Breaking News :

Saturday, December 21
.

நூலின் பெயர்: தனியொருத்தி


நூலின் பெயர்: தனியொருத்தி
ஆசிரியர்: நாடோடி இலக்கியன்(இயற் பெயர் பாரி)
பதிப்பகம் :  நாற்கரம் வெளியீடு.

வானொலி பெட்டி மட்டுமே இருந்த அந்தக் கிராமத்து வாழ்க்கையில் "குயில் பாட்டு ஓ  வந்ததென்ன இளம் மானே"
என கூவிய அந்தக் குயிலின் ஓசைக்குள் கிறங்கி போனவர்களில் நானும் ஒருவன்.

எஸ் ஜானகி எனும் இசைக் குயிலின் பாடல்களைக் கேட்டு சிலாகித்து இருந்தவனுக்குத் திடீரென ஒரு குரல் பெயர் தெரியாமல் காதுக்குள் நுழைந்து, மண்டைக்குள் குடைந்து, எதையோ செய்வது என்னையே அறியாமல் திரும்பத் திரும்ப வானொலியில் ஒலிபரப்பும் போதெல்லாம் கேட்கவே தோன்றியது அந்தக் குரல், கேட்கும்போதெல்லாம் அனிச்சையாக" என்னா வாய்ஸ் டா" என்று சொல்லியது இன்றளவும் தொடர்கிறது, "எத்தனை முறை தான் சொல்லுவீங்க ப்பா" என்கிறார்கள் பிள்ளைகள்.

பாடுபவர்கள் தான் படத்தில் நடிக்கிறார்கள் என நம்பிய பள்ளி சிறுவனுக்கு அதைத் தாண்டிய வேற ஆராய்ச்சி அப்போதைக்குத் தேவையா இல்லை.
குயில் பாட்டில் ஆரம்பித்து, என்னுள்ளே என்னுள்ளே என நுழைந்து, மாலையில் யாரோ மனதோடு பேச என சொக்கி தான் போனோன், பாடல்கள்  கேட்கமட்டுமே பழகிய நாட்கள் அது,எப்போதாவது பார்பதற்கு வாய்க்கும்.

வானொலியில் அவ்வப்போது பெயர்களைச் சொல்லியும் பாடல்கள் ஒலிப் பரப்புவது உண்டு. முதல்முறையாகச் சொர்ணலதா எனக் கேட்டதும் குரலைப் போன்றே வித்தியாசமாக இருக்கிறதே பெயர் எனத் தோன்றியது.
நான் தான் பித்துநிலையில் இருந்தேன், என நினைக்கையில் நூலாசிரியர் என்னைவிடப் பல மடங்கு முன்னால் இருக்கிறார் எனத்தான் தோன்றியது,இந்த புத்தகத்தைப் படித்து முடித்தபின்.

"ஸ்வர்ணலதா எனும் இசை அரக்கி" எனும் தலைப்பு கூட இந்தப் புத்தகத்திற்குப் பொருத்தமாக இருக்குமோ எனத் தோன்றியது.
 மழலை மாறாத அந்த இளம் பிள்ளையின் மனதும் அவ்வப்போது வந்து செல்லாமலும் இல்லை.

பாடலை ஆசிரியர் வரிசை படுத்திய விதத்தில் வழக்கமாய்ச் சொல்லும் பள்ளிச் சிறுவனை போல "இஃது என் பாட்டு என்று உரிமைக் கொள்ளத் தான் துடிக்குது மனது. அந்த அளவுக்குப் பல பாடல்கள் திரும்பத் திரும்பக் கேட்டதுண்டு. எனக்கு மட்டுமே அந்தப் பாடல் என எண்ணியதுண்டு.

என் கைபேசிக்கு அழைப்பவர்கள் பேசி முடிந்த பின், திரும்ப ஒருமுறை போன் பண்றேன் அந்தப் பாடலை ஒரு முறை கேட்கிறேன் என்று சொல்லியதுண்டு. அப்படியாக "என்னுள்ளே என்னுள்ளே" பாடல் பல நாட்கள் என் கைப்பேசியின் மூலமாகப் பலருக்கு, பல மலரும் நினைவுகளைத் தூண்டியதாக கூடச் சொல்லலாம்.

