Breaking News :

Saturday, May 03
.

சீனப் பெண்கள் - சொல்லப்படாத கதை!


புத்தகத்தின் பெயர் : சீனப் பெண்கள் - சொல்லப்படாத கதை
ஆசிரியர் பெயர் : சின்ரன்

பெண்கள் பற்றி சொல்லப்படாத பேசப்படாத எத்தனை எத்தனையோ கதைகள் உலகம் முழுதும் இருக்கிறன. அந்த கதைகள் எல்லாம் பொதுவெளிக்குள் சொல்லப்படும் போது தான் அவைகள் குறித்தான பேச்சுகள் உருவாகத் தொடங்குகின்றன. அவற்றிலிருந்து தான் ஒரு சமூகம் நாம் இன்னும் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பது குறித்தான புரிதலை உருவாக்கிகொள்ள முடியும்.

சின்ரன், சீனாவின் மிகப் பிரபலமான வானொலி தொகுப்பாளினியாக 1989 ஆம் ஆண்டு முதல் 1997 ஆம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார். ஊடக அனுபவத்தில் தான் சந்தித்த பெண்களின் உண்மை வாக்கு மூலங்களை ஆதாரத்துடன் மிகத் துணிச்சலாக சின்ரன் எழுதிய புத்தகம்தான் THE GOOD WOMEN OFCHINA: HIDDEN VOICE. சீனாவின் அனைத்து தரப்பு பெண்களையும் நேரிடையாக சந்தித்து நேர்காணல் கண்டு, உண்மை சம்பவங்களின் தொகுப்பாக இந்தப் புத்தகத்தை கொண்டு வந்துள்ளார்.

சீனாவின் அரசியல் மாற்றமும் அதனால் பெண்கள் மேல் ஏவப்பட்ட பாலியல் வன்முறைகள், பெண்குழந்தைகள் தொடர்பான பாலியல் வன்முறைகள், ஆண் குழந்தைகளுக்கு சீனாவில் கொடுக்கப்படும் முன்னுரிமைகள், சீனாவில் பேசவே தடை செய்யப்பட்ட லெஸ்பியன், ஹோமோ செக்ஸ் குறித்தும், சீனா சமூகத்திலும் கலாச்சாரத்திலும் பாலியலின் பங்கு குறித்தும் கருத்துக்களை முன்வைத்த முதல் புத்தகம் இதுதான் என இப்புத்தகம் அடையாளப்படுத்தப்படுகிறது. சீன நாட்டைப் பொறுத்தவரை சின்ரன் செய்தது மிகப் பெரிய அத்துமீறல். இதனால் சின்ரனுக்கு, சமூகத்திலிருந்தும் சீன அரசாங்கத்திடமிருந்தும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது என்று கூறப்படுகிறது. தொடர் அச்சுறுத்தல் காரணமாக அவர் சீனாவை விட்டு வெளியேறி லண்டனில் குடியேறிவிட்டார் என்றும் இந்த புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து இரண்டு விஷயங்கள் தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது.

கருத்து மற்றும் ஊடக சுதந்திரம் எந்த அளவில் சீனாவில் அனுமதிக்கப்படுகிறது என்பதை நாமே கணக்கிட்டு கொள்ளமுடிகிறது. அடுத்ததாக அத்துமீறல்களையும் கொடூரங்களையும் எதார்தத்தையும் பேசினால், அது யாராக இருந்தாலும் நாடுகடத்தப்படுவதுடன் உயிருக்கு அச்சுறுத்தலும் ஏற்படும் என்பதை பல நாடுகள் உணர்த்துவதைக் காண முடிகிறது. சிரியாவின் பத்திரிகையாளினி சமர் யாஸ்பெக்-க்கு நேர்ந்த அனுபவங்கள் அதற்கு நல்ல உதாரணம்.

ஒரு கம்யூனிச நாட்டில் பெண்களுக்கென என்ன சலுகை இருக்கிறது. பெண் என்பவள் சீனாவில் என்னவாக இருக்கிறாள். ஒரு தங்கையாக, மகளாக, தாயாக, போராளியாக பரிமாணம் எடுக்கும் பெண்களை ஆண் சமூகம் எப்படி பாவிக்கிறது என்பதை பத்திக்கு பத்தி இந்த புத்தகம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. உயிரை மாய்த்துக்கொள்ளாமல் மேற்சொன்ன ஒவ்வொன்றையும் எப்படி இந்தப் பெண்கள் கடந்தார்கள் என்பது வியப்பாகவே இருக்கிறது.

