கண்ணனின் பிறப்பு கம்ச வதம் மட்டுமல்ல. நரகாசுரனை வதம் செய்வது மட்டும் நோக்கமல்ல. மண்ணுலக மக்களை காத்து ரட்சிக்கவும் அவரது அவதாரம் நிகழ்ந்துள்ளது. பிறந்த குழந்தையாக இருந்தது முதல் பால பருவத்திலேயே பல அசுரர்களை வதம் செய்திருக்கிறார் கிருஷ்ணர்.
கண்ணன் பிறந்த நாளை (ஆகஸ்ட் 26) முன்னிட்டு குழந்தை கண்ணனின் லீலைகளை அறிந்து கொள்வோம். மதுராவை ஆண்ட அரக்கன் கம்சனின் தங்கை தேவகியை மணமுடித்தார் வசுதேவர். திருமணம் முடிந்த சந்தோஷம் சில நிமிடம் கூட நீடிக்கவில்லை. தங்கையையும் தங்கை கணவரையும் ரதத்தில் வைத்து அழைத்து சென்ற போது வானுலகில் இருந்து வந்த ஒரு தெய்வீக குரல், தேவகியின் எட்டாவது மகன் கம்சனை அழிப்பான் என கூறியது. இதை கேட்டு பயந்து போன கம்சன், தன் தங்கையைக் கொல்ல தன் வாளை உடனடியாக எடுத்தான்.
கம்சனைப் பார்த்து கையெடுத்து கும்பிட்ட வாசுதேவன், தன் மனைவியை விட்டு விடுமாறு வேண்டினான். தங்களுக்கு பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் கம்சனிடம் ஒப்படைத்து விடுவதாக வாக்கு கொடுத்தான். தேவகியின் எட்டாவது மகனின் கையால் தன் மரணம் நிகழும் என்று தேவ குரல் சொன்னதைக் கேட்டு பயந்த கம்சன், தேவகியையும் அவளது கணவனான வாசுதேவனையும் சிறையில் அடைத்தான். தேவகிக்கும் வாசுதேவனுக்கும் பிறந்த எட்டாவது மகன் தான் ஸ்ரீ கிருஷ்ணர்.
தேவகி வசுதேவருக்குப் பிறந்த ஆறு குழந்தைகளை கம்சன் கொன்ற பிறகு, ஏழாவதாக கருவுற்ற குழந்தை கருச்சிதைவில் இறந்தது. அதை ஏற்படுத்தியவரே கண்ணன்தான். தேவகியின் கருவில் இருந்த குழந்தையை ரோகிணி மாற்றி வைத்து நந்தகோபரின் வீட்டில் மறைத்து வைத்தார். அங்கே பலராமர் பிறந்தார். எட்டாவதாக பிறந்தவர் தான் கிருஷ்ணர். குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே அக்குழந்தையின் தலைவிதியை எண்ணி தேவகியும் வாசுதேவனும் கலங்கினர் அப்போது திடீரென அவர்கள் முன் தோன்றிய விஷ்ணு பகவான், அவர்களையும் மதுராவின் மக்களையும் காப்பாற்ற தானே அவதாரம் எடுத்து வரப்போவதாக கூறினார்.
தான் பிறந்தவுடன் அவரை எடுத்துக் கொண்டு, கோகுலத்தில் உள்ள தன் நண்பனான நந்தகோபரிடம் ஒப்படைக்குமாறு வாசுதேவனிடம் கூறினார். நந்த கோபரின் மனைவியான யசோதா ஒரு பெண் குழந்தையை பெற்றெடுப்பார் என்றும் அந்த குழந்தைக்கு பதிலாக தன்னை மாற்றி வைத்து விட்டு, யசோதாவின் பெண் குழந்தையை சிறைக்கு வாசுதேவர் எடுத்து கொண்டு வர வேண்டும் என்றார் விஷ்ணு.
ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரம் உதித்த போது அஷ்டமி திதி நாளில் நடு இரவில் அவதரித்தார் கண்ணன். வசுதேவர் தன் கால்களை அசைத்தவுடன் கால்களில் கட்டப்பட்டிருந்த சங்கிலி அவிழ்ந்தது. சிறைச்சாலை கதவுகளும் திறந்தன. கிருஷ்ணரை தன்னுடன் எடுத்துக் கொண்டு யமுனா நதியை கடந்தார்.
