ஓஷோ இந்தப் பெயரை கேட்டாலே சிலருக்கு புருவங்கள் உயரும், பலருக்கு முகம் அஷ்டகோணலாகச் சுருங்கும். "செக்ஸ் சாமியார்" என்று மதச்சாமியார்களால் முத்திரை குத்தப்பட்டு, உலகநாடுகள் பலவற்றில் இவருக்கு விசா மறுக்கப்பட்டது.
அதற்கு முக்கியமான காரணம், இதோ நான் இரண்டாவது முறையாக சுவாசித்து முடித்து இருக்கும், "காமத்திலிருந்து கடவுளுக்கு" என்ற அதிஅற்புதமான வாழ்வின் உண்மையான வழிகாட்டி நூல்.
2012-ம் ஆண்டு அப்போது எனக்கிருந்த புத்தகம் வாசிக்கும் பழக்கமுடையே ஒரே நண்பர், Bala Murugan என்பவரால்தான் இந்த புத்தகம் எனக்கு அறிமுகமானது. ஆனால், இரண்டு ஆண்டுகள் தேடியும் கிடைக்காமல், (அப்பொழுது இணையத்தில் புத்தகம் வாங்கும் பழக்கம் இல்லை) ஒரு வழியாக 2015-ஆம் ஆண்டு என் கையில் வந்தது இந்த பொக்கிஷம்.
நான் இதை வாங்கிய கடையில் இருந்த அக்காவும் சரி, இந்த புத்தகத்தை கையில் வைத்த இருந்தபோது என்னைப் பார்த்த, என்னுடன் வேலை செய்த பெண்களும் சரி, என்னை ஒரு மாதிரியான அருவருப்பான பார்வையில் பார்த்தார்கள். அதற்கான காரணம், காமம் என்ற தலைப்பு. ஆனால் ,அதில் கடவுளுக்கு என்ற வார்த்தையைப் பார்க்க தவறிவிட்டார்கள்.
நானும்கூட, ஒரு விதத் தயக்கத்துடனே இந்த புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். வாசிக்க வாசிக்க என் உள்ளத்தில் இருந்த காமத்தைப் பற்றிய அழுக்கு விஷத்தை எல்லாம் சுத்தப்படுத்தி, தூய அமிர்தமாக மாற்றிவிட்டார் ஓஷோ.
இந்த நாட்டில் முக்கியமாக தமிழ்நாட்டில், பல நல்ல வார்த்தைகள் தீயவார்தைகளாக மா(ற்)றிவிட்டது.
மயிர், நாற்றம் சமீபகாலமாக அம்மா. அந்த வகையில், தன் சுயலாபத்திற்காக மதங்களின் மூலமாக பாவச்செயல் என்று ஒதுக்கப்பட்ட பெயர் காமம். ஆனால், உண்மையில் அதுதான் உலக இயக்கத்தின் ஆணிவேர். அதைப் பாவம் என்றால், அந்த உணர்வை படைத்ததாக இவர்களால் சொல்லப்படும் கடவுள் தான் மிகப்பெரிய பாவி.
இந்த பூமியில் மனிதனைத் தவிர வேற எந்த உயிரினமும் கற்பழிப்பு , வன்புணர்வு, விபச்சாரம் போன்றவற்றில் ஈடுபடுவதில்லை. ஏனென்றால், அவைகள் வெளிப்படையானவை. ஆனால், மனிதர்களிடமோ மதங்களும் , மதச்சாரியர்களும் காமம் அசிங்கம், அது ஒரு பாவச் செயல் போன்ற பொய்களை விதைகளைப்போல காற்றில் தூவி விட்டுவிட்டார்கள்.
அது அவர்களின் காமத்தை ஒரு எரிமலை குழம்பாக மாற்றி, அடக்கி அடியில் வைத்து விட்டது. ஒருநாள், அது சூடு தாங்காமல் வெடித்து சிதறுகிறது அல்லது சரியாக மூடாத குழாயிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டுருப்பதைபோல் காமம், அவனை இச்சையில் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கடிக்கிறது. இந்த இரண்டுமே பேராபத்தானது. இதில் இருந்து வெளியே வர, நமக்கு மெய்ஞ்ஞானம் தேவை. ஆம், காமத்தை பற்றிய மெய்ஞ்ஞானம்
காமத்தைப் பற்றிய மெய்ஞ்ஞானத்தைப் பெற்ற மனிதர்.. ஒரே மனிதர் ஓஷோ மட்டுமே என எனக்குத் தோன்றுகிறது.
