இரும்புக்குதிரை மெர்குரி பூக்கள் முதலான உன்னதமான நாவல்களைப் படைத்தவர் தான் பாலகுமாரன் .மிகச்சிறந்த கதைசொல்லி.
273-க்கும் அதிகமான நாவல்களைப் படைத்துள்ளார்.
எழுத்தாளன் என்பவன் (தன்னை) படிப்பவரை தன்னை கடந்து செல்ல உதவ வேண்டும் .தன்னை கடந்து செல்ல உதவும் படைப்புகளை இலக்கியம் என்று ஜெயகாந்தன் அவர்கள் சொல்வார்கள். அந்த வார்த்தைகளை பாலாவின் எந்த நாவலும் மீறியதில்லை. வெகுஜன ரசனைக்கு இலக்கியத்துக்கும் பாலமாக விளங்குபவை பாலாவின் படைப்புகள்.
எது அடுத்த தலைமுறையை வளமாக்கும் என்கிற தேடல் நம்மையும் தேடலுக்கு அழைக்கும் பாலாவின் முயற்சி இந்த நாவலிலும் தொடர்கிறது.
கானல் நீர் கேள்விப்பட்டிருக்கிறோம். கானல்வரி கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்ன கானல் தாகம் ?
தாகம் என்றால் ஆசை என்று கொள்ளலாமா ?ஆசை பற்று இலக்கு நோக்கி எப்படி வேண்டுமானாலும் கூறலாம். அவையெல்லாம் கைக்கு கிடைக்காது .கண்ணுக்கு எட்டாத அடையவே முடியாது என்கிற நிலையில் அதற்கு கானல் தாகம் என்று ஆசிரியர் பெயரிடுகிறார்.
ஆமாம் அடித்தட்டு மக்களின் எல்லா ஆசைகளும் நிராசை கலந்த ஆசைகளாக போய் வி. உயர்ந்த வாழ்க்கையை வாழ ஆசைப்பட்டாலும் இலக்கியத் தரமாக வாழ ஆசைப்படும் அவர்களால் முடியவில்லை.
அவையெல்லாம் கானல் நீராக கானல் தாகம் ஆகத்தான் தான் போகின்றன என்பதைத்தான் ஆசிரியரும் சுட்டிக்காட்ட விரும்பியிருப்பார்,இந்த கதையில் எழுதி இருப்பார் என்று நினைக்கிறேன்.
ஆசிரியரின் பெரும்பாலான படைப்புகளில் பெண் பாத்திரம் முக்கியமான பங்கு வகிக்கிறது. பெண்களோடு நெருங்கிப் பழகியவர்; பெண்களின் உள் மன உணர்வுகளை ஆழ்ந்து படித்தவர் ;நிறைய பெண்களின் கண்ணீர் கதைகளை கேட்டு அறிந்தவர் என்கிற முறையிலேயே அவர் பெண்களின் வாழ்க்கையை அற்புதமாக ஒவ்வொரு கதையிலும் வடித்து எடுக்கிறார்.
பெண்கள் முழுமையான வாழ்க்கையை வாழ வேண்டும் ;அம்பை போல வேம்பி வெம்பி அனலாய்,புனலாய் வெடிக்கக் கூடாது .ஆணுக்கு சரி நிகர் சமானமாக வாழ வேண்டும் என்கிற கனவுகள் ஆசிரியருக்கு அதிகமாக இருக்கிறது .நல்ல வீணை செய்து நலங்கெட புழுதியில் ஏறியக் கூடாது என்கிற விருப்பம் ஆசிரியர் கொண்டு இருக்கிறார் .அந்த ஆசை அந்த விருப்பம் எல்லாம் நிறைவேறாது என்கிற எண்ணத்தில் தான் இந்த கதைக்கு அவர் கானல் தாகம் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
பெண்களின் மோகங்களை மேகம்போல் வேகமெடுக்கும் மோகங்களைத்தான் பகிர்ந்து கொள்ளக் கூடாது ;ஆனால் அவர்களின் உண்மையான அவசியமான தாகங்களை பகிர்ந்து கொள்வது தவறல்ல என்கிற நிலையிலேயே தான் இந்த கதை எழுதப்பட்டுள்ளது.
இனி கதைப் பார்ப்போம்.
வீழிநாதன் என்கிற விளம்பர கம்பெனியின் நிர்வாகி ,அவனது மனைவி விஜயா. விஜயா வீட்டில் வேலைக்கு அமர்த்தப்படும் வளர்மதி ,வளர்மதியின் அக்கா மணிமேகலை ,அவளது கணவன் , வளர்மதியின் காதலனாகவும் வருகின்ற பார்த்தசாரதி இவர்கள்தான் பாத்திரங்கள்.
ஆசிரியர் விரும்பும் இல்லற வாழ்க்கையை வீழிநாதன் விஜயா மூலம் நமக்கு எடுத்துக்காட்டுகிறார் .ஆனால் மணிமேகலைக்கு அமைந்த கணவனும் ஆண்மையற்றவன் ,பிள்ளை பெருதலுக்க கு தகுதியற்றவன் .மணிமேகலையின் அலுவலகத்தில் பணிபுரியும் பார்த்தசாரதியுடன் தொடர்பு ஏற்பட்டு விடுகிறது .பார்த்தசாரதியை தனது தங்கை வளர்மதிக்கு கட்டி வைக்க ஆசைப்படுகிறாள் .இருவரையும் அறிமுகப்படுத்தி வைக்கிறார் .
