- கோபி சங்கர்
கிழக்கு பதிப்பகம்
குறிப்பு: பல்வேறு வகையான பாலின உறவுகளும், முறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளதால் இந்த புத்தகம் மற்றும் அதன் விமர்சனம் இரண்டுமே முற்றிலும் 18 வயதிற்கு மேற்பட்ட வயது வந்தோருக்கு மட்டுமே ஆகும்.
தான் ஆட்சிக்கு வந்த முதல் நாளில் அமெரிக்க அதிபரான டிரம்ப் ரத்து செய்த பல்வேறு நிர்வாக உத்தரவுகளில்
"பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் பாலியல் சிறுபான்மையினரை உள்ளடக்குவது (DEI) ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் LGBTQ+ வகை மனிதர்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கான உரிமை"களை ஊக்குவித்த முந்தைய பைடன் ஆட்சியின் நிர்வாக உத்தரவுகளும் அடங்கும் அந்தளவு பாலின சிறுபான்மையினர் மீதான காழ்ப்புணர்வு உலகமெங்கும் சமீபமாக அனைத்து மத அடிப்படைவாதிகளாலும் அதிகரித்து வருகிறது.
இருந்தாலும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் முகநூலில் பாலினம் என்பதில் கிட்டத்தட்ட 72 வகையான பிரிவுகளில் மனிதர்கள் தங்களை அடையாளப்படுத்தி வருகின்றனர். உலகமெங்கும் பல்வேறு அரசாங்கங்களின் எதிர்ப்புகளுக்கு இடையே பால் சிறுபான்மையினர் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்துவதும் அதே அளவு அதிகரித்துமுள்ளது.
பால், பாலினம், பாலியல் ஆகியவைகுறித்த புரிதல் நம் இந்தியச் சமூகத்தில் மிக மிகக் குறைவாகவும் எதிர்மறையாகவுமே உள்ளது. மேலும் பாலினச் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் குடும்பத்தாலும் உறவினர்களாலும் நண்பர்களாலும் சமுதாயத்தாலும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் நம்மால் புரிந்து கொள்ள இயலாத அளவு கொடூரமானது. பாலினங்களைப் பற்றியும் பாலின சமூகத்தினரின் வழக்கங்களையும் குறித்த விழிப்புணர்வு உருவாவது நம் தமிழ்நாட்டில் மிகவும் அவசியமான ஒன்றாகும். அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக பாலின சிறுபான்மையினர் தங்களை சமுதாய பொது நீரோட்டத்தில் வெளிப்படுத்திக் கொள்ளும் வகையில் கலை இலக்கிய கலாச்சார நிகழ்வுகளான வானவில் பேரணி, புத்தகத் திருவிழாக்கள், பட வெளியீடுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு வெளியான இந்த புத்தகம் அந்த ஆண்டுகளில் இந்திய அளவில் சட்டப்பிரிவு 377-வை நீக்க கோரிய உச்ச நீதிமன்ற வழக்கின் தீர்ப்பை எதிர்நோக்கிய பாலியல் சிறுபான்மையினரைப் பற்றிய புரிதலை உருவாக்குவதற்காக எழுதப்பட்ட ஒரு முன்னோடி புத்தகம் ஆகும். உலக அளவில் எல்லா மக்களாலும் புரிந்து கொள்ளக்கூடிய ஆண் மற்றும் பெண் ஆகியோரையே பாலின வகையாக ஏற்றுக்கொண்டு வருகின்றனர்.
ஆனால் அதையும் தாண்டி திருநர் - Transgender, திருநங்கை - Transwomen, திருநம்பி - Transmen, பால் புதுமையர் - Genderqueer, பால் நடுநர் - Androgyny, முழுநர் - Pangender, இருநர் - Bigender, திரிநர் - Trigender, பாலிலி - Agender, திருநடுகர் - Neutrois, மறுமாறிகள் - Retransitioners, தோற்றப் பாலினத்தவர் - Appearance gendered, முரண் திருநர் - Transbinary, மாற்றுப்பால் உடையணியும், திருநர் - Transcrossdressers, இருமை நகர்வு - Binary's butch, எதிர் பாலிலி - Fancy, இருமைக்குரியோர்- Epicene, இடைபாலினம் - Intergender, மாறுபக்க ஆணியல் - Transmasculine, மாற்றுப்பக்கபெண்ணியல் - Transfeminine, அரைப்பெண்டிர்- Demi girl, அரையாடவர் - Demi guy, நம்பி ஈர்ப்பனள் - Girl fags, நங்கை ஈர்ப்பனன் - Guy dykes, பால் நகர்வோர் - Genderfluid, ஆணியல் பெண் - Tomboy, பெண்ணன் - Sissy, இருமையின்மை ஆணியல் - Non binary butch, இருமையின்மை பெண்ணியல் - Non binary femme, மாற்றுப்பால் உடை அணிபவர் - Cross dresser என பல்வேறு வகையான பாலியல் சிறுபான்மையினர் நம்முடைய வாழ்ந்து வருகின்றனர் என்று உண்மை மறுக்க முடியாதது.
