Breaking News :

Friday, May 02
.

தம்பியை மணம் முடித்த பேரழகி கிளியோபாட்ரா?


கி.மு 57 ஆம் ஆண்டில் எகிப்து நாட்டை தாலமி அயோ லேட்டஸ் (Ptolemy 117 -51 BC) என்ற மன்னர் ஆண்டு வந்தார். அவருடைய மகள் கிளியோபாட்ரா. தாலமி இறப்பதற்கு முன் “கிளியோபாட்ராவுக்கும், அவள் தம்பி ஏழாவது தாலமியும் திருமணம் செய்து கொண்டு நாட்டை ஆள வேண்டும்.” என்று அறிவித்தார். தாலமி வம்சத்தில் பிற வம்சத்தின் ரத்தக் கலப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இத்தகைய திருமணங்கள் அக்காலத்தில் நடைபெற்றன.

தந்தையின் விருப்பப்படி கிளியோபாட்ரா தன் தம்பியை மணந்து கொண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்றாள். அப்போது கிளியோபாட்ராவுக்கு வயது 16. கணவனாகி விட்ட தம்பிக்கு வயது 10.

அமைச்சர்களும் பிரபுக்களும் தாலமியை தங்கள் கைப்பாவையாக்கிக் கொண்டனர். அவர்களின் தூண்டுதலால் கிளியோபாட்ராவை தாலமி விரட்டி அடித்து விட்டு ஆட்சியை கைப்பற்றி கொண்டான்.

கிளியோபட்ரா – சீசர்:

சிரியாவுக்கு தப்பி ஓடிய கிளியோபாட்ரா, ஆட்சியை மீண்டும் பிடிக்கப் படை திரட்டி வந்தாள். இந்த சமயத்தில் ரோம் நாட்டை ஆண்டு வந்த ஜூலியர் சீசர் (கி.மு 63 – 14 )எகிப்து மீது படையெடுத்தார். அவரைக் கிளியோபாட்ரா சந்தித்து ஆதரவு கேட்டாள். கிளியோபாட்ராவின் அழகில் மயங்கிய சீசர், அவளுக்கு உதவி செய்வதாக வாக்குறுதி அளித்தார். சீசருக்கும், தாலமிக்கும் நடந்த மோதலில் தாலமி இறந்து போனான். கிளியோபாட்ராவை எகிப்தின் அரசியாக்கிய சீசர், அவளுடனேயே வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் பெயர் சிசேரியன். சில காலத்துக்கு பின் கிளியோபாட்ராவையும் மகனையும் அழைத்துக்கொண்டு ரோமாபுரிக்குச் சென்றார் ஜூலியர் சீசர்.

சீசரின் நண்பனாக இருந்த புரூட்டஸ், வேறு சில சதிகாரர்களுடன் சேர்ந்து சீசரை கோடாரியால் குத்தி படு கொலை செய்தான். ” புரூட்டஸ்... நீயுமா?”  என்று கூறிய படி உயிர் துறந்தார், சீசர். இறந்த போது சீசருக்கு வயது 49. ரோமாபுரியின் பாராளுமன்ற மண்டபத்தில் இந்தப் படுகொலை நடந்தது. சீசரின் எதிர்பாராத மரணத்தால் மனம் உடைந்த கிளியோபாட்ரா, எகிப்துக்கு திரும்பி சென்று, ஆட்சிப் பொறுப்பு ஏற்றாள்.

கிளியோபட்ரா -அன்டோனி:

சீசரின் அன்புக்குரிய தளபதி ஆண்டனி, பொதுமக்களின் ஆதரவோடு சதிகாரர்களை நாட்டை விட்டு விரட்டி அடித்தான். இந்தச் சமயத்தில், சீசரின் வளர்ப்பு மகனும், 19 வயது இளைஞனுமான ஆக்டோவியஸ் ரோமாபுரிக்கு வந்து சேர்ந்தான். அவனும் ஆண்டனியும் நாட்டை ஆண்டு வந்தனர். சீசரை கொன்ற புரூட்டஸ், கேசியஸ் ஆகியோருடன் பிலிப்பி என்ற நகரில் நடத்திய போரில், ஆண்டனியும், ஆக்டோவியசும் வெற்றி பெற்றனர். அதைத் தொடர்ந்து புரூட்டசும், கேசியசும் தற்கொலை செய்து கொண்டனர்.
ரோமாபுரியின் ஆதிக்கத்தில் அடங்கிய எகிப்துக்கு ஆண்டனி சென்றான். அங்கு கிளியோபாட்ராவும், ஆண்டனியும் முதன் முதலாக சந்தித்தனர்.
கண்டதும் காதல் கொண்டனர்.