புத்தகத்தின் வழியே சில சம்பவங்களை பார்க்கலாம். 60 வயது கிழவர் 12 வயது பெண்ணை அழைத்துவந்து, திருமணம் செய்து, அவள் ஓடிவிடாதபடி இரும்பு சங்கிலியால் பிணைத்து வைத்திருந்திருக்கிறார். அந்த சிறுமியின் கையில் ரத்தம் வழிந்து கொண்டே இருக்கிறது. காவல் அதிகாரிகளும் போக மறுக்கும் அந்த ஊருக்குள் சின்ரன் சிறுமியை காப்பாற்ற ஒரு காவல் அதிகாரியுடன் உள்ளே நுழைகிறார். கிராமங்களில் அரசர்கள்கூட தொடுவானம் போல நெருங்க இயலாத தொலைவில் இருப்பார்கள் என்று கூறப்படும் இடத்தில் எப்படி அந்தப் பெண்ணை மீட்டு வந்திருப்பார்கள்?

அடுத்தது, இராணுவத்தில் வேலை செய்யும் அப்பா தன் 11 வயது மகளை தொடந்து மிரட்டியும் அச்சுறுத்தியும் துன்புறுத்தியும் பாலியல் வல்லுறவு கொண்டதை விவரிக்கும் போது, மிக மோசமான மனநிலைக்கு நம்மை அந்தப்பக்கங்கள் தள்ளிவிடுகின்றன. "சாவு வராதா என நான் கதறியிருக்கிறேன்" என்று அந்த சிறுமி சொல்லும்போதும், "நீ இனி பிய்ந்த செருப்பு போல் எதற்கும் உதவாதவள்" என அந்த அப்பன் சொல்லும்போதும், யாரொருவராகினும் அந்த வரிகளைக் கடந்து போக முடியுமா?

அடுத்தது...பூகம்பத்தில் சிக்கிய 14 வயது பெண்ணை கடத்திக்கொண்டு போய் பலர் சேர்ந்து கூட்டு வன்புணர்வு செய்துவிட்டு புதருக்குள் தூக்கி போட்டுவிட்டு சென்றுவிடுகிறார்கள் . அந்த பெண்ணைக் கண்டு பிடிக்கும்போது அரைகுறை நினைவோடு, மனம் பிறழ்ந்து யார் அவளை தொட்டாலும் தன்னை புணரத்தான் வந்திருக்கிறார்கள் என தனது காற் சட்டையை தானே கழட்டிவிடும் நிலையில் இருப்பார்.
அந்தச் சின்னப்பெண்ணின் அம்மா ஒரு இராணுவ அதிகாரி.

வல்லுறவு செய்யப்பட்ட பெண்ணின் தம்பி பூகம்பத்தில் இரு கால்களை இழந்திருப்பார். இரண்டு ஆண்டுகள் சிகிச்சைக்குப் பிறகு மனப்பிறழ்விலிருந்து வெளிவரும் பெண், நேர்ந்துவிட்ட துயரிலிருந்து தப்ப முடியாமல் தற்கொலை செய்துகொள்வாள். பிள்ளைகளுக்கு நேர்ந்த துயரம் தாங்கமுடியாமல் அப்பா மாரடைப்பில் போய்ச் சேர்ந்துவிடுவார். இராணுவ அதிகாரியான அந்த அம்மா சின்ரனிடம் இதைச் சொல்லும்போது 20 ஆண்டுகள் கடந்திருந்தது. ஆனால், அவரின் வலிமட்டும் அப்படியே தேங்கியிருந்தது.

புரட்சிப் படையில் சேர்ந்து நாட்டிற்கு சேவை செய்ய மிகுந்த நம்பிக்கையுடன் சென்ற ஓர் இளம் பெண்ணை அந்த புரட்சிப் படை எப்படியெல்லாம் அவளின் கனவை சிதைக்கிறது. புரட்சி என்ற வார்த்தை பெண்களுக்கு கொடுத்த இடம் என்ன என்று அறியும்போது இதயம் வெடிக்கிறது.

