Breaking News :

Thursday, November 21
.

அதியமான் கோட்டை காலபைரவர், தர்மபுரி


காலபைரவர் அமாவாசை வழிபாடு 

 அமாவாசை சிறப்பு தரிசனம் தக்ஷிண கால பைரவர் தரிசனம் தர்மபுரி

 

அதியமான் கோட்டை காலபைரவர்…

 

தகடூரை மையமாகக் கொண்டு கோட்டை கொத்தளத்துடன் வாழ்ந்த சிற்றரசர்களின் வரிசையில் ஒருவர்தான் அதியமான்.

கடையேழு வள்ளல்களில் ஒருவராகப் போற்றப்படும் அதியமானுக்கு தனிச் சிறப்பு உண்டு. ஒருமுறை அதியமான் மன்னருக்கு அபூர்வமான நெல்லிக் கனி கிடைத்தது. அந்த நெல்லிக் கனியை உண்டால் நீண்ட ஆயுளைப் பெறலாம் என்பது தெரிந்திருந்தும், அந்த நெல்லிக் கனியைத் தான் உண்ணாமல், தமிழின்பால் கொண்டிருந்த தனிப் பற்றின் காரணமாக, தனக்குக் கிடைத்த நெல்லிக் கனியை ஔவை பிராட்டிக்கு தந்து மகிழ்ந்தான்.

 

காரணம் கேட்டபோது, அந்த நெல்லிக் கனியைத் தான் உண்பதை விடவும், ஔவை பிராட்டி உண்டால் ஔவையுடன் சேர்ந்து தமிழும் செழித்துச் சிறக்கும் என்று கூறிய வள்ளல் அதியமான். அந்த அளவுக்கு நம் தொன்மைச் சிறப்பு மிக்க தமிழின்பால் அளப்பரிய பற்று கொண்டிருந்தார்.

 

என்ன இருந்தாலும் அதியமான் ஒரு சிற்றரசர்தானே! பொருள் பலமும் சரி, படைபலமும் சரி பகை மன்னர்களுக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு அவரிடம் இல்லை.

 

எப்போது பகை மன்னர்கள் படையெடுத்து வருவார்களோ என்ற அச்சம் இருந்துகொண்டே இருந்தது அதியமான் மன்னருக்கு. நாளடைவில் அந்த அச்சமே அவரை மனநிம்மதி இல்லாமல் செய்தது.

 

தனக்கு மனநிம்மதி கிடைக்கவும், பகை மன்னர்களால் ஆபத்து எதுவும் நேராமல் இருக்கவும் என்ன செய்யலாம் என்று ராஜகுருவையும் அமைச்சர் பிரதானிகளையும் கலந்து ஆலோசித்தார். தன் பகை மன்னர்களிடம் இருந்து பாதுகாக்க படைபலத்தையும் மீறிய தெய்வ சக்தி துணை இருந்தால் நல்லது என்றும், அந்த தெய்வ சக்தி காவல் தெய்வமான கால பைரவர்தான் என்றும் தெளிவு பெற்றார்.

 

சிவாலயங்களில் ஈசான்ய மூலையில் நாய் வாகனத்துடன் காட்சி தரும் கால பைரவர்தான் தன்னையும் காப்பாற்றும் தெய்வம் என்று தெளிந்த மன்னர், கால பைரவருக்கு ஓர் ஆலயம் ஏற்படுத்த விரும்பினார்.

 

கால பைரவரைப் பற்றி அறிந்துகொண்டதும், தன் அமைச்சர்களில் சிலரை வீரர்களுடன் காசிக்கு அனுப்பி, காலபைரவர் சிலையை கொண்டு வர ஏற்பாடு செய்தார். காலபைரவர் விக்கிரகம் வருவதற்குள்ளாகவே, கோயில் கட்டும் திருப்பணியைத் தொடங்கிவிட்டார். கோயில் கட்டி முடிக்கவும், கால பைரவர் விக்கிரகம் வந்து சேரவும் சரியாக இருந்தது.

 

தான் கட்டிய கோயிலில் கால பைரவரை பிரதிஷ்டை செய்தார். கால பைரவரின் கருவறை விதானத்தில் நவகிரகங்களின் திருவடிவங்களையும் வடித்தார். நவகிரகங்களின் ஆற்றலும் கோயிலில் இருக்கவேண்டும் என்பதற்காகவும், கால பைரவரை மட்டுமே ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யக்கூடாது என்பதற்காகவும்தான் அதியமான் மன்னர் நவகிரகங்களை வடித்து வழிபட்டார் என்று சொல்லப்படுகிறது.

 

அதியமான் மன்னர் தனது நாட்டை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கவேண்டும் என்பதற்காக பிரதிஷ்டை செய்த கால பைரவர் என்பதால், தன் திருக்கரத்தில் திரிசூலத்துடன் வாளும் கொண்டு காட்சி தருகிறார்.

 

தனது நாட்டைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட பைரவர் என்பதால், பைரவர் கையில் திரிசூலத்துடன் சேர்த்துப் போர் ஆயுதமான வாளும் வைத்து இன்றளவும் பைரவரை வணங்கி வருகின்றனர்.

 

ஆலயத்தில் அதியமான் மன்னரின் ஆட்சி மற்றும் மக்களின் வாழ்வியல் முறைகளைச் சித்திரிக்கும் அற்புத சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளது.

 

காசிக்கு அடுத்து தனிச் சந்நிதியில் இருக்கும் கால பைரவர் தட்சிண காசி கால பைரவர் என்று பிரசித்தி பெற்றுத் திகழ்கிறார். அதன் காரணமாகவே இந்தத் தலம் முக்தி க்ஷேத்திரம் என்றும் போற்றப்படுகிறது. தருமபுரி மக்கள் மட்டுமல்ல, கர்நாடகா, கேரளா போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து தட்சிண காசி கால பைரவரை வழிபட்டு அருள் பெற்றுச் செல்கின்றனர்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.