நூலாசிரியர் சொர்ணலதா அவர்களின் நான் அறியா பாடல்களை எல்லாம் வரிசைப்படுத்தி ஆசார்யபடுத்தினார்  எனச் சொல்வேன்.

அந்த அளவுக்கு அவரின் ரசனையும் அவர் ஒவ்வொரு பாடல்களையும் ரசித்து, சிலாகித்து எழுதியதும் அழகு,பாராட்டுகள்,.

சில பாடல்கள் கேட்டிருந்தும் அவர் தான் பாடினார் என்றரியாமல் இப்போது தான் தெரிந்துக் கொண்டேன்.

ஒவ்வொரு பாடலையும், சில முதல் முறையாகவும், சில மீண்டும் ஒருமுறை எனும் கணக்கில் ஒலிக்கக் கேட்டது மகிழ்ச்சி தான்.

 சில நாட்களாய் தொடர்ந்து சொர்ணலதாவின் பாடல்கள் வீட்டில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

ஸ்வர்ணலதா அவர்களின் நான் ரசித்த பாடல்கள் என அல்லது நான் பலமுறை கேட்டு ரசித்தவை என வரிசைப்படுத்தியதன் பட்டியல்
1.குயில் பாட்டு ஓ வந்ததென்ன
2.என்னுள்ளே என்னுள்ளே
3.மாலையில் யாரோ மனதோடு பேச
4.ஆட்டமா தேரோட்டமா
5.மாசி மாசம் ஆளான பொண்ணே
6.என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட
7.எவனோ ஒருவன் வாசிக்கிறான்
8.மலைக்கோயில் வாசலில்
9.அடி ஆச மச்சான் வாங்கித் தந்த மல்லிகை பூ
10.ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்
11.போறாளே பொன்னுத்தாயி
12.திருமண மலர்கள் தருவாயா
13.துளித்துளியாய் கொட்டும் மழை துளியாய்
14.அடி ராக்கம்மா கையத்தட்டு
15.போவோமா ஊர்கோலம்
 16.வெடலை புள்ள நேசத்துக்கு
17.வெண்ணிலவே வெண்ணிலவே
18.குளிருது குளிருது இரு விழி கலந்ததும்
19.மெல்லிசையே
20.விடைகொடு விடைகொடு விழியே
21.நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்
22.நான் ஏரிக்கரை மேலிருந்து
23.அந்தியில வானம்

 இன்னும் பல....

யூகி சேது அவர்களின் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆர்மேனியம் வாசித்துக் கொண்டே பாடிய சொர்ணலதா அவர்களை முதன்முதலாகப் பார்த்தபோது இவரா அவர்? என தான் நினைத்தேன்.

அவ்வளவு பொறுமையாகப் பதில் அளித்துக் கொண்டிருந்தவரின் பாடல்கள் வேறு ஒரு பரிணாமத்தில் தான் காதுக்குள் நுழைந்தன என்பதன் அதிர்ச்சி தான்.

அதே நேரம் பல பாடல்கள் யார் பாடியது என்று அறியாமலே பலமுறை கேட்டதுண்டு பொதுவாகக் குத்துப் பாடல்கள் இந்த வரிசையில் வரும்.
அப்படி ஒரு மாயம் செய்திருந்தது அவரின் குரல்.

 நூலாசிரியர் சொல்வது போல இளையராஜா அவர்களின் இசையமைப்பில் ஜொலித்தது போல மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் குறைவான பாடல்களே பிரபலமானது எனத்தான் எனக்கும் தோன்றியது.

ஆசிரியர் சொன்னது போலவே "இளையராஜாவை தவிர்த்து மற்ற இசையமைப்பாளர்கள் காதல், டூயட் பாடல்களுக்கு ஸ்வர்ணலதாவின் குரலை அவ்வளவாய் பயன்படுத்தி இருக்காத ஒரு விஷயத்தை ஒப்பிட்டு அளவில் கவனிக்கலாம்" என்பதும் சரிதான்.

