நா.முத்துக்குமார் கட்டுரைகள்
பால காண்டம், கிராமம் நகரம் மாநகரம், கண் பேசும் வார்த்தைகள், நினைவோ ஒரு பறவை என நான்கு புத்தகத்தின் தொகுப்பு. பால காண்டம் மற்றும் கிராமம் நகரம் மாநகரம் ஆகிய இரண்டு கட்டுரைகள் தொகுப்பு ஏற்கனவே படித்துள்ளேன். பால காண்டம் -பால்ய கால நினைவுகளின் தொகுப்பு, கிராமம் நகரம் மாநகரம்- கிராமம் நகரத்தற்கான வாழ்வியல் வேறுபாடு, கண் பேசும் வார்த்தைகள் - கவிஞர் எழுதிய 25 பாடல்கள் பற்றிய நிகழ்வுகள், நினைவோ ஒரு பறவை தனது நினைவுகள் பற்றிய தொகுப்பு.
பால காண்டம் - பால்ய நினைவுகளின் அலையடிப்புகளோடு ஆற்றங்கரையோரமாய் சாவகாசமாக நடந்து செல்வதைக் போன்றதொரு பாந்தமான நெருக்கத்தையும் இதயத்தையும் இந்தக் கட்டுரைகள் தருகின்றன.
பால்ய கால நினைவுகளை அசைபோடுவது இன்பம் என்றால் முத்துக்குமாரின் வரிகளில் அதனை படிப்பது கூடுதல் இன்பம் தரும். இவரின் புத்தகங்களை ஒவ்வொரு முறை வாசிக்கும் போது இந்த மனிதர் ஏன் இவ்வளவு சீக்கீரம் இறந்தார் அப்படிங்கற ஆதங்கம் தான் அதிகமா இருக்கும். இவருடைய எழுத்தை நாம சுவைக்க இன்னும் அதிக நாட்கள் வாழ்ந்திருக்கலாம்னு தோன்றுகிறது.
நா. முத்துக்குமாரின் அணிலாடும் முன்றில் ஒவ்வொரு உறவுகளையும் வெற்றி எழுதியிருப்பார் இந்த நூலிலும் பக்கத்து வீட்டு அக்கா, கணக்கு வாத்தியார், என்று எத்தனையோ கதாபாத்திரங்கள் நமது நெஞ்சை விட்டு அகல மறுக்கிறது.
கிராமம் நகரம் மாநகரம் -
கல்கி இதழில் வெளிவந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு வெளிவந்த நூல். நா.மு.வின் குழந்தை பருவம், விடலைப் பருவம் என எப்பொழுதும் போல் தனது வாழ்நாளில் இருந்தே எழுத்துக்கான சாரத்தை எடுத்துள்ளார் . கிராமமும் நகரமும் அவற்றிற்குரிய தளங்களில் இயங்கிக்கொண்டிருந்தாலும் இந்த கட்டுரையில் வரும் மனுஷிகள், மனிதர்கள், சிறுமிகள், சிறுவர்கள், நிகழ்வுகள் அனைத்தும் நினைவுகூரல் எனும் வலுவான கயிற்றால் பிணைக்கப்பட்டு உள்ளது.
கண் பேசும் வார்த்தைகள் - இயக்குனர் ராம், நா.முத்துக்குமாரின் ஒரு நினைவஞ்சலி கூட்டத்தில் இவ்வாறு கூறியிருப்பார், "திரைப்பாடல்களுக்கான வரிகள் முத்துக்குமார் தனது பயணங்கள் மூலமும் சில தேநீர் கடைகளிலும் எடுத்துக்கொண்டான் "என்று . அது எத்தனை பெரிய உண்மை என்பதை இந்த கட்டுரை தொகுப்பை வாசிக்கும் பொழுது நமக்கு புலனாகும். நாம் வியந்து ரசித்த எத்தனையோ பாடல் வரிகள் அவருடைய பயணங்களில் இருந்து, அவர் சந்தித்த மனிதர்கள் மூலம் எடுத்தாண்ட கதையை இந்த 25 கட்டுரைகளில் சுவைப்படக் கூறியுள்ளார்.