யமுனை நதியை கடந்து போகையில் வாசுதேவர் குழந்தை கண்ணனை தன் தலைக்கு மேல் வைத்துக் கொண்டான். மழை பெய்து ஆற்றில் வெள்ளம் போய் கொண்டிருந்தது. ஆனால் வாசுதேவனுக்கு பாதையை ஏற்படுத்திக் கொடுத்தது தண்ணீர். அதிசயமாக ஐந்து தலை நாகம் அவனை பின் தொடர்ந்து, குழந்தைக்கு நிழல் போல் வந்து கொண்டிருந்தது.
வாசுதேவன் கோகுலத்தை அடைந்ததும், நந்தகோபரின் வீட்டு கதவுகள் திறந்திருப்பதைக் கண்ட வாசுதேவர், மெதுவாக குழந்தைகளை மாற்றினார். பின் அந்த பெண் குழந்தையுடன் மீண்டும் கம்சனின் சிறைச்சாலைக்கு சென்றார். சிறைச்சாலைக்குள் நுழைந்தவுடன் அதன் கதவுகள் தானாக மூடிக்கொண்டன.
பெண் குழந்தை பிறந்திருப்பதாக கம்சனிடம் சிறை காவலர்கள் சொல்லவே, கோபத்தோடு வந்த கம்சன் அந்த குழந்தையை கல்லின் மீது வீசி எறிந்தான். அந்த குழந்தை விஷ்ணு பகவானின் யோகமாயாவாக உருமாறி சிரித்தாள். ஏய் முட்டாள் கம்சனே, உன்னை கொல்லப்பிறந்தவன் பத்திரமாக வளர்ந்து கொண்டிருக்கிறான். அவனே உன்னை காலம் வரும் போது வந்து வதம் செய்வான் என்று கூறி மறைந்தாள்.
தன்னை அழிக்கப் பிறந்த குழந்தை எதிரியை எப்படியாவது அழிக்க வேண்டும் என கம்சன் நினைத்தான். அதற்காக பல அரக்கர்களை அனுப்பினான். மார்பகத்தில் விஷம் தடவி வந்த அரக்கியின் மூச்சை நிறுத்தினான் கண்ணன் புட்டனாவின் மரணத்தை கேள்விப்பட்ட கம்சன் அதிர்ந்தான். அதனால் ஷகாட்சுரா என்ற அரக்கனை அனுப்பி வைத்தான்.
வண்டி போல் வேடமணிந்து கொண்ட அவன் கோகுலத்தை அடைந்தான். யசோதயோ கிருஷ்ணாவின் பாதுகாப்பான மற்றும் நீண்ட ஆயுளுக்கு அவள் பல புனித சடங்குகளையும் மேற்கொண்டார். மர வண்டியின் அடியில் படுத்திருந்த படுத்திருந்த குழந்தை கிருஷ்ணரைப் பற்றி கவனிக்க மறந்தாள் யசோதா. ஷகாட்சுரா அரசன் குட்டி கிருஷ்ணரின் மேல் வண்டியை ஏற்றி நசுக்கிக் கொல்ல நினைத்தான். பகவான் கிருஷ்ணரோ அந்த வண்டியின் சக்கரத்தை உதைத்தார். மிகப்பெரிய சத்தத்துடன் அந்த வண்டி உடைந்தது.
குழந்தையாக இருந்த போதே தன்னை அழிக்க வந்த அரக்கர்களை கொன்ற கண்ணன் கடைசியாக தனது தாய் மாமன் கம்சனையும் வதம் செய்து கொன்றார். கண்ணனின் பிறப்பு அசுர வதத்திற்காக மட்டும் நிகழ்ந்ததல்ல. போர்க்களத்தில் பகவத் கீதையை போதித்து மண்ணுலக மக்களை ரட்சிக்க வந்தவராய் இன்றைக்கும் பல வீடுகளில் குட்டிக்கண்ணனாக வலம் வருகிறார்.