Breaking News :

Friday, May 02
.

ஏன் அணில் பிள்ளை என்கிறோம்?


ஏன் அணிலுக்கு பிள்ளை என்று சொல்கின்றார்கள் என்று பல முறை யோசித்ததுண்டு. இம்முறை அணில் பற்றி அகரத்தில் எழுத தகவல் சேகரிக்கும்போதுதான் அந்தக் கேள்விக்கான விடை கிடைத்தது. தமிழில் மனிதர்களுக்கு மட்டுமல்லாது சிலவிலங்குகளுக்கும் பறவைகளுக்கும் மரங்களுக்கும் கூட பிள்ளை என்னும் சொல்லைச் சேர்த்து அழைப்பர். உதாரணமாக கீரிப்பிள்ளை, கிளிப்பிள்ளை, தென்னம்பிள்ளை, வாழைப்பிள்ளை. இது ஏனைனில் மனிதர்களுக்கு அதிகம் பயனளிக்கின்ற, மனிதர்களோடு இலகுவில் பழக்கமடைகின்ற இயல்புகளைக் கொண்டிருப்பதனால் பண்டைய கால மக்கள் வீட்டுப் பிள்ளையை அழைப்பதுபோல் பிள்ளை என்ற சொல்லையும் சேர்த்து அழைத்துள்ளனர். அணில், கீரி, கிளி, தெண்ணை, வாழை, என்பனகூட மனிதர்களுக்கு மிகவும் பயனுடையனதானே.


அணில்களை இலகுவாக எம்முடன் பழக்கப்படுத்திக் கொள்ளலாம். மரத்திலிருந்து வீழ்ந்த அணில் குஞ்சொன்றை எடுத்து எனது உறவினர் ஒருவர் தற்போது ஐந்து வருடகாலமாக வளர்த்துவருகின்றார். அது அவர்களின் செல்லப்பிள்ளை போல பழகுகின்றது. கூண்டுக்குள் அடைப்பதே இல்லை. எப்போதும் வெளியே விட்டு வைத்திருப்பார்கள். வீடு முழுக்க ஓடித் திரிவதும், வீட்டாரின் மேல் ஏரி விளையாடுவதும்தான் அதன் வேலை. உணவு தேவைப்பட்டால் அதற்கு உணவு வைக்கும் தட்டில் ஏறி குதித்து சப்தம்போட்டு அட்டகாசம் செய்யும். வீட்டினர் ஒவ்வொருவரையும் சரியாக அடையாளம் கண்டுகொள்ளும். வெளியிலிருந்து யாராவது சென்றால் உடனே ஓடி ஒளிந்துகொள்ளும். விசில் அடித்தால் ஓடி வந்து கையில் அமர்ந்துகொள்ளும். அவ்வளவு பழக்கம். இப்படி அணில் வளர்க்கும் பலரை நான் கண்டுள்ளேன். இதுபோன்ற சுவாரஷ்யமான பண்பு அணில்களிடம் காணப்படுகின்றது.


அணில்கள் Sciuridae எனும் கொறித்துண்ணும் பாலூட்டி விலங்கினக் குடும்பத்தைச் சேர்ந்தவை. இவை அமெரிக்காவையும், ஐரோப்பாவையும் ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற இடங்களைத் தாய் நாடாக கொண்டவை. 19ம் நூற்றாண்டின்  பிற்பகுதியில்தான் மேற்கு ஆவுஸ்த்திரேலியாவிற்கு அணில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. உலகெங்கிலும் 200 வகையான அணில் இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் மர அணில் அல்லது நரை அணில் (Grizzled Squirrel), நில அணில், இந்தியச் சாம்பல் அணில், சிவப்பு அணில்,  சிப்மன்க் (Chipmunks), Marmots, Prairie Dogs என்பன அனைத்தும் அணில் குடும்பத்தின் பல வகைகளாகும்.