கண் பேசும் வார்த்தைகள் என்ற பாடல் மூலம் தொடங்கும் முதல் கட்டுரை இதில் மூன்றாம் கட்டுரை மதுரை மண்ணின் வாழ்வியலைப் பற்றி அமைந்த
"தந்தட்டி கருப்பாயி" .இந்த பாடலில் வரும் சில வரிகள்,
"நான் குழந்தை என்று நேற்று நினைத்திருந்தேன் அவன் கண்களிலே என் வயது அறிந்தேன்".
இந்த வரிகளை பற்றி எழுத்தாளர் சுஜாதா தொலைபேசியில் மிகவும் பாராட்டி கூறியது , மதுரையில் நடக்கும் கதை முத்துக்குமாரால் மண்ணின் பாசத்தோடு பாடலை எழுத முடியுமா என்று இயக்குனர் சங்கர் ஐயம் கொண்டதும் அதற்கு பதிலாக இந்த பாடல் அமைந்தது பற்றியும் கவிஞர் மிகவும் பெருமையுடன் பதிவு செய்துள்ளனர்.
இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு கவிஞருக்குமான ஒரு செல்ல சண்டை இருந்திருக்கிறது. இயக்குனர் இமயத்தின் படத்திற்கு இதுவரை கவிஞர் பாடல் எழுதவில்லை .அவரின் 'பட்டாம்பூச்சி விற்பவன்"கவிதை தொகுப்பை இயக்குனர் இமயம் தான் வெளியிட்டு பேசினார் . கவிஞரின் அடுத்த படைப்பான "நியூட்டனின் மூன்றாம் விதி "தொகுப்பு வெளிவந்த போது 'பாட்டு கொடுக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கும் தமிழ் சினிமாவின் மூத்த குழந்தைக்கு "என்று எழுதி கையெழுத்திட்டு இயக்குனரிடம் புத்தகத்தை கவிஞர் கொடுத்துள்ளார் . இந்த அளவுக்கு இருவருக்கும் இடையே நெருக்கம் இருந்து வந்தாலும் பாடல் எழுதும் வாய்ப்பு "ஈரநிலம்"என்ற ஒரு படத்தின் மூலமே அவருக்கு கிடைத்துள்ளது. மதுரை பக்கத்தின் உண்மையான கிராமத்தின் வாசம் காஞ்சிபுரம் அருகே வளர்ந்த கவிஞரால் கொடுக்க இயலாது என்பதே இயக்குனரின் வாதம். ஆனால் தன்னுடைய கருத்து தவறானது என்பதை இயக்குநர் இமயம் இப்பாடலுக்கு பின்பு ஒப்புக்கொண்டார் .
நினைவோ ஒரு பறவை - கவிஞரின் நினைவுப் பூக்கள் இந்த தொகுதி. பால காண்டத்தில் இருந்து சில கட்டுரைகள் மீள் பதிப்பு உண்டு. மிகப் பிரபலமான "ஐந்தாம் வகுப்பு அ பிரிவு" கவிதை பற்றிய கட்டுரை இந்த தொகுதியில் இடம் பெற்றுள்ளது. "ரோஜா பூ மிஸ் "என்ற தலைப்பில் கட்டுரை இடம்பெற்றுள்ளது . ரோஜா பூ மிஸ் அவர்களின் பதில் கடிதம் இடம் பெற்றுள்ளது.ஒரு வருடம் பாடம் நடத்திய ஆசிரியரின் நினைவும் அதற்கு ஆசிரியர் எழுதிய பதிலும் படிப்பதற்கு சுவாரசியமாக இருந்தது. அத்துடன் "கறிச்சுவை"என்ற பெயரில் கவிஞரின் பாட்டி நினைவு பற்றி எழுதப்பட்ட கட்டுரை நெகிழ்வாக இருந்தது. இத்துடன் கவிஞரின் அமெரிக்க பயணம் பற்றிய கட்டுரை சிறப்பானது.
கவிஞரின் கவிதையோ கட்டுரையோ நமது மனதை மயில் இறகால் வருடும். இறுதியாக கவிஞரைப் பற்றி சமீபத்தில் வாசித்த கவிதையுடன் இதை முடிக்க விரும்புகிறேன்.
"ஒரு கவிஞன்
ஜுலையில் பிறந்து
ஆகஸ்டில் இறக்கிறான்
வருடம் முழுக்க வார்த்தைகளால்
மட்டும் வாழ்கிறான்"