Breaking News :

Sunday, May 04
.

இரவு நாவல் - ஜெயமோகன்


வெளியீடு தமிழினி சென்னை
முதல் பதிப்பு டிசம்பர் 2010
இரண்டாம் பதிப்பு டிசம்பர் 2011
பக்கம் 240 | விலை 160

மௌனமே வானமென மூடிய இரவு, பகலின் எல்லாக் களியாட்டங்களுக்கும் ஓய்வு கொடுத்து தாலாட்டும் இரவு. இரவின் வேலை என்ன? இரவில் என்னதான் நிகழ்கிறது? இரவு ஓய்வுக்கு மட்டும்தான் சொந்தமா?
என நம்முள் பல வினாக்களை எழுப்பும்படியான கதை. இரவின் மடியில் எல்லோரும் ஆழ்ந்த நித்திரையிலும் கனவுகளிலும் ஆழ்ந்திருக்க இரவை வாழ்வாகக் கொண்டு இரவில் மட்டுமே வாழ்க்கையை சிறப்பாகக் கொண்டாடும் ஒரு கூட்டத்தை நமக்கு அறிமுகம் செய்து அதன் வழியாக இயற்கையின் பேரதிசயங்களை, இயற்கையின் அதி அற்புதங்களை நம் முன் சிறப்பான காட்சிகள் என விரிய வைத்து இரவுக்கும் வாழ்க்கை உண்டு என்ற நிகழ்வை நமக்குள் உண்டாக்கும்படியான கதையாக எழுதிச் செல்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.

எளிமையான காதலை இனிமையான கதைக்குள் இயற்கையின் அத்தனை வனப்புகளுக்குள்ளும் எடுத்துக் கையாண்டு ஒவ்வொரு அத்தியாயத்திலும் இயற்கையின் அழகை, வர்ணிக்க இயலா அற்புதங்களை எழுதி  தொடர்ச்சியான நிகழ்வாக மாற்றி வாசிக்கத் தூண்டுகிறது நாவல்.

ஆடிட்டிங் பட்டையமும் நிர்வாகவியலில் முது முனைவர் பட்டமும் பெற்ற சரவணன் பங்குச்சந்தை நிறுவனம் ஒன்றில் பணிக்குச் சேர்ந்து 17 ஆண்டுகள் ஆகின்றன. வெற்றி என்பதையும் தனக்கென ஓர் இடம் பிடித்து பங்குச்சந்தையில் மிகப்பெரிய இடத்தை எட்டிய சரவணன் தான் சார்ந்த நிறுவனங்களின் வரவு செலவுகளை கவனிப்பதற்காக தனிமையான இடம் தேடி பயணிக்கிறார், அப்போது அவருக்கு கேரளாவில் எர்ணாகுளத்திற்கு அருகில் உள்ள ஒரு கானகத்திற்கு நடுவில் அனைத்து வசதிகளுடன் கூடிய மாளிகை கிடைக்கிறது. அங்கே தனிமையின் அரவணைப்பில் ஒரு புத்துணர்ச்சியாக இருக்கட்டும் என்று தனது வேலையை துவங்குவதற்காக சரவணன் குடியேறுகிறார்.

அம்மாளிகையில் இருந்து பார்க்கையில் அருகில் ஒரு வீடு பகல் பொழுது முழுதும் மூடியே கிடக்கிறது. அன்றைய இரவில் நிறைய கொண்டாட்டங்கள் நடந்ததற்கான அறிகுறிகளை காண்கிறார் சரவணன். மறுநாள் மாலையில் மனதில் ஏற்பட்ட உந்துதலின் காரணமாக அவ்வீட்டை நோட்டமிடச் செல்லும்  அவருக்கு வீட்டில் விஜயன் மேனன் என்ற நபரும் அவரது மனைவி கமலம் என்பவரும் அறிமுகம் ஆகிறார்கள். கடற்படையில் அட்மிரலாக இருந்து ஓய்வு பெற்ற விஜயன் மேனனும் அவரது மனைவி கமலமும் அங்கே குடி இருக்கிறார்கள்.

அவர்களைப் பற்றிய வாழ்க்கையின் ரகசியத்தை சரவணன் கேட்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைகிறார். இரவுப்பறவைகளாக, இரவுலாவிகளாக தம்மை நிலை நிறுத்திக் கொண்ட இருவரும் பகலைப் பார்த்ததே இல்லை. பகல் முழுவதும் உறங்கி இரவில் விழித்து தங்களின் வாழ்வை இரவிலேயே நடத்தும் அதிசய மனிதர்கள். "இரவே எங்களுக்கு மிகப்பெரிய அதிசயங்களை காண்பிக்கின்றது. உலகின் எல்லாவிதமான ஆச்சரியங்களும் இரவிலேயே நடக்கின்றன" என்று மேனன் தம்பதியினர் கூறுகின்றனர். அவர்களின் பேச்சுக்கு மயங்கி சரவணன் அந்தக் கூட்டத்தில் ஐக்கியம் ஆகிறார்.

