வயோதிக விவசாயி, தன் பேரனுடன் குளிர் நகரம் ஒன்றில் இருந்த பண்ணையில் வசித்தார்.
தினமும் அதிகாலையில், கதகதப்புக்காக அடுப்பின் அருகே அமர்வார்.
அப்போது பகவத்கீதை படிப்பார். இவர் என்ன செய்கிறாரோ, அதை அவரது பேரனும் அப்படியே செய்வான்.
ஒரு முறை தாத்தாவிடம், ""உங்களைப்போல் நானும் கீதை படிக்கிறேன்.
ஆனால், அர்த்தம் புரியவில்லை. இதை இப்படி கஷ்டப்பட்டு படிக்க என்ன தேவை இருக்கிறது?'' என்றான்.
குளிருக்காக அடுப்பில் கரி போட்டுக் கொண்டிருந்த தாத்தா, கரி இருந்த கூடையைச் சிறுவனிடம் தந்து,
""இதை ஆற்றுக்குக் கொண்டு போய் நிறைய தண்ணீர் பிடித்து வா,'' என்றார்.
பேரனும் தண்ணீர் எடுத்தான். வீடு திரும்புவதற்குள் தண்ணீர் ஒழுகிவிட்டது.
தாத்தா அமைதியாக, ""நீ இன்னும் வேகமாக வா,'' எனக்கூறி மறுபடியும் அனுப்பி வைத்தார்.
இம்முறை சிறுவன் ஓடி வந்தான். ஆனாலும், கூடை காலியாகி இருந்தது.
அது இயலாத காரியம் என்று புரிந்து கொண்டவன், ""போங்க தாத்தா!
இது தேவையில்லாத வேலை,'' என்றான்.
அதற்கு முதியவர், "" எது தேவையில்லாதது? முதலில்,
நான் கூடையை கொடுத்த போது, கரி ஒட்டிக்கொண்டு மிகவும் கருப்பாக இருந்தது.
ஆனால், அடிக்கடி தண்ணீரில் அமிழ்த்தி எடுத்ததால், அது இப்போது சுத்தமாகி விட்டது.
இதே நிலை தான் நமக்கும். கீதையைப்படிக்கும் போது,
அதன் அர்த்தம் உனக்கு புரியாமலோ, நினைவில் நிற்காமலோ போகலாம்.
ஆனால், இளமை முதலே தொடர்ந்து படித்தால், மனதில் குழப்பத்திற்கே இடம் கொடுக்க மாட்டாய்.
நல்லெண்ணங்களை நிறைத்து சுத்தமாக வைத்திருப்பாய்.
அதுதான் கீதையின் மகிமை,'' என்றார்.
சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்