நினைத்த நிலையை அடைய வேண்டுமானால் அதிர்ஷ்டம், சாதி பலம், பண பலம், அரசியல் பலம் இருக்கவேண்டும் என நினைத்தால் அவைகள் எல்லாம் இன்றைக்கு வேலைக்கு ஆகாது. முயற்சி, உழைப்பு இந்த இரண்டுடன் சேர்ந்த படிப்புதான் உங்களை உயர்ந்த நிலைக்கு கொண்டுபோகும்.
உங்களது குறிக்கோளை எண்ணியே ஒவ்வொரு கணமும் முன்னோக்கிச் செல்ல வேண்டும். அதற்காக சில நிபந்தனைகளை வகுத்துக்கொள்ள வேண்டும். சில தியாகங்களை செய்ய வேண்டும் . நினைத்த நிலையை அடைந்துவிட்டால் எவ்வாறு இருப்போம் என்பதை கனவு கண்டு அந்தக் கனவுகளை வெறும் எண்ணங்களிலேயே வைத்துவிடாமல் அந்த நிலையை எவ்வாறு அடைவது என்பதை பற்றி திட்டமிட வேண்டும்.
படிப்பு என்பது வேலை பெறுவதற்கும் பணத்தை ஈட்டுவதற்கும் அல்ல. படிப்பவர்கள் அனைவரும் ஞானிகளும் அல்ல. படிப்பதன் மூலம் ஒருவன் சமூக நிலையை அறிய முடிகிறது. படிப்பு என்பது பணத்தைவிட சிறந்த முதலீடாகும். பிடித்த படிப்பை ஒருவன் பயன்படுத்தினால் சமுதாயத்திற்கு எவ்வளவோ உபயோககரமானதாக இருக்கும். சிலர் தேர்வுக்கு நன்றாக படிக்க வேண்டும் என நினைத்து கடைகளில் கிடைக்கக்கூடிய அனைத்து கைடுகளையும் வாங்கி குவிப்பர். படிக்க வேண்டும் என்று நினைப்பர். ஆனால் தங்களுக்கு தெரியாமலேயே வேறொரு பிரச்சனையில் மாட்டிக் கொள்வர். அதனால் அவர்களது செயல்பாடுகள் தடைபடுகிறது. ஆதலால் ஏதோ ஒரு குறிக்கோளின் கீழே கவனம் செலுத்த வேண்டும்.
போட்டோ எடுக்கும்போது படம் சரியாக வரவேண்டும் என்பதற்காக லென்சை சரி செய்து எடுக்கும் முறையை போக்கஸ் என்பர். ஃபோக்கஸ் செய்வதென்றால் ஒரு விஷயத்தை கச்சிதமாக, கவனமாக, விவரமாக,பார்த்தல். அதே முறையைத்தான் நாம் படிக்கும் போதும் பின்பற்ற வேண்டும். புத்திசாலிகள் தமது மூளையின் ஆற்றலை 10 சதவீதம் பயன்படுத்துவதாக தெரியவருகிறது. மூளையில் உள்ள நியோ கார்டேக்ஸ் என்ற ஆலோசிக்கும் பகுதி மிகுந்த ஞாபகசக்தி உடையது. ஆனால் யாரும் அதை பயன்படுத்துவது இல்லை.
தெருப்பள்ளியில் படித்தாலும் கான்வென்ட்களில் படித்தாலும் விருப்பத்துடன் படித்தால் ஆகாயமே உங்களது எல்லை. இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவரும் ஜீனியஸ் ஆவதற்கான தகுதிகள் உள்ளன. எவ்வளவு பெரிய சமுத்திரத்தில் நீரை எடுத்து வர நினைத்தாலும் நீங்கள் எடுத்துச் சென்ற பாத்திரத்தின் அளவிற்கு மட்டுமே தண்ணீரை கொண்டுவர முடியும். நீங்கள் ஒரு சிறிய சொம்பை எடுத்துக்கொண்டு ஊரில் உள்ள குளத்தில் முக்கினாலும் அரபிக் கடலில் முக்கி எடுத்தாலும் சரி. அதன் அளவே தண்ணீரை எடுக்க முடியும். எனவே நீங்கள் நினைத்துக் கொண்ட குறிக்கோள்களை நகரத்தில் மட்டுமே சாதிக்க முடியும் என்று எண்ணுவதை விட அதை உங்கள் ஊரிலேயே செய்யலாம் என்ற முடிவுக்கு வருவது நல்லது.
உங்கள் மனதை ஒரு மேஜிக் பேப்பர் என நினைத்துக் கொள்ளுங்கள் அதன் மீது உங்களுக்கு தோன்றியதை எழுதி எனக்கு வேண்டும்… எனக்கு வேண்டும்... எனக்கு வேண்டும் என்று மூன்று முறை நினைத்துக் கொண்டால் அதை சாதிக்கும் வரை மனம் அதன் பின்னாலேயே தொடர்ந்து செல்லும். அதே விதமாக உங்களுக்கு நிகழ்ந்த கெட்ட அனுபவங்கள் அவமானங்கள் நஷ்டங்கள் போன்றவற்றை எனக்கு தேவையில்லை.., எனக்கு தேவையில்லை... எனக்கு தேவையில்லை என்று மூன்று முறை நினைத்துக் கொண்டால் மேஜிக்போல மாயமாகி விடும்.
சிறிய குறிக்கோள்களை அமைத்துக் கொள்வது வீண் என அப்துல்கலாம் கூறுகிறார். ஆதலால் பெரிய குறிக்கோள்களை நிர்ணயித்து அதை சாதிக்க வேண்டும் என்ற முடிவுடன் மனதில் இருத்தி படிக்க ஆரம்பிக்கும் போது நம்மைச் சுற்றியுள்ள தடைகள் அனைத்தும் தவிடு பொடியாகும்