ஆசிரியர் : சாரு நிவேதிதா
பக்கங்கள் : 156
விலை : 150
பதிப்பகம் : பேசாமொழி பதிப்பகம்
இசை. நாம் பிறக்கையில் தாலாட்டுடன் தொடங்குவது, நம் மரணத்தின் போது ஒப்பாரி உடன் முடிவடைகிறது. இடைப்பட்ட வாழ்நாள் முழுவதும் நாம் இசையுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இசை உலகத்தையே தன் வசம் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் ஒரு மந்திரச் சாவி. நம் திரையிசை இசையமைப்பாளர்களான எம். எஸ். வி தொடங்கி இன்றைய அனிருத் வரை சிறப்பாக இசையமைக்கும் அனைவரையும் தமிழ் சமூகம் மிகவும் மதிப்பு மிக்க இடத்தில் தான் வைத்துள்ளது. ஏன், மற்ற மொழிகளில் வெளியாகும் நல்ல, சிறந்த பாடல்களையும் கூட கண்டறிந்து அதனை புகழத்தான் செய்கிறார்கள்.
ஒரு மனப்பாடப் பாடலை மனனம் செய்வதற்கு தடுமாறும் குழந்தை தான், ஒரு முழு நீளப்பாடலை அச்சு பிசகாமல் பாடுகிறது. அனைத்து விதமான உணர்ச்சிகளையும் இசையால் கொடுக்க இயலும். சிரிப்பு, அழுகை, கோபம் என்று பலவிதமான உணர்ச்சிகளை நடிகர்கள் திரையில் காண்பித்தாலும் அதை நம்முடன் ஒன்ற வைப்பது என்னவோ இசை தான். இசையை கொண்டாட்டமாக மட்டுமே பார்த்து நாம் வளர்ந்து வந்திருக்கிறோம்.
ஆனால் உலகில் எல்லோருக்குமே அத்தகைய பாக்கியம் கிடைக்கவில்லை. அடிமைப்பட்டு கிடந்த தங்களின் தேசத்தை வீறு கொண்டு எழ வைப்பதற்கு அவர்களிடம் கைவசம் இருந்த ஆயுதம் இசைதான். தாங்கள் காட்டும் எதிர்ப்பை இசையின் மூலம் வெளிப்படுத்தினர். அதில் சிலர் வெற்றியும் கண்டனர். அத்தகைய கழகத்தில் ஈடுபட்டவர்கள் சந்தித்த இன்னல்களைப் பற்றி கூறுவது தான் சாருவின் இந்த நூல்.
முதல் அத்தியாயத்தில் உலகின் புகழ்பெற்ற கேஸோலினா பாடலை பற்றி விவரித்து இருக்கிறார். இந்தப் பாடலை பாடியவர் டாடி யாங்க்கி என்பவர். உண்மையான பெயர் ரமோன் அயலா. சில காலம் ரவுடியாக வாழ்ந்தவர். ஆனால் ரெகே என்ற இசைக்குழுவுடன் இணைந்ததன் மூலம் தன் வாழ்க்கையை மாற்றிக் கொண்டவர். கஸோலினா பாடல் இவரை மேலும் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. மொத்தம் 10 லட்சம் பெறுதிகள் வெளிவந்தவுடன் விற்பனையானது. அந்த நாட்டின் மொத்த ஜனத்தொகையை 38 லட்சம் தான். அவர் பாடிய பாடல் மதுவையும் செ.க்ஸையும் பற்றி இருக்கும்.
ஆனால் துள்ளலுக்கோ ஆட்டத்துக்கு பஞ்சம் இருக்காது. அனைத்து வயதினரையும் சுண்டி இழுக்கும் இசையை கொண்டது. அதனால் இரட்டை அர்த்த வசனங்கள் கூட அவ்வளவாக யாருக்கும் பெரிதாக தெரியவில்லை. அதே பாடலை ஐந்து சிறுவர்கள் கொண்ட குழு இரட்டை அர்த்த வசனங்களை நீக்கிவிட்டு புது வசனங்களுடன் தங்கள் குரலில் பாடியது தன்னை மிகவும் கவர்ந்ததாக கூறுகிறார். இந்தப் பாடலை நேரம் இருந்தால் கேட்டு மகிழுங்கள்.
