ஆசிரியர்: ‘வெண்ணிற இரவுகள்’ கார்த்திக்
பதிப்பகம்: நன்செய் பிரசுரம்
விலை: ₹100
யூடியூபர்(Channel Name: White Nights Karthi)
எழுத்தாளர், ஆவணப்பட இயக்குனர்,சமூக செயற்பாட்டாளர் என பன்முகம் கொண்ட அன்பு அண்ணன் தோழர் கார்த்திக் அவர்கள் எழுதிய இந்த புத்தகத்தைப் பற்றி பார்ப்போம்.
பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் படங்களை பற்றிய விமர்சனப்பார்வையே இந்த புத்தகம். விமர்சனம் என்றால் அந்தப் படத்தின் கதை,திரைக்கதைகளின் பலம், பலவீனம் போன்றவை மட்டுமல்லாமல் அந்தப் படங்கள் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள், அந்தப் படங்களில் உள்ள வர்க்க வேறுபாடுகள், சிறுபான்மையினர் மக்கள் எப்படி சித்தரிக்கப்படுகிறார்கள், அந்தப் படங்கள் எப்படி வன்முறைகளை இயல்பாக காட்டுகிறது அதை எப்படி தற்கால இளைஞர்கள் உள்வாங்கிக் கொள்கிறார்கள் என்பதை பற்றி இந்த புத்தகம் பேசுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய படங்களை ஒவ்வொன்றாக விவரிக்கிறது இப்புத்தகம்.
மாநகரம் படத்தின் விமர்சனப் பார்வையை பார்க்கும் பொழுது ஒரு படம் பார்த்த உணர்வு தான் நமக்கு எழுகிறது அந்த அளவுக்கு நுணுக்கமாக படத்தில் கூறப்பட்ட சின்ன சின்ன விடயங்களை கூட விவரிக்கிறார் எழுத்தாளர் மேலும் சில முக்கியமான காட்சிகளில் கேமராவின் கோணம் எப்படி அந்த காட்சிகளுக்கு ஏற்ப அசைந்து கொடுக்கிறது என்பதனை படித்த பொழுது எனக்கு முதலில் தோன்றியது எத்தனை தடவை இவர் இந்த படத்தை பார்த்திருப்பார் என்றுதான் அந்த அளவுக்கு எழுத்தாளரின் கடின உழைப்பு தெரிகிறது.
இதே போல ஒவ்வொரு படங்களை பற்றியும் நுணுக்கமாக எழுதி இருக்கிறார் எழுத்தாளர் கார்த்திக் அவர்கள்.
LCU உலகம் எனும் பிரம்மாண்ட வணிகச் சந்தை, மக்கள் மத்தியில் அந்தப் படங்களுக்கு உள்ள எதிர்பார்ப்புகள் என ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது,
ஆனால் அந்த பிம்பக்களுக்கு ஏற்ப நல்ல படங்கள் கொடுக்கிறார்களா என்பது தான் கேள்வி?. பலவீனமான திரைக்கதையை மறைக்க அதிகளவு வன்முறை காட்சிகளை சேர்ப்பது அல்லது நம் நாட்டில் புழக்கத்தில் இல்லாத ஆயுதங்கள்,போதை வஸ்துகளை வைத்து காட்சிகள் ஓட்டுவது என ரசிகர்களை எவ்வாறு இந்த வகை படங்கள் ஏமாற்றுகிறது என்பதை பற்றி கேள்வி எழுப்பி இருக்கிறார் எழுத்தாளர்.
இந்த புத்தகத்தின் நோக்கம் படங்கள் எவ்வாறு பண்டமாக சுருக்கப்பட்டு இதுதான் கலை என்று ரசிகர்களிடம் மடைமாற்றப்பட்டுள்ளது என்பதை வெளிக் கொணர்வதே. சினிமாவை நேசிக்கும்,படங்கள் அதிகமாக பார்க்கும் நபர்கள் அனைவருக்கும் இந்த புத்தகம் பிடிக்கும்.
நூல் வேண்டுவோர் தொடர்புக்கு: 9486381010 (whatsapp only)