அதிகாலையில் தூங்குபவர்களை சேவல் கூவிக் கூவி எழுப்பும். அப்படியும் எழும்பாதவர்களை காலையில் ஆறு, ஏழு மணியாகும்போது டிங் டிங் டிங் என்று கத்தி அணில்கள் எழுப்பிவிடும். ஒரு அணில் கத்த ஆரம்பித்தால் போதும் அக்கம்பக்கத்திலிருக்கும் அணில்கள் எல்லாம் கூட்டுச் சேர்ந்து கத்த ஆரம்பிக்கும். அணிலின் அளவைவிட அதன் சப்தம் இருக்கின்றதே! அப்பப்பாஹ் காதைக் கிளித்துவிடும் சப்தம். வீட்டைச் சுற்றி தீடீரென அணில் கூட்டமாகக் கத்த ஆரம்பித்தால் நிச்சயம் செய்துவிடலாம் பாம்போ, கீரிப்பிள்ளையோ வந்திருக்கின்றது என்று. எல்லாம் சேர்ந்து எச்சரிக்கை அலாரம் அடித்துவிடும்.

எல்லா அணில்களும் ஒரே மாதிரியாகத்தான் நம் கண்களுக்கு தெரிகின்றன. மற்ற விலங்குகளை ஒன்றிலிருந்து இன்னொன்றைப் பிரித்து அடையாளம் காண முடியும். நாய்களில் கூட இது வேறு நாய், அது வேறு நாய் என்று அடையாளம் கண்டுகொள்ளலாம். ஆனால் அணில்களைப் பிரித்துப் பார்ப்பது சாத்தியமே இல்லை. ஒரு அணில் இன்னொரு அணிலை எப்படித்தான் பிரித்து அடையாளம் கண்டுகொள்கின்றனவோ தெரியவில்லை.

கண், காது :- அணில்களின் தோற்றமே அவற்றின் மீது நம்மை ஆசைகொள்ளத் தூண்டுகின்றது. சிறிய முகமும் முகத்தில் இரண்டு பக்கமாகவும் உள்ள கண்களும் காதுகளும் மிகவும் திறன் வாய்ந்தவை. அணில்களின் பார்வைப் புலணும் கேள் திறனும் அபாரமானவை. சிறிய அசைவும் அவற்றின் கண்ணில் பட்டுவிடும். சிறிய சப்தத்தையும் காதுகளால் துல்லியமாக கேட்டுவிடும். உடனே உயிர் தப்ப ஓட்ட மெடுக்கும்.

மூக்கு, வாய் :- மூக்கின் நுணியும் வாய்ப்பகுதிகளும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். பார்வை, கேள் திறன் போன்றே நல்ல மோப்ப சக்தியும் இவற்றுக்கு உண்டு. உணவுப் பண்டங்களின் வாசனையை தூரத்திலிருந்தே உணர்ந்து வேட்டைக்குக் கிழம்புகின்றன. மூக்கின் இரு மருங்கிலும் கொஞ்சம் மயிர் நீண்டிருக்கும். வாயிலிருக்கும் முன் பற்கள் நான்கும் மற்றையவற்றைவிட பெரியவை. அணில்களின் ஆயுள் முழுதும் அந்த முன் பற்கள் நிற்காமல் வளர்ந்துகொண்டே இருக்கும்.

அப்படியே வளர்ந்தால் அவற்றால் உண்ண முடியாது இறந்துபோகும். எனவே அதனைக் கட்டுப்படுத்த அவை தமது பற்களைத் தீட்டியாக வேண்டும். அதனால்தான் அணில்கள் எப்போதும் மரப்பட்டை, வீட்டுக் கூறையில் இருக்கும் தெண்ணைக் கம்பு, எஸ்பஸ்டோஸ் கூறைத் தகடு என்று எதையாவது கொறித்துக்கொண்டே இருக்கின்றன.

கால்கள் :- தரையிலும் மரத்திலும் கிளையிலும் ஓடி, பாய்ந்து, தாவி, தப்ப ஏற்றாற்போல் அவற்றின் நான்கு கால்களையும் திடமாக அமைந்துள்ளது .  முன் கால்களைவிட பின் கால்கள் நீளமானவை. அதன் மூலம் குந்தி, எத்தித் தாவ முடியும். முன் கால்கள் சிலபோது கைகளாகவும் தொழிற்படும். பின்னங்கால்களில் அமர்ந்து முன்னங் கைகளால் தமது முகத்தை அடிக்கடி துடைத்து துப்பரவு செய்துகொள்ளும். அவ்வாறே ஏதாவது உணவுப் பொருள் கிடைத்தால் இரண்டு முன்னங் கைகளாளும் பிடித்து அழகாகக் கொறித்துச் சாப்பிடும். மரங்களிலும், சுவர்களிலும் ஏறவும் இறங்கவும் அவற்றுக்கு உதவியாக இருப்பது அவற்றின் கூர்மையான நகங்கள்தான்.