அடுத்ததாக விக்தோர் ஹாரா. சாருவை தொடர்ந்து வாசிப்பவர்கள் இந்த பெயரை அடிக்கடி அவரது புத்தகத்தில் காணலாம். அந்த அளவிற்கு இவரின் வாழ்க்கை அவரை மிகவும் பதித்திருப்பதாக நான் நம்புகிறேன். சீலேயின் தலைநகர் சாந்தியாகோ. அங்கே 6 ஆண்டு கால அரசு, ராணுவ உதவியுடன் முடிவுக்கு வருகிறது. அதே நாள் மக்களால் பெரிதும் விரும்ப பெற்ற இசைக்கலைஞன் வித்தோர் ஹாரா கைது செய்யப்படுகிறார். சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகிறார். அப்பொழுதும் அவர் தனது பாடல்களின் மூலம் உற்சாகமூட்டி கொண்டு தான் இருந்தார்.
உணவோ தண்ணீரோ கொடுக்காமல் அடிக்கடி அவரது உடலில் மின்சாரத்தை பாய்ச்சினர் ராணுவத்தினர். சித்திரவதையின் உச்சகட்டமாக அவரது கைகளை தனது துப்பாக்கியால் சிதைத்த ஒரு அதிகாரி "இப்போது பாடு" என்று கத்துகிறான். அதற்கு சற்று நேரம் முன்பு கூட அவர் ஒரு பாடலை எழுதிக் கொண்டுதான் இருந்தார். அந்த பாடல் முடிக்கப்படாமலேயே பாதியில் நின்று விட்டது. அதை ஹாராவின் மனைவியிடம் கொடுக்கிறார்கள். அவர் ஹாராவின் வாழ்க்கை வரலாறை எழுதும் பொழுது முடிவுறாத பாடல் என்று தலைப்பிட்டு இந்த பாடலை அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.
அவரின் உடல் கூட யாருக்கும் கிடைக்கக் கூடாது என்பதற்காக நூற்றுக்கணக்கான உடல்களுடன் சேர்த்து இடுகாட்டுக்கு அனுப்புகிறார்கள். இடுகாட்டில் ஹாராவின் உடலை அடையாளம் கண்டு அதனை யோவான் என்பவரிடம் ஒப்படைக்கிறார்கள். அவர் ஹாராவின் உடலை முறைப்படி அடக்கம் செய்கிறார். இவ்வாறு ஹாராவின் வாழ்க்கையைப் பற்றி இந்த புத்தகத்தில் கொஞ்சம் விலாவாரியாக விவரித்து இருக்கிறார் சாரு.
கிரேக்கர்கள் மற்ற எல்லாவற்றையும் போலவே இசையிலும் தங்களால் முடிந்த அளவிற்கு முயற்சிகள் செய்து வந்திருக்கின்றனர். அந்த வகையில் நம் தமிழ் சமூகம் கொஞ்சம் பின்தங்கி தான் இருந்திருக்கிறது. அல்லது உலகிற்கு தெரியாமல் இருந்திருக்கிறது. நாம் இங்கே கோவில்கள் கட்டிக் கொண்டிருந்த நேரத்தில் அவர்கள் அறிவியலை வளப்படுத்தினர். நாம் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்த சமயத்தில் அவர்கள் கணிதத்தை எழுதிக் கொண்டிருந்தனர்.
நம் சமூகமும் பல கண்டுபிடிப்புகளை கொண்டு வந்து உலகிற்கு அறிமுகப்படுத்தி இருந்தால் இன்று சமஸ்கிருதத்தை முதன்மைப்படுத்தி நம்மை அடக்க முயற்சிகள் நடந்திருக்காது. கிரேக்கத்தை போன்று நாமும் தனித்து தெரிந்திருப்போம். இந்த அத்தியாயத்தில் இசையில் கிரேக்க வார்த்தைகள் எவ்வளவு கலந்துள்ளன என்பதை பற்றியும் கிரேக்க கவிஞர்கள் இசையிலும் மேன்மை பெற்றிருந்தார்கள் என்பதை பற்றியும் விவரிக்கிறார் சாரு. அதேபோல் கிரேக்க இசையில் வல்லுனர்களாக இருக்கும் சிலரை பற்றியும் விவரிக்கிறார். பித்தாகரஸ் நடத்தி வந்த ஒரு சங்கத்தை பற்றியும் மிக அழகாக விவரிக்கிறார் சாரு.