நாட்கள் செல்கையில் அக்கூட்டத்தில் நிறைய நபர்கள் இருப்பதையும் அவர்களுக்கு இரவே வாழ்க்கை என மாறிப் போனதையும் பகல் முழுவதும் அவர்கள் உறங்கிக் கழிப்பதையும் பல ஆண்டுகளாக சூரியனையே பார்க்காத அதிசயத்தையும் சரவணன் உணர ஆரம்பிக்கிறார். இவர்களுக்கு என்று ஒரு ஆசிரமமும் அதன் தலைமைத் துறவியாக பிரசண்டானந்தாவும் செயல்படுகின்றனர்.

ஒருமுறை மேனன் வீட்டில் நாயர் மற்றும் அவரது மகள் நீலிமா நாயர் இருவரும் அறிமுகம் ஆகிறார்கள். சரவணனுக்கு நீலிமா மீது ஏற்படுகிற ஈர்ப்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது. நீலிமா கடந்த காலத்தில் மனநிலை பிறழ்ந்து இரவுலாவியாக மாறியபின் தற்போதைய நிலைக்கு வந்திருப்பது சரவணன் அறிந்து கொள்கிறார்.

ஒரு முறை ஆசிரமத்தில் உதயபானு என்ற துறவி சரவணனுக்கு இந்த நபர்களுடன் சேர்ந்து நீயும் இரவுலாவியாக மாறிவிடாதே இவர்களால் உனது வாழ்க்கை அழிந்துவிடும் என எச்சரிக்கிறார்.அதிர்ச்சியடையும் சரவணன் அந்தக் குழுவில் இருந்து விலகிச் செல்ல முடிவெடுக்கிறார். ஆனால் அவரது மனம் அதை ஏற்க மறுக்கிறது. ஒரு கட்டத்தில் சரவணனுக்கும் நீலிமாவுக்கும் ஏற்படும் மனப்பிணக்கு அவர்களை பிரிவிற்கு அழைத்துச் செல்கிறது. எதையும் தாங்க முடியாத சரவணன் பகலையும் அறிய இயலாமல் இரவிலும் முழுமையான வாழ்க்கையை வாழ முடியாமல் தவித்துப் போகிறார்.

சில நாட்களுக்குப் பிறகு நீலிமா சரவணனை அழைத்துக் கொண்டு  சரவணன் வீட்டிற்கு அருகே உள்ள காயலில் இரவு நேரத்தில் படகில் உலா செல்கிறார்கள். அங்கே பௌர்ணமியை சாட்சியாக வைத்து நட்சத்திரங்களையும் நிலாவையும் கண்ணுற்றுபடி நீலிமா தன்னையே சரவணனுக்கு ஒப்புக்கொடுக்கிறாள். இப்படியாக தனது பகல் வாழ்வை துறந்து இரவுலாவியாக முழுவதுமாக மாறிவிட்ட சரவணன் தான் சார்ந்த நிறுவனங்களிடமிருந்தான வேலையை ராஜினாமா செய்கிறார். தனது அனைத்து தொழில் சம்பந்தமான தொடர்புகளையும் துண்டித்துக் கொள்கிறார். இரவு வாழ்க்கைக்கு முழுவதுமாக தன்னை ஒப்புக்கொடுக்கிறார்.

ஒரு கட்டத்தில் மேனன் அவர்களின் மனைவி கமலம் கொலை செய்யப்படுகிறாள். ஆசிரமத் தலைவர் பிரசண்டானந்தா கொலை செய்யப்படுகிறார்.கொலைக்கான காரணம் என்ன? திடுக்கிடுகிறார் சரவணன். இறுதியில் மேனன் அவர்களும் நான் தானே உன்னை இந்த இரவு வாழ்க்கைக்கு அறிமுகப்படுத்தினேன். நீ எந்த சூழ்நிலையிலும் இரவு வாழ்க்கையை வாழாதே. இதிலிருந்து விலகிச் சென்று உனது பகல் வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள் என்று அறிவுறுத்துகிறார். நீலிமாவும் ஒரு கடிதத்தின் வழியாக இனி நீங்கள் உங்கள் போக்கிலேயே செல்லுங்கள் என்னைத் தேட வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார். இறுதியில் சரவணன் என்ன முடிவெடுத்தார் என்பதை 24 அத்தியாயங்களில் மிக அற்புதமாக தொடர்ந்து வாசிக்கும்படியான நிகழ்வுகளை அடுக்கி இயற்கையின் அற்புதங்களைக் காட்டி அழகான கதையை சொல்லிச் செல்கிறார் ஜெயமோகன்.

இதன் அடிநாதமாக விளங்குவது இயற்கையின் பேரதிசயங்களை வர்ணிக்கும் தன்மையும் இயற்கையை மனிதர்கள் எவ்வளவுதான் அலசி ஆராய்ந்தாலும் முழுமையாக அதை அறிய முடியாது என்பதை அறிந்து கொள்ளும்படியான தேடல் நிறைந்த தன்மையும் எனலாம்.

