மருதன் எழுதிய தேவதைகள் சூனியக்காரிகள் பெண்கள் என்ற புத்தகமானது ஐம்பது பொருட்களின் வாயிலாக பெண்களுடைய வரலாற்றைச் சொல்கிறது. வரலாறானது ஆணுக்கானது மட்டுமில்லை பெண்ணுக்கும் தனித்த வரலாறு உண்டு என்பதை எடுத்தியம்புகிறது இந்தப் புத்தகம்.
ஏனைய அறிஞர்களைப் போலவே மனித வரலாறானது பெண்களுடனேயே தொடங்குகிறது என்பதை மருதனும் தன்னுடைய புத்தகத்தில் நிறுவுகிறார்.அதாவது தொலைந்து போன அல்லது வேண்டுமென்றே மறைக்கப்பட்ட பெண்களின் வரலாற்றை வெளியுலகிற்கு ஐம்பது தலைப்புக்களில் வெவ்வேறு பெண்களின் கதைகளினூடாக வாசகர்களிற்கு கொடுத்துள்ளார் மருதன்.
இந்தப் புத்தகமானது ஆணாதிக்க சமூகங்களுக்கு எதிரான பெண்களின் போராட்டங்களை வலியுறுத்தி, வரலாறு முழுவதும் பெண்களின் பாத்திரங்களின் பல்வேறு அம்சங்களைப் பற்றி விவாதிக்கிறது.இது பெண் அதிகாரம் மற்றும் எதிர்ப்பு,பெண்களின் உரிமைகள் மற்றும் அடையாளங்கள் தொடர்பாக பல்வேறு கலாச்சாரங்களிலிருந்து கதைகளை முன்வைக்கிறது.
பெண்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?வரலாற்றில் ஏன் அவர்கள் எந்தப் பங்களிப்பையும் நிகழ்த்தவில்லை?மனிதகுல வரலாறு என்பது முழுக்க முழுக்க ஆண்களால் மட்டுமே உருவாக்கப்பட்ட ஒன்றா?தன்னந்தனியாக ஓர் ஆண் இந்த உலகைப் படைத்து இருக்கிறானா?தன்னந்தனியாக உலக உருண்டையைத் தன் முதுகிலே கட்டி குகையில் இருந்து உருட்டி இங்கே இந்த இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறானா..?என்பதை ஆராய்வதே இந்தப் புத்தகத்தின் நோக்கம்.
இந்தப் புத்தகத்தை மருதன் எழுதத் தொடங்கியபோது இவர் சந்தித்த அனுபவங்களை தன்னுடைய முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார் அதாவது கிரேக்க தொன்மத்தில் சிசிபஸ் என்றொருவர் வருவார்.அவர் யார்,அவர் செய்த குற்றமென்ன என்பதையெல்லாம் விட கடவுள்கள் அவருக்கு அளித்த தண்டைகள்தான் உலகம் நினைவில் வைத்திருக்கிறது.ஒரு பெரிய பாறாங்கல்லை கீழிலிருந்து உருட்டி,உருட்டி மலையுச்சிக் கொண்டு சென்று நிறுத்த வேண்டும் என்பதுதான் அந்தத் தண்டனை.
சிசிபஸ் எவ்வளவுதான் உயிரைக் கொடுத்துப் போராடினாலும் அவரால் கல்லை உச்சிக்கு கொண்டு போகவே முடியாது.நான்கு அங்குலம் தள்ளினால் சரசரவென்று நான்கடி அவரையும் சேர்த்து உருட்டிக் கொண்டு கீழே பாயும்.அவ்வாறுதான் மருதனுக்கும் பெண்களின் வரலாறு தொடர்பாக நூறு பொருட்களை கண்டறிவது சுலபமானதல்ல என்றாகிவிட்டது என்கிறார்.
ஓர் உலகமல்ல.நாம் வாழ்ந்து வருவது இரு வெவ்வேறு உலகங்களில்.இதுவரை நமக்கு கிடைத்திருப்பது ஓர் உலகத்தின் வரலாறு மட்டுமே அதாவது மிகுதி சரிபாதியானவனர்களின் வரலாறு மறைக்கப்படுகிறது அல்லது கண்டு கொள்ளப்படுவதில்லை.இதுவரை நாம் கண்டிருப்பது ஒரு கண்ணின் காட்சியை மட்டுமே.இன்னொரு உலகின் வரலாற்றையும் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.மிக நீண்டகாலமாக இருளில் மூழ்கிப் போயிருந்த இந்த உலகை ரோஸாலின்ட் மைல்ஸ் போன்ற பலர் தீப்பந்தம் ஏந்திக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.அந்த உலகை தரிசிக்க எம்முடைய இன்னொரு கண்ணையும் நாம் திறந்தாக வேண்டும்.
விமர்சனத்தை தொடர்ந்து வாசிக்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.