Breaking News :

Thursday, November 21
.

அருள்மிகு ஆற்றுக்கால் பகவதி அம்மன் திருக்கோயில், கேரளா


மூலவர்: பகவதி அம்மன்
தீர்த்தம்: கிள்ளியாறு
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன் ஊர்:ஆற்றுக்கால்
மாவட்டம்: திருவனந்தபுரம்
மாநிலம்: கேரளா

மதுரையை எரித்த கற்புக்கரசி கண்ணகியின் அவதாரம்தான் ஆற்றுக்கால் பகவதி எனத் தல புராணம் கூறுகிறது. கண்ணகியின் கணவன் கோவலன் திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் ஆணையால் கொல்லப்பட்டான்.

கண்ணகி நீதிகேட்டு, “தன் கணவன் கள்வன் இல்லை” என நிரூபித்ததும் மன்னன் தான் செய்த தவறை உணர்ந்து உயிர்விட்டான். இருந்தும், சின மிகுதியால் அவள் மதுரையை எரித்தாள். பின்னர், சேரநாட்டிலுள்ள கொடுங்கலூரில் தங்கினாள். அங்கு சேரமன்னன் கண்ணகிக்கு கோயில் கட்டினான். கொடுங்கலூர் செல்லும் வழியில் ஆற்றுகாலிலுள்ள கிள்ளி ஆற்றின் கரையிலும் தங்கினாள். அங்கும் ஒரு கோயில் எழுப்பப்பட்டது.

சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் காலத்திலேயே இந்தக் கோயில் கட்டப்பட்டதாக ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது. பகவதியை இவ்வூரின் தாயாகக் கருதுகிறார்கள். தங்கள் இல்லங்களில் நடக்கும் எந்த விசேஷமாக இருந்தாலும் முதல் மரியாதை இந்த அம்மனுக்குத் தான். ஆதிசங்கரர் இத்தலத்தில் இயந்திரம் நிறுவி வழிபட்டதாகவும், அவருக்குப் பின் வித்யாதிராச சட்டம்பி சுவாமிகள் இத்தலத்தில் நீண்ட காலம் தங்கியிருந்த தாகவும் கூறுவர்.

இத்தலத்து அம்மன் கத்தி, கேடயம், சூலம், அட்சய பாத்திரத்தை ஏந்திய நிலையில் அரக்கி ஒருத்தியை அடக்கி அவள் மேல் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். தீய குணங்களை அடக்க வேண்டும் என்பதை இது குறிக்கிறது. எனவே தான் பொங்கல் விழாவில் கண்ணகி வரலாற்றை அடிப்படையாக கொண்ட பாடல்கள் பாடப்பெறுகிறது. இத்தலத்திலும் சிற்பங்களிலும் கண்ணகியின் கதை நிகழ்ச்சி காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன.

நுழைவு வாயிலில் பெண் வாயில்காப்போர்கள் உள்ளனர். கருவறையில் இரண்டு உருவங்கள் உள்ளன. புராதனமான மூல உருமீது ரத்தினங்கள் பதித்துத் தங்க அங்கி சாத்தப்பட்டுள்ளது. மூலஉருவின் கீழ் திருமுழுக்காட்டு உருவம் உள்ளது. இதைத்தான் பக்தர்கள் வணங்க முடியும். கோயில் முழுவதும் செம்புத்தகடு வேயப்பட்டுள்ளது.

பிரகாரத்தில் கணபதி, சிவன், நாகர், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன. கோபுரங்களில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள், கண்ணகியுடன் இக்கோயிலுக்கு உள்ள தொடர்பை எடுத்துக் காட்டுகிறது.

கேரளாவில் பெண்களின் சபரிமலையாக ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் அமைந்துள்ளது. பெண்கள் இத்தலத்திற்கு இருமுடி கட்டிச் செல்கிறார்கள். மாசி மாதம் பத்து நாட்கள் நடக்கும் பொங்காலை எனப்படும் பொங்கல் திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும். பூரம் நட்சத்திரத்தில் நடக்கும் பொங்கல் நிகழ்ச்சியில் இலட்சக்கணக்கான பெண் பக்தர்கள் கலந்து கொள்வர்.

1997, பிப்ரவரி 23ல் நடந்த பொங்கல் விழாவில் 15 இலட்சம் பெண்கள் பொங்கல் இட்டதற்காக இந்த கோயில் “கின்னஸ்” பொத்தகத்தில் இடம் பெற்றது.
2008 பிப்ரவரியில் 25 லட்சம் பேர் பொங்கலிட்டு பழைய “கின்னஸ்” சாதனையையும் முறியடித்து விட்டார்கள்.

ஆடிச்செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இந்த அம்பாளை வழிபடுவது சிறப்பு.
முழுக்காப்பு, பஞ்சாமிர்த முழுக்காட்டு, களப முழுக்காட்டு, கலச முழுக்காட்டு, அட்டதிரவிய முழுக்காட்டு, உதயத்தில் பூசை, அந்தியில் பூசை, மலர் சொரிதல், இலட்சார்ச்சனை, பகவதி சேவை, பந்திருநாழி, 101 பானை பொங்கல், சுற்றுவிளக்கு, திருப்பலி, கல்வி ஆரம்பித்து வைத்தல், குழந்தைகளுக்கு அன்னம் ஊட்டல், துலாபாரம் ஆகிய வழிபாடுகள் இங்கு சிறப்பு.

நவராத்திரி, சிவராத்திரி, ஆடி வெள்ளி தினங்களில் சிறப்பு பூசை செய்யப்படுகிறது.
அம்மை நோய், கண்திருட்டியால் பாதிக்கப்பட்டவர்கள், மன அமைதி இல்லாதவர்கள், எதிரி தொந்தரவு உள்ளவர்கள், வழக்குகளில் சிக்கித் தவிப்பவர்கள், திருமணத்தில் தடை உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்து பலனடைகிறார்கள்.

அம்மனுக்கு பொங்கல் வைத்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் துலாபாரம் காணிக்கை செலுத்துவதாக நேர்ந்து கொண்டு, கோரிக்கை நிறைவேறியதும் துலாபாரம் காணிக்கை செலுத்துகின்றனர்.

ஆற்றுக்கால்,
திருவனந்தபுரம் – 695 009, கேரளா.
+91 471- 245 6456, 246 3130, 2455 600, 2455 700.
காலை 4.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.