Breaking News :

Friday, April 11
.

அருந்தவப்பன்றி - பாரதியின் துயர் மிகுந்த வாழ்வின் பகுதி


நூல்: அருந்தவப்பன்றி
ஆசிரியர் : பாரதி கிருஷ்ணகுமார்
பதிப்பகம் : சப்னா
விலை : ₹ 140.00
பக்கங்கள் : 157

பாரதி இந்த பெயரைக் கேட்கும்போதும் சொல்லும்போதும்,  உள்ளத்தில்   ஒரு நெருப்பு பரவும். முதல்முறையாக இரண்டாவது படிக்கும் போது மேடையேறி பேசும் பொழுது, நான் விரும்பும் தலைவர் அப்படின்னு பாரதியைப் பற்றி தான் பேசினேன். கூட்டத்தில் வந்த சலசலப்பில் பயந்து, அழ ஆரம்பித்து விட்டேன். அப்போது எங்கள் தலைமையாசிரியர் என்னை அழைத்து,  பாரதியைப் பற்றி இந்த வயதில் பேசும்  நீ அழலாமா?  பாரதியைப் பற்றிப் பேசும்போதே உனக்கு கம்பீரம் வரவேண்டும் அல்லவா? என்று சொல்லி தேடிச் சோறு நிதம் தின்று அந்த கவிதையை சொன்னார். நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? அந்த வரிகள் மனதில் நங்கூரமிட்டு தங்கிவிட்டன. இன்றுவரை மனதிலே நான் அடிக்கடி சொல்லி என்னை உற்சாகப் படுத்திக் கொள்ளும் வரிகள் இவைதான்.  " வேடிக்கை மனிதரைப் போல நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? "

கிட்டத்தட்ட சின்ன வயது முதல் நாம் அனைவருமே, பாரதியின் புகழ் பெற்ற பாடல் வரிகளை படித்தும், கேட்டும் மகிழ்ந்திருப்போம். சில கவிதைகளுக்குள் புதைந்து கிடக்கும் பாரதியின் படிமத்தை நாம் உணர்ந்து கொள்ளாமல் கடந்து வந்திருப்போம். "வாராய் கவிதையாம் மணி பெயர் காதலி" என்று தொடங்குகின்ற அவர் பாடலில், " பன்னாள் பன்மதி ஆண்டு பல கழிந்தன;  நின்னருள் வதனம் நான் நேருறக் கண்டே" என்ற இந்த வரிகளைப் படித்ததும் துணுக்குற்று எத்தனை ஆண்டுகள் பாரதி கவிதா தேவியை பிரிந்து இருந்தார்?  அதுவரை எங்க இருந்தார்?  கவிதா தேவி மீண்டு வந்ததும் பாரதி எழுதிய முதல் கவிதை எது? இது பற்றி பாரதி வரலாற்றாசிரியர்கள் என்ன குறிப்பிட்டு இருக்கிறார்கள்?  என்று பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் தேடிய நீண்ட தேடலின் விடைதான் ஆய்வு நூலுக்கு ஒப்பான இந்த நூல்.

1898 ஆம் ஆண்டுமுதல்,  1904 ஆம் ஆண்டு வரை ..ஆறு ஆண்டுகள் என்ன நடந்தது?  என்று எந்த வரலாற்று ஆசிரியர்களும் சொல்லாத, தொடாத ஒரு விஷயத்தை,  அந்தக் கவிதையின் வழியே பாரதியின் சுயசரிதை நூலான கனவு,  சின்ன சங்கரன் கதை ஆகிய நூல்களை ஆய்வு செய்து, தன் கருத்துக்களை முன் வைக்கிறார் ஆசிரியர்.

பாரதியின் கவிதைகளை தேசிய கீதங்கள், பக்தி பாடல்கள், ஞான பாடல்கள், பல்வகைப் பாடல்கள், தனிப்பாடல்கள், சுயசரிதை, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, வசன கவிதைகள், புதிய பாடல்கள் என தலைப்பிட்டு,வகைப்படுத்தி பாரதியின்  கவிதைத் தொகுப்பை பதிப்பித்துள்ளார்கள்.  அதில் தனிப்பாடல்கள் என்ற பிரிவில்தான் கவிதை காதலி என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தக் கவிதை வருகிறது.

" வாராய் ! கவிதையாம் மணி பெயர் காதலி" என்ற முதல் அடியுடன் தொடங்கும் இந்த நீண்ட கவிதையில் எண்பத்தி மூன்று வரிகள் மட்டுமே அனைத்து பதிப்புகளிலும் இடம்பெற்றிருக்கின்றன.  

