வாழ்க்கையில், யாரேனும் நமக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவி செய்தால், அவர்களுக்கு நன்றி சொல்லுவோம். ‘அவராலதான் இன்னிக்கி நான் நல்லாருக்கேன். அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன்’ என்று சொல்லாதவர்கள் என்று எவருமில்லை. ஆக, வாழ்வில் நன்றியுணர்வு மிக மிக முக்கியம்.வாழ்க்கையில் ஒரு வேலையோ, நாலு காசு தந்தோ, ஆபத்துசமயத்தில் பக்கத்துணையாக இருந்தோ நமக்கு உதவியவர்களை நன்றியுடன் சொல்லிக்கொண்டிருக்கிறோம். அப்படியெனில், இந்த உலகுக்கு நாம் வருவதற்குக் காரணமாக இருந்தவர்களை நாம் நன்றியுடன் நினைக்கவேண்டாமா? நாம் இந்த உலகில் வருவதற்கு நம் தாய் தந்தை காரணம். அவர்களின் தாய் தந்தை காரணம். அவர்களுக்கும் முன்னே உள்ள தாய் தந்தை காரணம். இப்படி மூன்று தலைமுறை, மூன்று வம்சங்களின் தாய் தந்தையரை வணங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது சாஸ்திரம்.
அப்பேர்ப்பட்ட முன்னோர்கள், நம் வாழ்வின் ஏணிகள். விதைகள். அவர்களை ஒருபோதும் மறக்கக்கூடாது. அவர்களுக்கு நன்றி சொல்லாமல் இருக்கக்கூடாது. அப்படி நன்றி சொல்லும் விஷயம்தான் தர்ப்பணம், வழிபாடு என்பதெல்லாம்!
தர்ப்பணம் என்றால் எள்ளும் தண்ணீரும் விடவேண்டும். அமாவாசை என்றால் எள்ளும் தண்ணீரும் விடவேண்டும்.
தர்ப்பணம் எதற்காகச் செய்யவேண்டும்?
ஆத்மாவில் பாவம் செய்த ஆத்மாக்கள், புண்ணியம் செய்த ஆத்மாக்கள் உண்டுதானே. ஆத்மாக்களும் பாவம் புண்ணியம் என்று இரண்டும் உண்டுதான். அந்த பாவ புண்ணியங்களைக் கொண்டுதான், பித்ரு லோகத்தில் அவர்களுக்கான இடம் அமையும் என்பதாகச் சொல்கிறது சாஸ்திரம்.
அமாவாசை முதலான நாளில், முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொண்டு தர்ப்பணம் செய்யும் போது, அது நம் முன்னோர்களைப் போய்ச் சேரும். அதனால் அவர்கள் செய்த பாவங்களின் கெடுபலன்கள் குறையும். புண்ணியங்கள் பெருகும். நாமும் முன்னோரை வணங்கிய பலனைப் பெறலாம். முன்னோருக்குப் புண்ணியம் சேர்த்த, பாவங்களைக் குறைத்த புண்ணியத்தைப் பெறலாம்.
தினமும், முன்னோரை வழிபடவேண்டும். நம்மை இந்த உலகுக்கு வரக் காரணமாக இருந்த முன்னோர்களை தினமும் வழிபடுவதில் தவறு இல்லை. அதேசமயம் முன்னோர் வழிபாட்டை வருடத்திற்கு 96 முறை தர்ப்பணம் செய்யவேண்டும், எள்ளும் தண்ணீரும் விடவேண்டும் என்றும் விவரிக்கிறது சாஸ்திரம்.
அதாவது, மன்வாதி 14 நாட்கள், யுகாதி 4 நாட்கள், மாதப் பிறப்பு 12 நாட்கள், அமாவாசை 12 நாட்கள், மஹாளய பட்சம் 16 நாட்கள், வியதீபாதம் 12 நாட்கள், வைத்ருதி 12 நாட்கள், அஷ்டகா 4 நாட்கள், அன்வஷ்டகா 4 நாட்கள், பூர்வேத்யு 4 நாட்கள் என்று தர்ப்பணம் செய்யவேண்டும்.
யாரெல்லாம் தர்ப்பணம் செய்யவேண்டும்? செய்யக்கூடாது?
தாயும் தந்தையும் இல்லை என்றிருப்பவர்கள் அவசியம் தர்ப்பணம் செய்யவேண்டும். நம் தாய் தந்தையரைத் தவிர, முந்தைய முன்னோர்களை நமக்குத் தெரிந்திருக்கலாம். தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவர்களை மனதால் நினைத்து, அவர்களுக்கு நன்றி சொல்லும் நன்னாள்தான் அமாவாசை தினங்கள். முக்கியமாக... ஆடி அமாவாசையில் வணங்கவேண்டும்.
‘எனக்கு அப்பா இருக்கிறார். அம்மா இல்லை’, ‘எனக்கு அம்மா உண்டு, அப்பா இல்லை’, எனக்கு அப்பா அம்மா இரண்டுபேருமே இல்லை, இறந்துவிட்டார்கள்’ என்றால் அவர்கள் நிச்சயமாக தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.
‘என் அண்ணன் இருக்கிறார். அவர்தான் கொள்ளிவைத்தார். தம்பி உண்டு. அவர்தான் கொள்ளிவைத்தார்’ என்றாலும் தாயாரை அல்லது தந்தையை அல்லது இருவரையும் இழந்த சகோதரர்கள் அனைவருமே தர்ப்பணம் செய்ய வேண்டும். எள்ளும் தண்ணீரும் விடவேண்டும். ‘என் அண்ணன் தர்ப்பணம் செய்கிறாரே. நானும் செய்யவேண்டுமா?’ எனும் கேள்விக்கே இடமில்லை. மகன்கள் அனைவருக்கும் சொத்தில் எப்படி பங்கு உண்டோ, மகன்கள் அனைவருக்கும் பெற்றோரின் கடனை அடைப்பது எப்படிக் கடமையோ, அதேபோல், மகன்கள் எல்லோருமே தர்ப்பணம் செய்யவேண்டும் என்றும் அப்படிச் செய்யாததெல்லாம் பாவமாக, நம் தலையிலும் நம் சந்ததியினரின் தலையிலும் வந்துவிடும் என்றும் விவரிக்கிறது சாஸ்திரம்.
ஆகவே, அமாவாசை நாளில், ஆடி அமாவாசை நாளில், பித்ருக்களுக்கு நன்றி சொல்லும் நல்லவாய்ப்பாக எடுத்துக்கொண்டு தர்ப்பணம் செய்து வழிபடுவோம். அவர்களுக்கு மானசீகமாக நன்றி சொல்லுவோம்