இதில் ஜெயமோகன் அவர்களின் கருத்துகளில் சில;

காடு முழுக்க பகலிலே தூங்கிட்டிருக்கும் தெரியுமா?.சூரியன் அணைஞ்சதும்தான் காடு கண் முழிக்கும். நூற்றுக்கணக்கான மிருகங்கள் ஆயிரக்கணக்கான சின்ன ஜீவ ராசிகள் கிளம்பிடும். இரை தேடுவது, வேட்டையாடுவது, இணை சேருவது எல்லாமே ராத்திரியிலேதான். ஆதி மனுஷன் காட்டிலே இயல்பா இருந்தப்ப கண்டிப்பாக ராத்திரியிலே வேட்டைக்கு போகிற ஜீவராசியாகத்தான் இருந்திருப்பான். பகலிலே அவன் வாழ ஆரம்பித்தது நாகரீகத்தை உண்டு பண்ணிக்கிட்ட பிறகுதான்.

திரவங்களும் படிகங்களும், ஒளி கொள்ளும் போது நம் கண்களை ஈர்த்து நினைவுகளின் நிறம் படரச் செய்து விடுகின்றன.
இரு கன்னங்களிலும் குழிகள் உருவாகி கரைந்தன நீர்ப்பரப்பில் காற்று உருவாக்கும் சுழி போல.

மனசோட விழிப்பு நிலையை ஊடுருவி கனவு நிலையோடு பேசுவதைத்தான் நாம கலைகள்னு சொல்றோம்.


தாயிடம்தான் மனிதன் பேரன்பின் அளவில்லாத வல்லமையை முதலில் உணர்கிறான்.

பைத்தியம்னா என்ன? மூளையிலே ஒரு நாலு ஜன்னலை கூடவே திறந்து போடுறது. இன்னும் கொஞ்சம் காற்றும் வெளிச்சமும் உள்ள வர்றது. பைத்தியத்திற்கான சான்ஸ் இல்லாமல் யாருமே இல்லை. உள்ளூர பைத்தியமாகணும்னு கொஞ்சமாவது ஆசைப்படாதவங்களும் இல்லை. ஏன்னா எல்லா உச்சகட்ட அனுபவங்கள்லயும் நாம் கொஞ்சம் பைத்தியங்களாகத்தான் இருக்கோம்.

ராத்திரி ரொம்ப எமோஷனலானது.மனசு உருகி நெறிந்து போய் இருக்கு அப்ப நம்மால எதையுமே கட்டுப்படுத்த முடியாது ராத்திரியோட பிரச்சனையே இதுதான். இங்கே எல்லாமே கடுமையா இருக்கும். காதல், காமம், வெறுப்பு, குரோதம் எல்லாமே உக்கிரமாத்தான் இருக்க முடியும். எதுக்குமே கண்ட்ரோல் இருக்காது.

பொய்யில் நாம் வாழும்போது நமக்குள் உண்மை ஒரு ரகசியமான பிரக்ஞையாக இருந்து கொண்டே இருக்கிறது. அதனால் ஒருபோதும் நம்மால் நிம்மதியாக இருக்க முடிவதில்லை. நம் அகம் பதைத்துக் கொண்டே இருக்கிறது. நம் கால் கீழே பூமி எக்கணமும் சிதைந்துவிடும் என்ற பயம் இருக்கிறது நம்மிடம்.

நல்ல பிரார்த்தனையில் பிரார்த்திப்பவன் இல்லாமலாவான். பிரார்த்தனையும் இல்லாமல் பிரார்த்திக்கப்படுவது மட்டும் மிஞ்சி இருக்கும்.

ஒவ்வொரு கணமும் முற்றிலும் எதிர்பாராத ஒன்று நடக்கும் போது அதை எதிர்கொள்வதுதானே வீரம்.
இந்நாவலின் சிறப்பான விஷயம் எனச் சொல்லும் பொழுது கேரளாவின் இயற்கை அழகை எழுத்தின் மூலமாகவும் நமக்குள் காட்சியெனப் புரிய வைக்க முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறது.

காயலும்  அதன் நீர்நிலைகளில் ஓடும் படகுகளின் இயக்கமும் இரவு நேரத்தில் இயற்கையின் ரகசியங்களை விழிப்புணரும் தன்மையும் இரவுக்கு ஆயிரம் கண்கள் என்பதை ஒவ்வொரு மனிதனும் உணர வேண்டும் என்பதற்கான பெரு முயற்சியும் இந்நாவல் எடுத்துக்கொண்டு நமக்குள் அவற்றை கடத்தவும் செய்கிறது.

 எளிமையான ஒரு கருவை எடுத்துக் கொண்டு அதை மனிதர்களுக்குள் செயல்படுத்தினால் எவ்விதமான விளைவுகள் நிகழும் என்பதையும் மனிதன் ஒரு பக்கத்தை மட்டுமே வாழ்க்கை என வாழ்ந்து வருகிறான் அவன் வாழ்வின் மறுபக்கத்தை அறிய நினைத்தால் என்னவாகும் என்பதையும் அருமையாக எடுத்துக் கூறுகிறது இரவு.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.

News Hub