புத்தகம் : கார்ப்பரேட் கோடரி
ஆசிரியர் : 'சூழலியலாளர்' நக்கீரன்
விவசாயத்தில் ஈடுபடுகிறேன் பேர்வழி என்று கார்ப்பரேட்டுகள் விவசாயிகளை அதன் சொந்த மண்ணிலிருந்து வேரோடு பெயர்த்து எடுத்துவிட்டு, நவீன உற்பத்தி முறை என்ற பெயரில் மண்ணை சீரழிப்பது மட்டுமல்லாமல் வெறும் வியாபாரத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படுகின்றன. இதனால் ஏற்படும் பாதிப்புகளை சூழலியலாளர் நக்கீரன் இந்த புத்தகத்தில் புட்டு புட்டு வைத்துள்ளார்.
மண்ணின் வளத்திற்கு தேவைப்படும் நைட்ரேட்டிற்காக பெரு, பொலிவியா போன்ற நாடுகள் 'பசிபிக் போர்' எனப்படும் நைட்ரேட் போரை சந்தித்து இருக்கின்றன. பறவை எச்சத்தில் நைட்ரேட் இருக்கின்றன என்ற காரணத்தினால் பெரு போன்ற நாடுகளை முதலாளித்துவ நாடுகளின் கார்ப்பரேட்டுகள் பாடாய்படுத்தியுள்ளன.
பெருநாட்டில் உள்ள ஏண்டீஸ் மலை தொடரில் மிகவும் பழமையான வேளாண்மை நாகரிகத்தினை கார்ப்பரேட் முட்டாள்தனம் சீரழிக்க பார்த்ததும் பின்னர் அந்த விவசாயிகளிடமே பாடம் கற்றதும் சுவாரசியமான கதை.
நிலம் கையகப்படுத்தும் திட்டத்தின் மூலம் விவசாயிகளின் சொந்த இடங்களை பிடுங்கி அங்கு சோயா பயிரிடும் கார்ப்பரேட்டுகளின் சூழ்ச்சி, வேர்க்கடலை திட்டம் என்னும் பெயரில் பிரிட்டனின் வேர்க்கடலை சாகுபடிக்காக ஆப்பிரிக்க நிலங்களை கைப்பற்றி, போருக்காக பயன்படும் டாங்குகளை புல்டோசர்களாக மாற்றி ஒட்டுமொத்த நிலங்களையும் தரிசு நிலங்களாக மாற்றி தொல்குடி விவசாயிகளை கொத்தடிமைகளாக மாற்றிய வேர்க்கடலை சாகுபடி என்று திட்டங்களின் பெயர்கள் மட்டும் மாறினவே ஒழிய விவசாயிகளின் சீரழிவு மட்டும் மாறவே இல்லை.
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாக்லேட்டுகளை உருவாக்கும் கோக்கோ பயிர்களை வளர்க்க, அந்த குழந்தைகளையே அண்டை நாடுகளிருந்து கடத்திக் கொண்டு வந்து அவர்களை கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்கும் இரக்கமற்ற கார்ப்பரேட்டுகள், இந்த கோகோ பயிர்களுக்காக பெருவாரியான காடுகளை அழித்து சூழலியலை பெரும் ஆபத்திற்கு தள்ளுகின்றன. இதேபோன்று எத்தியோப்பியாவின் காப்பி உற்பத்தியில் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் களவாணித்தனத்தினால் அந்நாடு பெரும் அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது.
சோவியத் ஒன்றியத்தின் பருத்தி சாகுபடி திட்டத்தினால் ஏரல் கடல் என்று அழைக்கப்பட்ட 68,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட உலகின் நான்காவது மிகப்பெரிய ஏரி இன்று மனிதனால் உருவாக்கப்பட்ட மாபெரும் பாலைவனமாக மாறிய மோசமான நிகழ்வு மிகவும் அதிர்ச்சி தரக்கூடிய ஒன்று.
இதேபோன்று இந்தோனேசியாவின் பெரும் அளவிலான காடுகளை எரித்து உருவாக்கப்படும் பாமாயில், அதனால் ஏற்படும் சூழலியல் மாற்றங்களும் மாசுபாடுகளும், உயிரி பிளாஸ்டிக் என்ற பெயரில் வேளாண்மை உணவு பயிர்களை மக்களுக்கு புரதமாக மாற்றாமல் பிளாஸ்டிக்களாக மாற்றும் கொடுமை என ஒவ்வொரு திட்டங்களும் மக்களையும் விவசாயிகளையும் அழித்துவிட துடிக்கின்றன.
கார்ப்பரேட்டுகளுக்கு தேவைப்படும் பணப்பயிர்களைவிட நம் மக்களுக்கு தேவைப்படும் உணவுப் பயிர்களை பயிரிடுவது எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் முக்கியமாகும். இத்தொடரில் இறுதியில் ஒரு கேள்வி கேட்டு முடிக்கிறார் சூழலியலாளர் நக்கீரன் அது உலகப் பசிக்கு உணவா? கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கச்சா பொருளா? முடிவு நம் கையில் .