வளர்மதியும் பார்த்தசாரதியும் ஒருநாள் ஒன்று சேர்கிறார்கள் .
சந்தேகப்பட்ட மணிமேகலையின் கணவன் அலுவலகத்தின் முன் வந்து கூச்சல் போட்டு மனைவியை அடிக்கிறான். அடிக்கப்பட்ட மனைவி மீது பரிதாபப்பட்டு பார்த்தசாரதி காதல் கொள்கிறான். இருவரும் வீட்டை விட்டு வெளியேற நினைக்கின்றார்கள் .
இந்த நிலையில்தான் விஜயா அவர்கள் இருவருக்கும் அறிவுரை வழங்குகிறார். அறிவுரை கேட்கின்ற நிலையிலேயே அவர்கள் இல்லை .
வீட்டை விட்டு வெளியேறி ரயில்நிலையம் செல்லுகின்றார்கள். அங்கே மணிமேகலையின் கணவனால் பார்த்தசாரதி அடித்து துன்புறுத்தப் படுகிறான். .அந்த நிலையில் மணிமேகலை தனது கணவனையே கொன்றுவிடுகிறாள் என்பதாக கதை முடிகிறது.
கணவன் செய்யும் கொடுமைகளை ஏற்று அப்படியே உள்வாங்கிக் கொண்டு, யாருக்கும் தெரியாமல் வாழ்ந்துகொண்டு, அதை மீறி வெளியேற முடியாமல் நரகத்தில் உழல்வதே நம் சமூகத்தின் நீதி,நியதி என்று ஆகிவிட்டது .
மீறுகின்ற மணிமேகலைகள் மீது கள்ளக் காதல் கறை படிவது தவிர்க்க முடியாமல் போய் விடுகிறது .வளர்மதியின் ஏக்கங்கள் சதை கொழுப்பு என்று தூற்ற படுகிறது. பாரதியார் கவிதைகள் இங்கேயே எடுத்தாளப்படுகிறது பொருத்தமாக.
வளர்மதி தன்னை இழந்துவிட்டாரா இல்லையா என்பதை அறிந்து கொள்ள விஜயா நினைக்கிறாள்.
அதற்கு ஆசிரியர் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட சங்ககால பாடலை எடுத்து எழுதுகிறார் ஆசிரியர். அருமையான எடுத்தாடல்.
காதோரமும் ,உன் கழுத்து வரையும், தோளின் குழிகளும், மார்காம்பும், முதுகெலும்பும், இடையின் வளைவும், ஆடுகால் திரட்ச்சியும் ,உள்ளங்கால் மென்மையும் தீண்டப்பட்டு இருக்கின்றன.
தலைவியோடு காதல் செய்து கொண்டிருந்த தலைவன் தலைவியின் செவிலித்தாய் ஒருத்தியைப் பார்த்து தோப்பை விட்டு ஓடிப்போனான் .ஆடை கலைந்து கிடந்த தலைவியைப் பார்த்து செவிலித்தாய் கவலையோடு கேட்டாள் .உன் கற்பு உன்னிடம் உண்டா? இல்லையா ?
அதற்கு தலைவி தரையை பார்த்து பதில் சொன்னாள் ."பசித்த யானை தோப்பு பசுங்கிலையை தும்பிக்கையை நீட்டி உண்போம் என உடைத்தது. ஆளரவம் கேட்டு தோப்பு விட்டு ஓடியது .யானையால் உடைக்கப்பட்ட பசுங் கிளை ஒடிந்து மரப்பட்டையில் தொங்கி தரையை தொட்டுக் கொண்டிருக்கிறது .
என் நிலையும் அதுவே .என் கற்பு அழியவும் இல்லை ; முன் போல் இருக்கவும் இல்லை.
இரண்டாயிரம் வயது குறுந்தொகை கவிதை.
ஆசிரியர் தனது ஆவேசத்தை கீழ்க்கண்டவாறு பதிவு செய்கிறார் .
"2000 வருடத்திற்கு ப பிறகும் பெண் நிலை இதுதானா ? பெண் இன்னமும் பசுங் கிளையா? ஒடிந்து விட்ட ஜடப்பொருளா ?நின்று நிமிர்ந்து நான்தான் இவளை தொட்டேன் என்று சொல்லும் ஆண் இன்னமும் இல்லையா ?தீண்டி தொலைத்தால் திணறி போகிற உணர்ச்சிக் குவியல்தான் பெண் மனசா? உரமே வராதா?
இதென்ன கொடுமை? ஏன் இந்த அவலம்? மறுக்கப்பட்டதால் மீறப்படுகிறதா? மீறப்பட்டதால் மறுக்கப்படுமா? மறுத்தலும் மீற லும் ,மீறியதை மறுத்த லும் நடந்து இரண்டு நாலாய் ஆயிரமாய் பெண் பிளந்து போகவேண்டுமா?
காதல் ஒருவனைக் கைப்பிடித்து அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து என்கிற நிலை என்று வருமோ "?என்று ஆசிரியர் ஆதங்கப்படுகிறார் .அதனால்தான் புத்தகத் தலைப்பு கானல் தாகம் என்று வைத்திருக்கிறாரோ என்னவோ?
படிப்போம் அதன்படி சிலரேனும் நடப்போம்.