தன் காதலுக்காக 45 ஆண்டுகள் காத்திருந்த ஒரு பெண்ணைப் பற்றிய வாழ்க்கை ஒரு காவியக் கதைபோல சொல்லப்பட்டிக்கும் விதம் வலி மிகுந்த வனப்பு . அதை சின்ரன் மிக அழகாகக் கூறியிருக்கிறார். கதைக்குள் ஒரு கதை போல சீன வரலாற்றுக்கதை ஒன்று இந்த வாழ்க்கைக்குள் வருகிறது.
தைக்கு ஏரியை ஒட்டி பிலோ வசந்த தேயிலை காடு இருக்கிறது.

பிலோ என்ற பெண் தன காதலன் கொடிய நோயால் அவதிப்படுவதைக் கண்டு அவனை காப்பாற்ற தன்னுடைய ரத்தத்தை ஊற்றி அந்த தேயிலை காட்டை வளர்த்தாளாம். அந்த தேயிலை துளிர்களை வைத்து அவனுக்கு சிகிச்சை அளிக்க அவன் குணமடைய இவள் பலவீனமடைந்து இறந்து போனாளாம். அந்த ஏரியை காணக்கூடிய அளவில் தன் வசிப்பிடத்தை அமைத்துக்கொண்ட அந்த பெண், 45 ஆண்டுகளுக்கு பிறகு பிரிந்த காதலனை சந்திக்க நேர்கிறது.

எந்த அமரக்காதல் கதையைவிடவும் சற்றும் குறைந்ததில்லை முகம் தெரியாத இந்த பெண்ணின் கதை.
இப்படிப் பல கதைகள் நம்மை உலுக்கி விடுகின்றன.

மேலும் ஆண்குழந்தைகளுக்கு சீனாவில் கொடுக்கப்படும் முன்னுரிமைகள், சீனாவில் பேசவே தடை செய்யப்பட்ட லெஸ்பியன், ஹோமோசெக்ஸ் சீன சமுகத்திலும் கலாச்சாரத்திலும் பாலியல் குறித்த கருத்துக்களைப் பேசும் முதல் புத்தகம் இது.
இந்தப் புத்தகம் சீனப்பெண்களின் ஒடுக்குமுறை பற்றியும் நவீன பெண்களின் புதிய வாய்ப்புகள் பற்றியும் வெளிப்படையாக உண்மைக் கருத்துக்களை வெளிப்படுத்துகிறுது. சீன வரலாறு மிக நீண்ட வரலாறு. ஆனால் ஒரு சில வருடங்கள் முன்புதான், பெண்களுக்கான வாய்ப்புகளுக்கு ஆண்களிடமிருந்து அங்கீகாரம் கிடைத்தது.

1930 களில் வெளிநாடுகளில் பெண்கள் பாலியல் சுதந்திரம் கேட்டுப் போராடிய காலகட்டங்களில்தான், சீனப்பெண்கள் ஆண்களின் உலகத்தை எதிர்கொள்ளவே ஆரம்பித்தனர். இனி ஆணின் காலடியில் விழுந்து கிடக்க இயலாது என்றும், தங்கள் திருமணங்களைத் தாங்களே முடிவு செய்வோம் என்ற சுதந்திர சிந்தனைக்குள் வந்தனர். அது எதுவானாலும், இன்று வரை சீனப்பெண்களுக்கு அவர்களது சமூகப் பொறுப்பு என்னவென்றோ அவர்களது உரிமை என்னவென்றோ தெரியாது என கூறுகிறது.

ஒட்டுமொத்தமாக இந்நூல் சீனாவின் நவீன நாகரிகப்பெண்களிலிருந்து பழங்குடிப்பெண்கள் வரையான இதுவரை சொல்லப்படாத பல கதைகளைச் சொல்கிறது. சீன பெண்களின் நிலை குறித்து அறிய இந்நூல் உதவும். ஜி.விஜயபத்மா அவர்களின் மிக நேர்த்தியான மொழிபெயர்ப்பு தங்கு தடையில்லாமல் சின்ரன் பிரதிபலிக்கும் உணர்வுகளைப் பேசுகிறது.

தமிழில் : ஜி.விஜயபத்மா
பதிப்பகம் : எதிர் வெளியீடு
பக்கங்கள் : 316
விலை : ₹280

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.