உடல் :- உடலில் அடர்த்தியான முடியும் பஞ்சு பூத்த நீண்ட வாலும் அவற்றுக்கு தனி அழகைக் கொடுக்கின்றன. பல்வேறு நிறங்களிலும் அணில்கள் காணப்படுகின்றன. சிவப்பு, சாம்பல், வெள்ளை நிறங்களில் அணில்கள் இருக்கின்றன. முதுகில் சாம்பல் நிறமும் அதில் கருப்பு நிறத்தில் மூன்று கோடுகளும் இருப்பது இந்தியா, இலங்கையில் உள்ள அணில்களாகும். சிலவகை அணில்கள் மரத்திற்கு மரம் பறந்து செல்லும் உடலமைப்பையும் கொண்டுள்ளன. இவை பறக்கும் அணில் (Flying squirrel) என அழைக்கப்படுகின்றன. மரம் விட்டு மரம் தாவும்போது உடற் சமநிலை பேணுவதற்கு உதவுவது அவற்றின் வால்தான். அதே போன்று அவை பின்னங் கால்களில் அமர்ந்து முன் கைகளால் உணவு உண்ணும் போது அவற்றின் வாலை நேராக நிறுத்தி அதில் முதுகுப் பகுதியால் சாய்ந்து நின்றுகொள்ளவும் வால் உதவும். ஒரு பெரிய அணிலின் எடை சராசரியாக 100 கிராம் வரை இருக்கும்.

அணில்கள் கூட்டமாக வாழும் உயிரினமாகும். மர உச்சில்களிலும், மரப் பொந்துகளிலும், வீட்டு முகடுகளிலும் ஆள் நடமாற்றம் அற்ற களஞ்சிய சாலைகளிலும் இவை  கூடுகளை அமைத்து வாழ்கின்றன. சாதாரணமாக ஒரு அணில் ஐந்து வருடங்கள் வரை உயிர் வாழும். உரிய பாதுகாப்புகளோடு வளர்த்தால் 10 வருடங்கள் வரை உயிர் வாழ்வனவும் உண்டு. இனப்பெருக்க காலத்தில் ஆண், பெண் அணில்கள் இணை சேர்ந்ததன் பின்னர் இரண்டும் சேர்ந்து கூடு கட்ட ஆரம்பிக்கும். காய்ந்த மரக் குச்சிகளையும் தேங்காய் நார்த் தும்புகளையும் பஞ்சுகளையும் கொண்டு அழகிய கூட்டை வடிவமைக்கும். இணை சேர்ந்து 35 நாட்களில் பெண் அணில், குட்டி ஈனும். குஞ்சுகள் கண் திறக்காது, மயிர்கள் இன்றி, பற்கள் இன்றி, நகங்கள் இன்றி வெளுத்தும் பழுப்பாகவும் காணப்படும். ஒரே சமயத்தில் இரண்டு முதல் மூன்று குட்டிகளை அணில் இடும். வருடத்தில் ஒரு தடவையோ அல்லது இரண்டு தடவைகளோ குட்டி ஈனும்.


இரண்டு வாரங்களில் குட்டிகள் கண்கள் திறந்து, உடலில் மயிர்கள் வளர்ந்துவிடும். பின்பு சுயமாக உணவு தேட வெளியில் உலாவரும்வரை ஒரு மாத காலத்திற்கு தாய் அணில் பாலூட்டியும் உணவூட்டியும் அவற்றை வளர்த்தெடுக்கும். குட்டிகளின் மீது மிகுந்த பாசம் கொண்டவைதான் தாய், தந்தை அணில்கள். அணில்கள் பெரும்பாலும் விதைகள், பழங்கள், மலர்கள், பூச்சிகள் முதலியவற்றையே உணவாக உட்கொள்ளும்.  இன்னும் மனிதர் நாம் உட்கொண்டுவிட்டு வீசும் பன், பிஸ்கட், சோறு, தேங்காய்ப் பூ என்பவற்றையும் குப்பைகளிலிருந்து உண்ணும். அணில் மிக சுலபமாக மனிதர்களிடம் பழகும். உணவு கொடுத்து பழக்கப்படுத்தி விட்டால் அடிக்கடி உணவுக்காக நம்மை நாடி வருமாம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.