை பொருட்டல்ல,ஆயுசும் உழைப்பும் முக்கியம் என்கிறார் பெரியவர்.இறங்கும் போது வேட்டி தடுக்கி கீழே விழுந்தவர் அப்படியே இறந்து விடுகிறார்.மொம்மையின் ஆயுள் பற்றிப் பேசியவர் தன் ஆயுள் பற்றி அறியவில்லை.
ஆண்பிள்ளை என்ற அற்புதக் கதை.கிச்சான் பெண்மை படைத்தவன்.சமையல்,கோலம் போடுதல்,வீட்டு வேலைகள் அனைத்தும் செய்து பொட்டைப்பயல் என்ற பெயரெடுத்தவன்.ஆனால் யாரும் செய்யயத் துணியாத,சீரழிந்த ஒரு பெண்ணுக்கு வாழ்வு கொடுத்து தன் ஆண்மையை நிரூபிக்கிறான்.பிறன் மனை நோக்கா பேராண்மையாக விளங்குகிறான்.
மீன்களில் எத்தனை வகை உண்டோ அனைத்தும் கூறப்பட்டுள்ளது.காரமீன்,கிழங்காமீன்,சுதும்பு மீன்,நெத்திலி எதுகிடைக்கிறதோ அதை வாங்கி வரச் சொல்கிறார்.மீனின் பற்று சுவை உணர்வோடும் ரசிப்புத் தன்மையோடு கூறப்படுகிறது.ஒவ்வொன்றையும் என்ன போட்டு எப்படி சமைக்க வேணும் என்பது பற்றியும்.
கு.அழகிரிசாமிக்குப் பிறகு குழந்தைகளின் மனம் புகுந்து தானும் மழலையாகிறார் பிரபஞ்சன்.சின்னஞ்சிறு வயதில்,பூக்களை மிதிப்பவர்கள்,இது தான் அது.இக்கதையில் வரும் குழந்தைகள் நம் இதயத்திலும் இடம் பிடித்து விடுகிறார்கள்.ரோஜா தோட்டம் போட விரும்பும் சிறுமி,பின்கிளி வளர்க்க,கோலம் போடும் சிறுமி என அசத்துகிறார்கள்.பூக்களை மிதிப்பவர்கள் கதையில் பருந்தா பிறந்தா உயரப்பறக்கலாம்,கிளியா பிறந்தா அழகா இருப்பேன்.பழமா சாப்பிடுவேன்.பள்ளிக் கூடம் போக வேண்டாமே.மாசற்ற குழந்தைகள்.அந்த மனதை பிரபஞ்சன் பெற்றுள்ளார்.
நாட்டுக்காக தியாகம் செய்த சிவபாத சுந்தரம் மகனுக்கு வேலை கிடைத்ததும் தன் தியாகி பென்ஷனை வாங்க மறுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் பென்ஷனை நிறுத்த சொல்லி விடுகிறார்..தியாகத்திற்கு கூலி வேண்டாம் என்கிறார்.அதிகாரிகள் வியந்து போகின்றனர்.அவர் மகனோ கிழடுக்கு யார் சொல்லறது.திண்ணையிலே உட்கார்ந்து தண்டச்சோறு தின்று என் கழுத்தை அறுக்கப் போகிறது என மனைவியிடம் கூறுகிறான்.
அம்மிணி என்ற வேலைக்காரி.வாழ்ந்து கெட்டவள்.மாசு மறுவற்ற சுந்தரம் பிள்ளையை விரும்புகிறாள்.அவரோ கெளரவம் பெரிது என எண்ணி அவள் விருப்பத்தை ஏற்க மறுத்து இறக்கும் நிலையில் அவளுக்கு பணம் கொடுத்து வைக்கிறார்.மாசற்ற மனிதம் பொங்க நான் பணம் கேட்கவில்லையே என அலறுகிறாள்.அம்மிணி.
வீணை கற்றுக்கொள்ள வித்வான் வாசுவிடம் வருகிறார்கள் நண்பர்கள் இருவரும்.அதில் ஒருவர் அவர் விதவை இளம் மகளை விரும்பி அவளிடமே கடிதத்தையும் கொடுக்கிறான்.கடிதம் தந்தை கைக்குப் போக அவனை கூப்பிட்டு அறிவுரை கூறி மகளுக்கு இது எத்தகைய அவமானம் எனக் கூறி மீண்டும் வீணைகற்க வரும்படி அழைப்பு விடுத்தார்.மனம் நொந்த மற்ற நண்பன் சங்கீதம் பெரிசு தான்.அதை விட மனிதன் ரொம்பப் பெரியவனாக இருக்கிறானே என்று தான் வகுப்புக்கு வராததற்கு காரணம் கூறுகிறான்.
அண்ணாச்சி சேரிமக்களுக்கு தியாகசீலனாகிறார்.பொறாமை கொண்டரெளடி பாஸ்கர் அவரைக் கொலை செய்ய முனைகிறான்.ஆனால் அண்ணாச்சி தப்பி விடுகிறார்.மறுமுறை அவனைப் பார்க்கும் போது சாதாரணமா நலம் விசாரிக்கிறார்.மனம் உடைந்த அவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்கிறான்.
அரசியல்,சதுரங்க விளையாட்டு,பதவிச் சண்டைகள்,சாதிக் கலவரம்,தாசி தர்பார் அனைத்தையும் கதைகளில் கொண்டு வருகிறார்.
காதல் என்பது மனித நாகரிகங்களில் ஒன்று பேச்சு மொழிக்கு முன் பிறந்த உடல்மொழி.என மொழியின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறார்.
அருமையான கதைகள்.ரசித்துப் படிக்கலாம்.