70, 80 மற்றும் 90களில்  பிறந்து வளர்ந்தவர்களில் பலர் சொர்ணலதா குரலுக்குக் கிறங்காதவர்கள் இருப்பது குறைவுதான் எனலாம்.

பெண் எஸ்பிபி என பலரும் புகழ,அவரையும் தூக்கி சாப்பிடும் அளவுக்குப்  பாடல்களை பாடியவர் சொர்ணலதா அவர்கள் என்பது உண்மைதானே.
குரலிலே மாயாஜாலம் செய்தவர் திடீரென மாயமான தான் வாழ்வின்  மிகவும் பெரும் வருத்தம்.

தமிழ் மட்டுமல்லாது வேற்று மொழி பாடல்களையும் கேட்டு அதைப் பட்டியலிட்டதும் எழுத்தாளருக்கு பாராட்டுக்கள்.

"ஸ்வர்ணலதா எனும் இசை அரக்கி" எனும் தலைப்பு கூட இந்தப் புத்தகத்திற்கு பொருத்தமாக இருக்குமோ இனத் தோன்றியது .
மன்னிக்கவும்  சொல்லத்தான் நினைக்கிறேன் "தன்   பித்து நிலையினை எழுத்துகளின் மூலம் மற்றவரையும் பித்து முத்த செய்யலாம் எனும் வித்தையை நூலாசிரியர் வெகு நேர்த்தியாகக் கையாண்டு இருக்கிறார் என்பேன், உண்மையில் படித்துக்கொண்டே,அவர் பட்டியலிட்ட பாடல்களை கேட்டும் ரசிக்காமல் நகர முடியவில்லை.(என்ன பாஸ் இப்படிப் பண்ணிட்டீங்களே)..

வானொலிப் பெட்டி மட்டுமே இருந்த அந்த நாட்களில், பாட்டுப் புத்தகங்கள்  வைத்துப் பாடல்கள் பாடி மகிழ்ந்த அந்த நாட்களைப் போல் இல்லாமல்,தொலைத் தொடர்பு சாதனங்கள் பெருகி இன்று கைபேசியில் அனைத்தும் கிடைக்கின்ற வேலையில் பாடல்கள் கேட்பது குறைந்தும் போனது அந்த குறையை இந்த புத்தகம் படிக்கையில் ஒவ்வொரு பாடலாக கேட்டதும் மிகவும் மகிழ்ச்சியாகத் தான் இருந்தது.

தெரியவில்லை எத்தனை நாட்கள் நூல் ஆசிரியர் பட்டியலிட்ட பாடல்களைக் கேட்டு வீட்டுக்குள் ரகளை ஏற்படுத்தப் போகிறேனோ தெரியவில்லை..
ஸ்வரங்களின் அரசி, ஆலாபனை அரசி, ஹம்மிங்  குயின் , பலர் மனங்களை கொள்ளை கொண்ட தனியொருத்தி, பாடலைக் கேட்டு ரசிக்கிகிறேன் முடிந்தவுடன் அடுத்த பாடல் ஒலிக்கும் இடைவெளியில் திடீரென வானத்தில் காணாது போன நட்சத்திரங்களைப் போல அவர் இல்லாமையை உணர்கிறேன்.

 மண்ணை ஆண்ட இசை அரசி விண்ணுலகிலும் பூ மேடை இட்டுக் கச்சேரிகள் அரங்கேற்றிக் கொண்டிருப்பாரோ. என்றென்றும் பாடல்களின் வழியே வாழும் இந்த தனி ஒருத்தி அழியா பிறப்பெடுத்தவர்,பாடல்களின் வழியே வாழ்ந்துக் கொண்டே தான் இருப்பார்..

நன்றி!
- ஜானகிராமன்(கிருஷ்)
கடுக்கலூர்..

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.