பதஞ்சலி ரிஷி (ஆதிசேஷன் )-பாம்பு வடிவினர்.
ஆகையால் அவர் மூச்சுக் காற்று விஷம், அக்காற்றை சுவாசிப்பவர் மரணமடைவார்கள். பதஞ்சலி, தன் கலைகளையெல்லாம் சிஷ்யர்களுக்கு சொல்லித் தர ஆசைப்படுகின்றார். ஆதிசேஷன் வடிவத்தில் பாடங்களை நடத்தித் தர முன்வருகின்றார்.
இக்காரணத்தால், பாடம் நடத்தும்போது சீடர்களுக்கும் தனக்கும் இடையே ஒரு மந்திர சக்தி வாய்ந்த திரை அமைத்துப் பாடம் நடத்துவார். மாணவர்களுக்கு எக்காரணம் கொண்டும் பாடம் நடத்தும்போது திரையை விலக்கக் கூடாது என்ற ஒரு கட்டளையும் இட்டார்.
ஆயிரக்கணக்கான சீடர்களுக்கு பாடங்கள் நடந்து கொண்டிருந்தது. மாணவர்கள் கேட்கும் ஆயிரக்கணக்கான சந்தேகங்களுக்கு அவரவர் கேள்விகளுக்கு தக்கவிதத்தில் அழகுற பதில் கூறி விளக்கங்கள் கூறுவார் ஆதிசேஷன்.
மாணவர்களுக்கோ இது அதிசயமாக இருக்கும். எப்படி ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கு பதில் கூற முடியும் என்ற சந்தேகம் சீடர்களுக்கு ஏற்பட்டது. திரையை விலக்க, குருவின் கட்டளையை மீற வேண்டுமே என்ற பயமும் இருந்தது.
ஒரு நாள் வழக்கம்போல் பாடம் நடந்து கொண்டிருந்தபோது, ஒரு குறும்புக்கார மாணவன் குரு பாடம் சொல்லிக் கொடுப்பதைக் காண வேண்டி ஆர்வமிகுதியில் திரையினைத் தள்ளினான். அங்கே பதஞ்சலி மஹரிஷி, ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷனாக அமைந்ததைக் காண்கிறார்கள்.
திரை தள்ளியமையால், ஆதிசேஷனின் விஷத் தன்மை கொண்ட மூச்சுக் காற்றுபட்டு, எதிரில் இருந்த அனைவரும் இறக்கின்றனர். ஆழ்ந்த வருத்தம் கொண்டார் பதஞ்சலி. இத்தனை காலம் தான் கற்றுக் கொடுத்த அனைத்தும் வீணானதே என்று மிகவும் வருந்தினார்.
ஆனால், ஒரு ஆச்சர்யம். அன்று மட்டும் ஒரே ஒரு சீடர் மட்டும் மிகத் தாமதமாக வந்ததைக் கண்டதும் மிகவும் ஆனந்தித்தார். இவர் ஒருவராவது உயிரோடு இருக்கின்றாரே என்று மகிழ்ச்சி கொண்டார்.
அந்த ஒரு சீடருக்கு தன் அனைத்துக் கலைகளையும் கற்றுக் கொடுத்தார். அவர் தான் கௌடபாதர்.
இந்த கௌடபாதரின் சீடர் கோவிந்த பகவத் பாதர். (இவர் உத்தர கீதைக்கு பாஷ்யம் எழுதியவர்.) கோவிந்த பகவத் பாதரின் சீடர்தான் ஸ்ரீ ஆதிசங்கரர்.
( This post is for sharing knowledge only, no intention to violate any copyrights)