அனைவரும் உடல் உறவில் ஈடுபடுகிறோம், அனைவரும் அதில் இன்புறுகிறோம் இதில் என்ன மெய்ஞ்ஞானம் இருக்கிறது?
ஒரு வண்டியை இயக்க தெரிந்ததால் மட்டுமே, ஒருவரை அந்த வண்டியைப் பற்றிய அனைத்தும் தெரிந்தவர் என்று சொல்லி விட முடியாது. உடைகளை உடுத்துவதால் மட்டுமே நமக்கு நெசவு பற்றிய தெளிவு இருப்பதாக எடுத்துக்கொள்ள முடியாது.
அப்படி இருந்திருந்தால், அதில் வரும் பிரச்சனைகளை நாமே சரி செய்து விடுவோம். இன்னொருவரின் உதவியை நாடிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல் உடலுறவில் ஈடுபடுவதால் மட்டுமே sex ஐப் பற்றி அனைத்தும் உணர்ந்தவர்களாகி விட மாட்டோம். நீங்கள் நம்பினாலும் நம்பாமல் போனாலும் செக்ஸ்க்கு மாற்றாக உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை கருவி தான் தியானம். நீ, நான், உலகம் , சந்தோசம், பிரச்சனை, கவலை, ஆசை அனைத்தையும் மறக்கச் செய்து நம் எண்ணங்களை ஒரு புள்ளியில் குவித்து, நம் எங்கு இருக்கிறோம் என்று அறியமுடியாத சமாதி நிலைக்கு கொண்டு செல்லும் இயற்கையின் உன்னத செயல்முறை காமம்.
ஆனால், அது ஷணநேரம் மட்டுமே. அப்படிப்பட்ட சாமதிநிலையை, வெகு நேரம் நீடிக்க செய்ய செயற்கையாக உருவாக்கப்பட்டதுதான் தியானம். அதாவது, சிற்றின்பத்திலிருந்து பேரின்பம். ஆனால், சிற்றின்பத்தின் மெய்ஞ்ஞானத்தை தெளிந்து கடந்தால் மட்டுமே பேரின்ப மெய்ஞ்ஞானத்தில் கரைந்து போக முடியுமென ஓஷோ, இந்த புத்தகத்தின் வழியாக நமக்கு உணர்த்துகிறார். ஓஷோ காமத்தை மூன்று நிலைகளாக பிரிக்கிறார். உடல் , உளவியல் மற்றும் ஆன்மீகம். உடல் நிலையில் இருந்து ஆன்மீக நிலைக்கு கண்டிப்பாக உங்கள் அனைவரையும் கை பிடித்துக் கூட்டிச் செல்லும் இந்த புத்தகம்.
சங்க காலச் சமுதாயத்தினர் பாலியல் தேவைகளை மிக இயற்கையானதாகக் கருதினர். அதனைக் குற்றமானது, சிற்றின்பம் தீமையானது என்று இழிவாகக் கருதி ஒதுக்கும் போக்கு அறவே இல்லை. பிற ஒழுக்கப் பாடல்களைக் காட்டிலும் அகப் பாடல்கள் அதிகம் இருப்பதே இதற்குச் சான்று. அதுபோல பாலுறவை மையப்படுத்தி காமத்தை உடலிலிருந்து பிரித்துக் காமக்கலையாக (eroticism) மாற்றும் முயற்சியும் இல்லை.
ஆணுக்கும்,பெண்ணுக்குமிடையிலான உடலுறவை இயல்பானதாகக் கருதும் போக்கு சங்க இலக்கியம்
முழுவதும் காணப்படுகிறது.
காதலையும், காமத்தையும், பொதுவெளியில் விவாதித்த சமூகம்.. அதை இழிவாகக் கருதுமளவு மாற்றியது யார்?
இந்த இனத்தின் மீது பண்பாட்டுத் தாக்குதல் நடத்தித் தன்னை ஆதிக்க இனமாக உருவகம் செய்துகொண்ட மதவாதிகளும், ஆன்மீகவாதிகளும்தான் இதற்கு முழுமுதற் காரணம்.
இங்கே இருக்கும் அனைவரும், முக்கியமாக பெண்கள், இந்த புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கின்றேன்.
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.
(குறள் 1289)