Breaking News :

Wednesday, February 05
.

காதலியின் பெயரை உச்சரிக்கும்போது?


தஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் 1848இல் வெளியானது, இந்தக் கதையின் நாயகனுக்குப் பெயர் கிடையாது. காரணம் அது நீங்களாகவோ நானாகவோ இருக்கக்கூடும். காதலிப்பவனுக்குப் பெயர் எதற்காக? ஆனால் காதலிக்கப்படும் பெண்ணிற்குப் பெயர் நிச்சயம் வேண்டும். காதலியின் பெயரை உச்சரிக்கும்போது அது ஒளிரத் துவங்கிவிடும்.

கதையின் வழியே நாஸ்தென்காவை நாமும் காதலிக்கத் துவங்கிவிடுகிறோம்.வெண்ணிற இரவுகள் என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன. ஒன்று உறக்கமில்லாத இரவு. மற்றது இரவிலும் சூரியன் ஒளிரக்கூடிய இரவு. கோடைக்காலத்தில் பனிப்பிரதேசங்களில் இது போல நிகழ்வதுண்டு.

கண்ணாடியில் பட்டு ஒளி பிரதிபலிப்பதைப் போல நாஸ்தென்காவின் முன்னால் அவனது ஆசைகள் ஒவ்வொன்றாக வெளிப்படுகின்றன. காதல் அவனைப் பித்தாக்குகிறது. தன்விருப்பமில்லாமல் மேலும் கீழும் அலையும் மணற்கடிகாரத்தின் மணற்துகளைப் போல அவன் உருமாறுகிறான். தனிமைதான் அவனைக் காதல் கொள்ள வைக்கிறது. தனிமைதான் அவனை ஆற்றுப்படுத்துகிறது.

பீட்டர்ஸ் பெர்க் நகரின் பகலும் இரவும் காதலின் ஒளியாலே நிரம்பியிருக்கிறது. வெண்ணிற இரவுகளின் வழியே நாஸ்தென்காவின் நிழலைப் போல நாமும் அவள் கூடவே செல்கிறோம். அவளைக் காதலிக்கிறோம். அவளால் காதலிக்கப்படுகிறோம். அவளுக்காகக் காத்திருக்கிறோம்.

காதலால் மட்டுமே வாழ்வை மீட்டெடுக்கமுடியும் என்று அந்தக் கனவுலகவாசி நம்புகிறான். காதலின் உன்னதக் கனவைச் சொன்ன காரணத்தால் தான் இணையற்ற காதல்கதையாக வெண்ணிற இரவுகள் கொண்டாடப்படுகிறது

 - எஸ். ராமகிருஷ்ணன்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.