வண்டலூர் மிருகக்காட்சி சாலையில் இருந்து ஐந்து கி.மீ. தொலைவில் கேளம்பாக்கம் செல்லும் வழியில், தாகூர் இன்ஜினியரிங் கல்லூரியின் பக்கத்தில் செல்லும் பாதையில் அரை கி.மீ. தூரத்தில் ரத்ன மங்கலத்தில் இவ்வாலயம் அமைந்திருக்கிறது.
அம்பிகையைச் சரணடைந்தால் அதிக வரம் பெறலாம் என்பது நன்னம்பிக்கை. ஒரே இடத்தில், சுற்றிலும் நூற்றி ஏழு அம்மன்கள் அருள்பரப்ப, நடு நாயகமாக அரைக்காசு அம்மன் எனும் பிரகதாம்பாள் கொலுவீற்றிருக்கும் ஆலயத்தை தரிசித்தால் வரமருளும் அன்னையின் பாசத்தில் மூழ்கலாம் என்பதும் பக்தர்களின் அனுபவ நம்பிக்கை.
கை தவறியோ அல்லது மறந்தோ எங்கேனும் வைத்து விட்ட பொருளை இந்த அரைக்காசு அம்மனை நினைத்து, 'அம்மா உனக்கு வெல்லம் கரைத்து வைக்கிறேன். தொலைந்த பொருள் எனக்குக் கிட்ட அருள வேண்டும்!.' என மனமுருகி நேர்ந்து கொண்டால், தொலைந்த பொருள் எதுவாக இருந்தாலும் உடனே சில நாட்களில் கிட்டி விடும் அற்புதம் இன்றும் நிகழ்ந்து வருகிறது!.
ஆலயத்தில் நுழைந்ததும் வலது புறம் தல Sri விநாயகர் அருளக் காணலாம். அவரது திருவுருவிற்கு நேர் எதிரே பதினெட்டாம் படி கருப்பண்ண சுவாமி கோவில் உள்ளது. ஆண்டிற்கு ஒரு முறை ஆடி மாதம் 18 ஆம் தேதியன்று மட்டும் இந்தக் கருப்பண்ண சன்னிதியின் கதவைத் திறந்து வைத்து விமரிசையாக வழிபாடுகள் சுவாமி. நடத்துகிறார்கள். மற்ற நாட்களில் வருஷம் பூராவும் பூட்டிய கதவிற்கே வழிபாடு!!.
இங்கே கோவில் கொண்டு அருளும் அரைக்காசு அம்மனைச் சுற்றி, புகழ் பெற்ற சக்தி தலங்களில் அருள் மழை பொலிந்து வரும் 107 தேவியர்கள், அங்கே எந்தெந்த திருவுருவில் அருள்கின்றனரோ அதே வடிவில் வரிசையாக இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு தேவியர்க்கும் தனித்தனி விமான கலசம் உள்ளது. இதில் வடிவுடை, கொடியிடை, திருவுடை ஆகிய மூன்று அம்மன்களையும் பௌர்ணமி அன்று தரிசிப்பது விசேஷசம். அதேபோல காமாட்சி விசாலாட்சி, மீனாட்சி, பெண்களின் சபரிமலை தெய்வமான ஆற்றுக் கால்பகவதி, சக்குளத்துக்காவு பகவதியையும் இங்கே தரிசிக்க முடிகிறது
இந்த அன்னையர்களுக்கு குங்கும அர்ச்சனை செய்யும் அன்பர்களுக்கு ஆலயத்தின் சார்பில் ஒரு முறத்தில் மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, கண்ணாடி வளையல், ரவிக்கைத் துணி, கருப்பண்ண சுவாமியின் பிரசாதமான சந்தனம், அரைக்காசு அம்மனுக்கு மிகவும் பிடித்தமான வெல்லம் ஆகியவற்றை வைத்துப் பிரசாதமாகத் தருகிறார்கள்!
தேவியின் கருவறை முன் ஓங்காரமான பஞ்லோகத்தினாலான திரிசூலத்தை தரிசிக்கிறோம். அதன் முன் பலிபீடமும், சிம்ம வாகனமும் இருக்கின்றன. அம்பிகையின் நேர் எதிரே கருங்கல்லினால் உருவாக்கப்பட்ட ஸ்ரீசக்கரத்தின் வடிவான மேரு அமைந்துள்ளது. இந்த மேருவுக்கு பக்தர்கள் தாமே அபிஷேகம் செய்து வழிபடலாம். அர்த்தமண்டபத்தில் உள்ள விதானத்தில் ஒன்று முதல் 108 வரை எண்கள் கொண்ட பிரசன்னயந்திரம் எழுதப்பட்டுள்ளது.
செவ்வாய், வெள்ளி, சனி, அமாவாசை, பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் மேற்சொன்ன அந்த யந்திரத்தின் கீழ் நின்று, கீழே வைக்கப்பட்டிருக்கும் பெட்டியிலிருந்து ஒரு திருவுளச்சீட்டை, அன்னையை தரிசித்தபடியே எடுக்கிறார்கள். அதில் எந்த எண் வருகிறதோ அதற்கான பலனும் அந்தத் திருவுளச் சீட்டிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். இதன்படி பயன் அடைந்த பக்த கோடிகள் ஏராளம்!
கருவறையில் துவாரபாலகிகளாக பத்ரிணி, தீப்தா எனும் தேவியின் தோழியர் இருவர் வீற்றிருக்கின்றனர்.
அரைக்காசு அம்மன் பாசம் - அங்குசம் - வரத அபயம் தாங்கி அர்த்த பத்மா சனத்தில் சாந்தவடிவினளாய் பொலிகின்றாள்.
இந்த அன்னையின் திருவடியின் கீழ் உற்சவ விக்ரகம் உள்ளது! தொடர்ந்து 12 வாரங்கள் இந்தக் கோவிலுக்கு வந்து இந்த அம்பாளைத் தரிசிக்கும் திருமணமாகாத கன்னியருக்கு உடனே திருமணயோகம் கூடி வருகிறது.
மணவாழ்வில் விரக்தி கண்டு பிரியும் நிலையில் உள்ள தம்பதியும் இந்த அன்னையை வந்து தரிசித்திட வேற்றுமை மறைந்து இல்வாழ்வில் இனிமை சேர்ந்திடும் என்பதும் ஐதீகமாக உள்ளது.