அடுத்ததாக அவர் விவரித்திருப்பது லான்னீஸ் ஸெனாகிஸ். கணிதம் மற்றும் கட்டிடக்கலை நிபுணரான இவர் இசையிலும் ஆர்வம் வந்து சில பாடல்களை உருவாக்குகிறார். அதனை கேட்டவர்கள் "அது இசையே இல்லை" என்கிறார்கள். அதனால் அப்பொழுது இசை உலகில் பிரபலமாக இருந்த மெஸ்ஸியானிடம் "என் இசையை மீண்டும் பூஜையில் இருந்து ஆரம்பிக்கவா?" என்று கேட்கிறார். அதற்கு அவர் "உனக்கு இப்போது 30 வயது ஆகிறது. கணிதத்திலும் கட்டிடக்கலையிலும் தேர்ச்சி பெற்று இருக்கிறாய். அதோடு நீ கிரேக்கத்திலிருந்து வந்தவன். இவ்வளவையும் நீ உன் இசையில் பயன்படுத்து" என்கிறார். இந்த வார்த்தைகள் அவரை வேற ஒரு பரிணாமத்திற்கு அழைத்து செல்கின்றன. அதன் மூலம் பல இசை அற்புதங்களை நிகழ்த்தினார் ஸெனாகிஸ்.
லத்தின் அமெரிக்கவில் மிகப் பிரபலமான ஒரு பெயர் வியலத்தா பாரா. பள்ளி செல்வதை விரும்பாமல் சிறுவயதிலேயே சுயமாக பாடல்கள் எழுத ஆரம்பிக்கிறார். பின் நிறைய பாடல்கள் இயற்றி அதை சீலே முழுவதும் பாடி செல்கிறார். மிகுந்த புகழ் பெற்று சோவியத் யூனியன் சென்றும் பாடுகிறார். பல இன்னல்களுக்கு பிறகு தன்னை தானே சு.ட்டுக் கொண்டு இறக்கிறார். இவரை ரோல் மாடலாக கொண்டு இந்த்தி இயிமானி என்ற இசை குழு தொடங்கப்பட்டு மிகப் பிரபலம் அடைகிறது. இவர்கள் 40 ஆண்டுகளில் 40 ஆல்பங்களை வெளியிடுகிறார்கள்.
சாருவின் எழுத்தை பற்றி நிறைய குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவரைப் போன்று பயண கட்டுரைகள் எழுதுவதற்கு யாருக்கும் வராது. மற்றவர்கள் அந்த நாட்டின் சிறப்புகளைப் பற்றி கூறினால் சாரு ஆதிகாலம் தொடங்கி, அந்த நாட்டினர் சந்தித்த முக்கிய போர்கள், அந்த நாட்டின் முக்கிய எழுத்தாளர்கள், தற்பொழுது என்ன நடந்து கொண்டிருக்கிறது போன்ற பல கருத்துக்களை எழுதி இருப்பார். இவரின் அ-காலம் என்ற புத்தகத்தை படிப்பவர்கள் அரபி எழுத்தில் உள்ள புத்தகங்களை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுவதை தடுக்க இயலாது.
அதேபோன்றுதான் இந்த புத்தகத்திலும் இசை மேதைகளைப் பற்றி அவர் விவரித்திருக்கும் விதம் நாம் கூகுள் செய்து அவற்றை கேட்கும் அளவிற்கு நமக்கு ஆர்வமூட்டுகின்றன. இந்த புத்தகத்தின் எந்த பக்கத்தை திருப்பினாலும் அதில் முழுக்க முழுக்க இசைக்கலைஞர்களை பற்றிய குறிப்புகள் இருப்பதை காணலாம். அந்த அளவிற்கு இதில் அவ்வளவு விஷயங்களை எழுதி இருக்கிறார் சாரு. அதற்காக அவர் வாசித்த புத்தகங்களை எண்ணிப் பார்க்கும் பொழுது நமக்கே வியப்பு ஏற்படுகிறது. இசையில் ஆர்வம் உள்ளவர்கள் நிச்சயம் படிக்க ஏதுவான ஒரு புத்தகம்.