ஆனால் நாம் இவர்களைப் பற்றி அறிந்து கொண்டு உள்ளோமா என்பது கேள்விக்குறியது சாதாரண பொது மக்கள் தெரிந்து கொள்வதை விட இத்தகைய தன்மையை கொண்டுள்ளவரே தனது பாலியல் வகைப்பாடு இன்னது என்று அறியாமல் வாழ்ந்து வருவது கொடுமையே. இதனை தெளிவுபடுத்தும் வகையில் இந்த புத்தகம் கிட்டத்தட்ட 70 தலைப்புகளில் பால் புதுமையினர் கோட்பாடு முதற்கொண்டு ஒருவருக்கு ஒருவர் ஏற்படும் பாலியல் ஈர்ப்புகள், அவற்றின் பிரிவுகள், பாலியல் தன்மைகள், அவற்றின் பிரிவுகள் என வரலாற்று ரீதியாக ஆரம்பித்து ஒவ்வொரு பண்டைய நாகரிகங்களான கிரேக்கம், ரோம், சிந்து சமவெளி, பாகானிய நாகரிகம், பார்சிய நாகரிகம், எகிப்திய நாகரிகம், சீன நாகரிகம், ஆப்ரிக்க நாகரிகம் என உலகின் ஒவ்வொரு பகுதிகளிலும் பால் சிறுபான்மையினர் எங்கனம் வரலாற்று தொடக்கத்திலிருந்து நடத்தப்பட்டு வருகின்றனர் என்பதை வெவ்வேறு வரலாற்று ஆய்வு ஆவணங்கள் மூலமாக எழுதப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியமாக சாதாரண பொதுமக்கள் இவர்களை தவறாக கருதுவது போல திருநங்கைகள் நம்பி ஈர்ப்பினர் எனப்படும் பெண்கள் மீது மையல் கொள்ளும் திருநங்கைகள் மீது காட்டும் வன்மமும் இருபாலினத்தவர் மீது பிற பாலின வகையினர் காட்டும் விரோதமும் இந்திய திருநங்கைகளுக்குள் காணப்படும் ஹஜ்ரா எனப்படும் குழுவின் ஆதிக்கவும் அவ்வப்போது காணக் கிடைப்பது அவர்களுக்குள் நிலவும் ஒற்றுமையின்மையை சுட்டிக் காட்டுகிறது.
பெரும்பாலும் இத்தகைய பாலின சிறுபான்மையினர் மதங்களின் பொருட்டே ஒடுக்கப்படுகிறார்கள்
என்ற தெளிவில் இருந்த எனக்கு, இந்த புத்தகத்தின் வழியாக, ராமகிருஷ்ண மடம் மற்றும் ஹரே ராம ஹரே கிருஷ்ணா ஆகிய இயக்கங்கள் இவர்களை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அக்குழுவில் ஆரம்ப கால சீடர்களுக்குள்ளேயே இத்தகைய பால் புதுமையினர் தங்களை வெளிப்படுத்திக் கொள்வது சாதாரணமாக இருந்துள்ளது இன்னும் தகவல் முற்றிலும் மாறுபட்ட கோணத்தை மற்றும் புரிதலை கொடுத்துள்ளது. உலகமெங்கும் இலக்கியங்கள் மூலமாக பால் புதுமையினர் தங்களை எவ்வாறு மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் அடையாளப்படுத்திக் கொண்டு வருகின்றனர் என்பதோடு, இலக்கியங்கள் வழியாக தங்கள் எண்ணக் குமுறலை பதிவு செய்துள்ளதை எல்லா மொழி இலக்கியங்களின் வாயிலாகவும் பல்வேறு பிரபலமான மனிதர்கள் மற்றும் முக்கிய அறிவியலாளர்களின் வரலாற்று சம்பவங்களை இப்புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளார் இதன் ஆசிரியர்.
பால் புதுமையினர் மத்தியில் நிலவும் மனச்சோர்வு வியாதிகள், சமுதாயம் மட்டுமல்லாமல் தங்களை தாங்களே ஏற்றுக் கொள்ள முடியாமை, தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமை, சமுதாயக் கட்டுப்பாடுகள் காரணமாக தங்களை வெளிப்படுத்திக் கொள்ள முடியாத வேதனை ஆகியவை காரணமாக தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்ளும் போங்கு எப்பொழுதுமே இருந்து வருகிறது என்பதும் தற்போது வரை இந்த சதவீத எண்ணிக்கை குறையவே இல்லை என்பதும் மிகவும் வருந்தத்தக்கது.
பொதுவெளியில் தங்களை பால் புதுமையினராக வெளிப்படுத்திக் கொள்ளும் இத்தகைய நபர்களை சக மனிதர்கள் மதிப்பதும் அவர்களுக்கான வெளியை அமைத்துக் கொடுப்பதும் ஒரு நல்ல வளர்ச்சியடைந்த, நாகரிகமடைந்த சமுதாயத்தின் அளவுகோல் என நான் நம்புகிறேன். அத்தகைய சமுதாயமாக நம்முடைய தமிழ் சமூகம் மேம்பட வில்லை என்பது வேதனைக்குரியது. அத்தகைய வளர்ச்சியை நோக்கியே இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது என்பது திண்ணம்.
2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த புத்தகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள பால்புதுமையினரை குறிக்கும் பல்வேறு தமிழ் சொற்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின் கீழ் வெளியிடப்பட்டுள்ள அரசு சொற்க்களஞ்சியத்தில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பால், பாலினம், பாலியல் விழைவு ஆகியவை பற்றிய பாடத்திட்டங்கள் பிற்காலத்தில் தயாரிக்கப்பட்டார் இந்த புத்தகத்தின் ஆரம்ப அத்தியாயங்கள் அதில் கண்டிப்பாக இடம் பெறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை அந்த அளவு தெளிவாக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் யார் யார் எத்தகைய தன்மையை கொண்டுள்ளவர்கள் என்பது விளக்கப்பட்டுள்ளது. அந்த விதத்தில் தமிழக எழுத்துப்பரப்பில் இந்த புத்தகம் மாற்றுப் பாலினத்தவரை உரிய அளவில் வெளிக்காட்டி உள்ளது என்று தாராளமாக நம்பலாம்.