அருந்தவம் செய்து காட்டில் வாழ்ந்து வந்த ஒரு முனிவன், பெரும் சாபத்தினால் பன்றியாக  உருமாறுகிறான். அதனால்தான் அந்த முனிவனை அருந்தவப் பன்றி என்று அழைக்க நேரிடுகிறது எல்லாச் சாபங்களும் சாபவிமோசனம் உண்டல்லவா? பன்றியாக உருமாறிய முனிவனின் மகன், அந்த பன்றியை வாளால் வெட்டி வீழ்த்தினால் சாபவிமோசனம் கிடைத்துவிடும். அந்த முனிவன் மகனை அழைத்து நான் பன்றியாக உருமாறிய ஏதும் விரைவாக ஒரு வாளை எடுத்து, அந்தப் பன்றி உடலை வெட்டி சாய்ப்பது உனது கடமை. உனக்கு எந்தப் பாவமும் நேராது", எனச்சொல்லி விடுகிறான். பன்றியாக உருமாறிய பின் காட்டிற்குள் சென்று ஓடிவிடுகிறான். துரத்திக் கொண்டு சென்ற மகன் வாளால் வெட்டி வீழ்த்த முயலும் போது, " மகனே! இந்த வாழ்க்கை ஒன்றும் கடினமாக தெரியவில்லை. காற்று, தண்ணீர், கடிப்பதற்கு கிழங்கு என பல இன்பங்கள் இந்த வாழ்க்கையிலும் இருக்கிறது.

ஆறு ஏழு மாதங்கள் கழித்து வந்த பிறகு நீ என்னை வெட்டிக் கொன்று விடலாம் " என்று சொன்னதும் தந்தையின் சொல்லுக்கு தலைசாய்த்து மகன் திரும்பிப் போனான். சில மாதங்கள் கழித்து அருந்தவப் பன்றியை தேடி மகன் காட்டுக்குள் வரும்போது அங்கே இருந்த பன்றி ஒரு பெண் பன்றியின்   துணையோடும், சில குட்டிகளோடும் மகிழ்வாக வாழ்ந்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ந்து , " தந்தையே!  கற்றறிந்த ஈடு இணையில்லாத உன் புகழுக்கு இது இழுக்கல்லவா? இப்போதே நான் உன்னை வாள் கொண்டு வெட்டி விடுகிறேன்" என்று சொல்லும்போது " போடா போ.  இந்த வாழ்க்கை மிக இன்பமாக இருக்கிறது. எனக்கு இந்த வாழ்வு தான் பிடித்திருக்கிறது. வேண்டுமானாலும்  உன் மார்பை பிளந்து கொண்டு செத்துப்போ"  என்று சொல்லிவிட்டு தன் துணையோடும், குட்டிகளோடும் காட்டுக்குள் ஓடி மறைந்து தன் உயிரை காப்பாற்றிக் கொண்டது.   அதுபோல தானும் நிலை தாழ்ந்து இழிந்த பன்றியை போன்ற வாழ்வு  சில ஆண்டுகள் வாழ நேர்ந்ததாகவும், அந்த வாழ்க்கையின் மூலம் தன்னை விட்டுப் பிரிந்து போன கவிதா தேவியை  மீண்டும் வர இறைஞ்சியும் இந்த கவிதையை எழுதியுள்ளார்.

பாரதியின் இளமைகால வரலாற்றை, ஓரளவு விரிவாக விவரித்து கூறியதன் மூலம், ஏன் பாரதியார் அந்த ஆறு ஆண்டுகள் ஒரு பன்றியின் வாழ்க்கையை போலத் தான் வாழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளதை நாம் உணர முடியும்.

பாரதியார் தன்னுடைய ஐந்தாவது வயதிலேயே தாய் லட்சுமி அம்மாவை இழக்கிறார். தாய் அன்புக்காக எவ்வளவு ஏங்கி இருக்கிறார் என்பதை கனவு என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதை நடையில் ஆன சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். " என்னை ஈன்றெனக்கு ஐந்து பிராயத்திலே ஏங்க விட்டு விண்ணெய்திய  தாய்தனை...." இன்று  ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். பாரதியார் ஏழு வயதிலேயே அருமையான தமிழ் கவிதைகளை விளையாட்டாக விரைந்து பாடுவதை அவருடைய பள்ளித் தோழர் ஆகிய சோமசுந்தர பாரதி பாரதியாரின் நினைவுகளை பற்றி குறிப்பிடுகிறார். தந்தையின் உத்தரவுக்குப் பயந்து, குழந்தை பருவத்திலேயே எந்தவித இன்பம் தரும் விளையாட்டுகள் ஏதுமின்றி, யாருடனும் விளையாடாமல், புத்தகங்களுடன் தனிமையாய் கழிந்தது பாரதியின் குழந்தை பருவம்.   

