Breaking News :

Tuesday, April 22
.

மகா லட்சுமி ஜெயந்தி!


செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமி அவதரித்த தினத்தை மகாலட்சுமி ஜெயந்தியாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகிறோம். செல்வம் பெருகவும், வாழ்க்கையில் அனைத்து விதமான நலன்களையும் பெற்று, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ மகாலட்சுமி தேவியை வழிபட வேண்டிய மிக முக்கியமான வழிபாட்டு நாளாகும். இந்த நாளில் மனதார வழிபடுவபவர்களுக்கு மகாலட்சுமியின் அருள் எப்போதும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. புராண கதைகளின் படி, தேவர்களும் அசுரர்களும் மரணமில்லாத வாழ்வை தரும் அமிர்தத்தை பெறுவதற்காக பாற்கடலை கடைந்த போது அதிலிருந்து வெளிப்பட்ட 14 விதமான பொக்கிஷங்கள் வெளிப்பட்டன. இவற்றில் மூன்றாவதாக வெளிப்பட்டவர் மகாலட்சுமி என பாகவத புராணம் சொல்கிறது. அவளுடைய பிரகாசமான அழகு அனைத்து உலகங்களையும் ஒளிரச் செய்து, தேவர்கள், அசுரர்கள், ரிஷிகள் என அனைவரின் மனங்களையும் கவர்ந்தது.

அப்படி மகாலட்சுமி பாற்கடலில் இருந்து அவதரித்த தினம், மாசி மாத பெளர்ணமி தினமாகும். அதனால் இந்த பெளர்ணமியை வசந்த பெளர்ணமி, மந்தன பெளர்ணமி என பல பெயர்களில் அழைப்பதுண்டு. இத்தகைய சிறப்பு மிக்க *லட்சுமியின் அவதார தினம் இந்த ஆண்டு மார்ச் 14ம் தேதி, மங்கலகரமான வெள்ளிக்கிழமையில் வருகிறது. மார்ச் 13ம் தேதி காலை 11.40 மணிக்கு துவங்கி, மார்ச் 14ம் தேதி பகல் 12.57 மணி வரை பெளர்ணமி திதி உள்ளது. சூரிய உதய நேரத்தில் என்ன திதி உள்ளதோ அது அந்த நாளுக்கான திதி என்பதால், மார்ச் 14ம் தேதியை பெளர்ணமி தினமாக கணக்கில் எடுத்துக் கொண்டு, மகாலட்சுமி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.*

லட்சுமி சொல்லுக்கு அர்த்தம் :

பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட மகாலட்சுமியை, மகாவிஷ்ணு தன்னுடைய துணையாக ஏற்றுக் கொண்டார். அவரை வைஜயந்தி மாலையால் அலங்கரித்து, தெய்வீக துணையாக மகாவிஷ்ணுவுடன் இணைந்தாள் மகாலட்சுமி. புனித நூல்கள் அனைத்தும் மகாலட்சுமியை செல்வம், அதிர்ஷ்டம், மங்களம், அழகு ஆகியவற்றின் உருவமாக போற்றுகின்றன. "லக்ஷ்யா" என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்து தோன்றியதே லட்சுமி என்ற சொல்லாகும். இதற்கு லட்சணம் என்றும் லட்சியம் என்றும் இரண்டு விதமாவ பொருள் சொல்லப்படுகிறது. வாழ்க்கையில் நல்லது மற்றும் மங்களகரமான அனைத்தையும் அளிக்கக் கூடியவள் என்பதை குறிக்கிறது.

மகாலட்சுமியை வழிபடும் முறை :

லட்சுமி ஜெயந்தி அன்று, அவரது சிலையை அழகாக அலங்கரித்து, நான்கு திரிகள் கொண்ட விளக்கை ஏற்றி மகாலட்சுமியை வழிபட வேண்டும். இது அறிவு, ஞானம், செழிப்பு ஆகியவற்றை குறிப்பதாகும். மகாலட்சுமியின் படம் அல்லது சிலைக்கு முன்பாக வலம்புரி சங்குகள் வைத்து வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும். இது மகாலட்சுமிக்கு மிகவும் பிரியமானது என்பதால் வீட்டில் எப்போதும் மகாலட்சுமியின் அருளை நிலைத்து இருக்க செய்யும். மகாலட்சுமியின் சிலை இருந்தால் வாசனை பொடிகள் கொண்டு அபிஷேகம் செய்யலாம். மகாலட்சுமிக்க வாசனை மலர்கள் சூட்டி, அவளை போற்றி துதிக்கும் பாடல்களை பாடி, ஆரத்தி காட்டி வழிபட வேண்டும். மகாலட்சுமி 108 போற்றி, கனகதாரா ஸ்தோத்திரம் போன்ற பாடல்களை பாடி மகாலட்சுமியை வழிபடுவது நல்லது.
மகாலட்சுமியின் அருளை பெற...

மகாலட்சுமிக்கு விருப்பமான பால் பாயசம் அல்லது ஏதாவது ஒரு இனிப்பு செய்து நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். வீடும் மணக்கும் வகையில் தீப தூபங்கள் காட்டுவது, நெய் விளக்கு ஏற்றுவது ஆகியன மகாலட்சுமிக்கு பிரியமான ஒன்றாகும். மகாலட்சுமிக்கு படைத்த இனிப்புக்களை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதால் மகாலட்சுமியின் மனம் மகிழும். இதனால் அவளின் ஆசிகள் நமக்கு எப்போதும் கிடைக்கும். மகாலட்சுமியின் அருளால் செழிப்பான வாழ்க்கை அமையும். வாழ்க்கை முழுவதும் மகாலட்சுமியின் அருள் குறையாமல் நிலைத்து இருக்கும். பலவிதமான நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் என்பது நம்பிக்கை.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.

News Hub