"காமம் என்பது ஒருவர் கொடுத்து மற்றொருவர் பெற்றுக்கொள்வது அல்ல. அது இருவரும் பகிர்ந்துகொள்வது" இதை வெளிப்படையாக புரிந்துகொள்ளும் முயற்சியாக இந்த நூலைப் பார்க்கலாம்.
ஒப்பனையற்ற எழுத்தோடு இந்த நூலை எழுதியுள்ளார் லதா. குழந்தைகள் வளர்ப்பில் நாம் கடைபிடிக்க வேண்டிய உளவியல் விசயங்களை புத்தகத்தின் இறுதிப்பக்கங்கள் பேசுகின்றன. நமக்குத் தெரிந்த ஒரு நபரிடம் பேசுவதற்கு ஒரு குழந்தை அஞ்சுகிறது என்றால், "நம்ம மாமா தானே..சும்மா பேசு" என வற்புறுத்த வேண்டாம். தெரிந்த நபர் நம்மிடம் காட்டும் முகம் ஒன்றாகவும்,குழந்தையிடம் காட்டிய முகம் வோறொன்றாகவும் இருக்கலாம் என அறிவுறுத்துகிறார் லதா.
பிடிக்காத நபரிடம் வலிந்து தள்ளுவது குழந்தைகளுக்கு உளவியல் வலியை ஏற்படுத்தும் என்கிறார் லதா. பாலியல் கல்வியின் தேவையைப் பற்றியும், உடலுறவு சார்ந்த உரையாடலும் எத்தனை முக்கியம் என்பதை அர்த்தத்தோடு பட்டியிலிட்டுள்ளார்.
"உடலுறவில் உச்சம் என்பது, ஆணின் உச்சம் மட்டுமே" என்ற மூட நம்பிக்கையை இன்றும் நிறைய ஆண்கள் நம்பிக்கொண்டிருந்தால் இந்தப் புத்தகத்தை வாசிக்கலாம். காமப்பகிர்வு குறித்த மிகவும் அவசியமான நூலாக நான், "தந்த்ரா வழியில் தாம்பத்யம்" என்ற நூலைத் தான் பரிந்துரைப்பேன். ஆயினும் அது ஒரு ஆணின் பார்வையில் எழுதப்பட்ட நூல். அந்த நூலில் 'ஏன் இப்படி இருக்கிறீர்கள்?' என்ற குற்றச்சாட்டை விட, "இப்படியெல்லாம் இருங்கள்" என்ற வழிகாட்டுதல் இருக்கும். லதா அவர்கள் ஒரு பெண் என்பதால் மிகமிக நுட்பமாக பெண்களின் தேவைகளை அலசியிருக்கிறார்.
உணவு உடை இருப்பிடம் மட்டுமே வாழ்விற்கு போதுமானது இல்லை என்பதை போதுமான ஆதாரத்தோடு நிறுவியிருக்கிறார் லதா. உணவுக்கு அடுத்து மனிதன் காமத்தையே பெரும் தேவையாக கொண்டுள்ளான். மேலும் சுய இன்பம் குறித்து உலவும் பொய்யான.. இளைஞர்களை குற்றவுணர்ச்சி கொள்ள வைக்கும் கருத்துக்களை எல்லாம் தக்க வல்லுநர்களின் சொற்களோடு அடித்து நொறுக்கியுள்ளார்.
"Sex என்பது உடல் சம்பந்தப்பட்டது அல்ல..அது மனம் சம்பந்தப்பட்டது" என்ற வசனத்தை சமீபத்தில் வெப்சீரிஸ் ஒன்றில் கேட்டேன். மனதின் ஆசைகளையும் உடலின் தேவைகளையும் பெண்கள் சொற்கள் வழியாக வெளிப்படுத்தும் சூழலை ஒரு ஆண் தான் துவக்கி வைக்க வேண்டும். எவ்வளவு பெரிய குறைபாடுகள், முரண்பாடுகள் இருந்தாலும், வெளிப்படையான உரையாடல் மூலமாக அவற்றைச் சரிசெய்திட முடியும். சகித்துக்கொண்டு அடைவதற்கு பெயர் செக்ஸ் அல்ல.. அது. வெட்ஸ்.
உரையாடலின் வழியும் இணையரின் தேவையை உணர்தலின் வழியும், உடலுறவை புனிதப்படுத்த முடியும் என போட்டுடைக்கிறது கழிவறை இருக்கை.
பெண்கள் ஒன்றும் ஆண்களின் இன்பநீரை வெளியேற்றிக்கொள்ள உருவாக்கப்பட்ட கழிவறை அல்ல என்பதை ஆதங்கத்தோடுச் சொல்கிறார் லதா. இது நிறைய பெண்களின் ஆதங்கமாகவும் இருக்கலாம்