தன்மகன் ஆங்கிலக்கல்வி, கணிதம் கற்று மேலை நாடுகளில் எல்லாம் சென்று படித்து பெரும் உத்தியோகத்தில் அமர்ந்து கைநிறையச் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது சின்னசாமி ஐயரின் பெரும் விருப்பமாக இருந்தது. ஆனால் பஞ்சாலைத் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடியும் ,வீழ்ச்சியும் சின்னசாமி ஐயரை  நிலை குலையச் செய்து,  மகனின் படிப்பிற்கு தேவையான பணத்தைக் கூட அவரால் அனுப்ப இயலாத சூழல்...அப்போது பாரதியார் 1897 (14 வயது)  ஆம் ஆண்டு எட்டயபுர மன்னருக்கு ஒரு சீட்டுக்கவி ஒன்று எழுதுகிறார். ஆனாலும் பாரதியின் கோரிக்கையை ஏற்காததால் தொடர்ந்து கல்வி பெறுவதற்கான வழி பிறந்த காரணத்தினால் பாரதியார் காசி சென்று அங்கு தனது படிப்பை தொடங்குகிறார்.

ஆனால் காசிக்கு செல்வதற்கு முன்பே சிறிதுகாலம் எட்டயபுரம் ஜமீனில் அவர் பணியாற்றியதையும்,  கவிதா தேவி முற்றிலுமாக பாரதியாரை விட்டு அகன்ற பிறகு பாரதியாரின் காசி பயணம் நிகழ்வதாகவும், பல அரிய தகவல்களுடன் பல நூல்களின் தரவுகளோடு பாரதி கிருஷ்ணகுமார்  நமக்கு முன் வைக்கிறார். இவற்றையெல்லாம் ஒவ்வொரு அத்தியாயங்களிலும் பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் மிகச் சிறப்பாக விவரித்து இருக்கிறார்.  

பாரதியார் காசியில் இருக்கும் பொழுது ஒரு முறை அங்கு சென்ற எட்டையபுரம் ஜமீன்தார் பாரதியை சந்தித்து எட்டயபுரத்திற்கு மீண்டும் அழைத்து வந்தார். எட்டயபுரம் அரண்மனையில், அவர் பணியாற்றிய காலங்களை தான் அருந்தவப் பன்றி வாழ்க்கை என்று பாரதியாரே அந்தக் கவிதையில் குறிப்பிடுகிறார்.

கவிதா தேவி தன்னிடம் மீண்டு வந்ததும் பாரதியார் எழுதிய முதல் கவிதை தனிமை இரக்கம் என்ற பெயரில் விவேகபானு என்னும் இலக்கிய மாத இதழில் பிரசுரமானது. இதை சிலர் பாரதியாருடன் பிள்ளைகளுடன் தொடர்புடையது என்று கருதுவது ஏற்புடையது அல்ல என்பதை மிகத் தெளிவாக ஆசிரியர் எடுத்து வைத்துள்ளார். 1904 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை கிட்டத்தட்ட நூறு நாட்கள் மட்டுமே சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியர் பணியில் இருக்கிறார். 1904 ஜூலை மாதம் முதற்கொண்டு, 1921 செப்டம்பர் மாதம் காலமாக வரையில் 17 ஆண்டுகள் இடையறாத எழுத்து வாழ்க்கை வாழுகிறார் என்பதையெல்லாம் இந்த நூலில் தன் அற்புதமான எழுத்து நடையின் மூலம் ஆசிரியர் பதிவிட்டுள்ளார்.

பாரதியின் வாழ்க்கை வரலாறு நூல் ஒன்றினையும், அவரது அனைத்து படைப்புகளையும் கால வரிசைப் படுத்திய ஆய்வுப் பதிப்பு ஒன்றையும் தமிழக அரசும், தமிழ்ப் பல்கலைக்கழகமும் விரைந்து வெளிக்கொணர வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை இந்த நூலில் ஆசிரியர் தீர்க்கமாக முன்வைக்கிறார்.

பாரதியின் பிறந்தநாள் அன்று , அருந்தவப்பன்றி நூலை மூன்று வருடங்களுக்குப் பிறகு மீள் வாசிப்பு செய்திருக்கிறேன்.

தோழர் பாரதி கிருஷ்ணகுமார், அருந்தவ பன்றியின் அடுத்த பதிப்பில், மூன்று சிறந்த நூல் விமர்சனங்களை அந்த பதிப்பில்  சேர்த்தார்.  அந்த மூன்று விமர்சனங்களில்  எனது நூல் விமர்சனத்தையும் அதில் தோழர் இணைத்தது பெரும் மகிழ்வான ஒன்று.

ஒரு பாடலின் வரிகள்  வழியே, பாரதியின் துயர் மிகுந்த வாழ்வின் பகுதியை,  ஒரு ஆய்வு நூலைப் போல பாரதிகிருஷ்ணகுமார் அவர்கள் இந்த நூலில் தந்துள்ளார். நாமும் அதையெல்லாம் அறிந்து கொள்ள கண்டிப்பாக இந்த நூலை வாசிக்க வேண்டும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.