கிளியோபாட்ராவின் அழகில் அடிமையான ஆண்டனி, எகிப்தின் தலைநகர் அலெக்சாண்டரியாவில் அவளுடன் வாழத் தொடங்கினான்.

ஆண்டனியின் உல்லாச வாழ்க்கை பற்றிய செய்திகள் ரோமாபுரியில் பரவின. அதைக் கேட்டு ஆண்டனியை மக்கள் வெறுக்கத் தொடங்கினர். ஆக்டோவியசின் (Octavian) செல்வாக்கு பெருகியது. ரோமில் தோன்றிய நெருக்கடியை அறிந்த ஆண்டனி, அந்த நகருக்கு திரும்பிச் சென்றான். ஆக்டோவியசுடன் நட்பை புதுபித்துக் கொண்டான். ஆயினும் ஆக்டோவியசின் செல்வாக்கு வளர்வதைக் கண்டு மனம் புழுங்கிய ஆண்டனி எகிப்துக்கு திரும்பி சென்றான்.

கிளியோபாற்றாவுடன் அவனது காதல் வாழ்க்கை மீண்டும் தொடங்கியது. இதனால் ஆண்டனி-ஆக்டோவியஸ் இடையிலான பகை முற்றியது.

ஜூலியர் சீசருடன் முன்பு கிளியோபாட்ரா வாழ்ந்தாள் என்றாலும் அவள் மிகுந்த காதல் கொண்டிருந்தது ஆண்டனியிடம் தான். இருவரும் உயிருக்கு உயிராக நேசித்தனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் பிறந்தன. இந்தநிலையில் எகிப்தில் ஆண்டனி அரச தர்பார் நடத்தினான். தனக்கும் கிளியோபாற்றாவுக்கும் பிறந்த குழந்தைகளுக்கும், சீசருக்கும் அவளுக்கும் பிறந்த சிசெரியனுக்கும் ஆசிய நாடுகளின் அரசுரிமையை அளிப்பதாக அறிவித்தான்.

ஆண்டனியின் இந்த அறிவிப்பு ரோமாபுரியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

கிளியோபாற்றாவுடன் சேர்ந்து எகிப்து பேரரசை உருவாக்க ஆண்டனி முயற்சிப்பதாகவும், இது ரோமாபுரிக்கு பெரிய ஆபத்தை உண்டாக்கும் அன்று ரோமானியர்கள் கருதினர்.

இதைத் தொடர்ந்து எகிப்து மீது ஆக்டோவியஸ் கி.மு 31 இல் படைஎடுத்தான். ஆகடியம் என்ற இடத்தில் ஆக்டோவியசின் கடற்படையும் ஆண்டனியின் கடற்படையும் மோதின. இதில் ஆண்டனியின் படைகள் தோற்றன.

ஆக்டேவியசுடன் சமாதானம் செய்துகொள்ள ஆண்டனி முயன்ற வேளையில், கிளியோபாட்ரா தற்கொலை செய்து கொண்டதாக பொய் வதந்தி பரவியது. அதை உண்மை என்று கருதிய ஆண்டனி “கிளியோபாட்ரா இல்லாமல் நான் உயிர் வாழ்வதா!”என்று கதறியபடி ஒரு கோடாரியால் தன் நெஞ்சை பிளந்து உயிரை விட்டான்.

ஆண்டனியின் மரணம் பற்றித் தகவல் கிடைத்த கிளியோபாட்ரா மனம் உடைந்தாள். ஆண்டனியை பிரிந்து உயிர் வாழ அவள் விரும்பவில்லை. அரசி போல தன்னை அலங்கரித்து கொண்டாள்.

மிகக் கொடிய விஷப் பாம்புகளைக் கொண்டு வரச்செய்து தன் உடல் மீது பரவவிட்டாள். பாம்புகள் அவளை கொத்தின. உடம்பில் விஷம் பரவ, அணு அணுவாக உயிர் விட்டாள் கிளியோபாட்ரா.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.