ஆவுடையார் கோயில்
திருப்பெருந்துறை நாதனாய ஆத்மநாதசுவாமி நிகழ்த்திய அற்புதங்களுள் மாணிக்கவாகசரை ஆட்கொண்டதன்றி, அந்தணர் குழந்தைகட்கு வேதம் ஓதுவித்தது, 'கீழ்நீர் வெட்டிக் காட்டியது' முதலியவைகளும் அடங்கும். இவ்வரலாறுகளைப் பெருந்துறைப் புராணம், கடவுள் மாமுனிவர் புராணம், வீரவனப்புராணம், திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் முதலியவைகளில் காண்கிறோம்.
அவ்வரலாறுகள் வருமாறு-
1) அந்தணர் கூந்தைகளுக்கு வேதம் ஓதுவித்தது-
ஒரு முறை இறைவனே அந்தணராய் கிழவேடங்கொண்டு பெருந்துறையில் வாழ்ந்து வரும் முந்நூறு அந்தணர் வீட்டுக் குழந்தைகட்கும் வேதசாத்திரங்களைக் கற்றுத்தர முன்வந்தார். அந்தணர்களும் அது கேட்டு மகிழ்ந்து விநாயகரைப் பிரதிஷ்டை செய்து பாடசாலையன்றை ஏற்படுத்தித் தந்தனர். அந்தணர்களின் வீடுகளில் நாடொறும் புழுங்கலரிசி பாகற்காய் முளைக்கீரை சமைத்து அப்பெரியவருக்கு உணவாகத் தந்து வந்தனர். அவரும் அவ்வுணவை உண்டு பிள்ளைகளுக்கு வேதங்களைக் கற்பித்து வந்தார். ஞானயோக சாஸ்திரங்கள், வியாகரணம், தர்க்கம் முதலியவை அனைத்தையும் முறையகாக் கற்பித்தார். குழந்தைகளோடு குழந்தையாய்க் கலந்து ஓடியாடியும், கண்ணைப் பொத்தி விளையாடியும் மகிழ்வித்தார்.
இவருடைய வரவால் குழந்தைகள் பெரிதும் மகிழ்ந்து வேதங்களைப் பயின்று வந்தனர். ஒருநாள் குழந்தைகளோடு விளையாடிய கிழவர் திடீரௌ மறைந்தார். குழந்தைகள் அவரைக் காணாது வருந்தினர் - பெற்றோர்களிடம் முறையிட்டனர். அவர்களும் மனம் வருந்தி எல்லாவிடங்களிலும் தேடினர். பயனில்லை.
அன்றிரவு குழந்தைகள் அனைவருடைய கனவிலும் ஒரே சமயத்தில் இறைவன்தோன்றி, "அந்தணக் கிழவராக வந்து உங்களுக்கு வேத சாத்திரங்களைக் கற்பித்தது நானே. உங்கள் பெற்றோரிடம் சொல்லி இதுவரையில் நான் சுடச்சுட விரும்பியுண்டு வந்த புழுங்கல் அரிசி, முளைக்கீரை, பாகற்காய் ஆகிய இவற்றையே எனக்குச் சமைத்துச் சூட்டோடு நிவேதித்து வரச்செய்யுங்கள்" என்றருளி மறைந்தார். குழந்தைகள் விழித்து, மகிழ்ந்து, தத்தம் பெற்றோர்களிடம் செய்தியைச் சொல்ல, வந்தவர் இறைவனே என்று மகிழ்ந்து வணங்கினர். அன்று முதல் சுவாமிக்கு மேற் சொல்லியவாறே நிவேதனம் செய்யப்பட்டு வருகின்றது. இறைவன் குழந்தைகட்கு வேதசாத்திரங்களை ஓதுவித்த இடமாகிய குருந்தவனத்தில் ஸ்ரீ வித்யா கணபதி எழுந்தருளியுள்ளார். இம்மரபினரே நம்பியார் என்போர். இவர்களே ஆத்மநாதசுவாமி பூஜை செய்து வருகின்றனர்.
2) கீழ் நீர் வெட்டிக் காட்டியது.
பாண்டிய மன்னனின் ஆட்சிகாலத்திலும் துண்டகன் என்னும் அமைச்சன் இருந்தான். அவன் பேராசை கொண்டவன். சிவபுரம் என்னும் இக்கிராமத்தின் வளத்தைக் கேள்வியுற்று அக்கிராமத்தைத்தான் அடைய எண்ணினான். அக்கிராமம் தனக்குச் சொந்தமானது என்றும், அந்தணர்கள் தன்னிடமிருந்து பறித்துக் கொண்டதாகவும் மன்னனிடம் சொல்லிவிட்டுச் சிவபுரம் வந்து அதிகார பலத்தால் அந்தணர்களை விரட்டியடித்தான், எல்லைக்கற்களை யெல்லாம் எடுத்தெறிந்தான். மறையவர்கள் செய்வதறியாமல், அவனை எதிர்க்க மாட்டாமல் சொத்துக்களை இழந்து அலைந்தனர். ஆத்மநாதரே கதி என்று அழுது வேண்டினர்.
அவர்க்கருள விரும்பிய ஆத்மநாதர் வயது முதிர்ந்தவராக வேடங்கொண்டு அந்தணர்களிடம் சென்று, "என்பெயர் பரமசுவாமி, திலையிலிருந்து வருகின்றேன். உங்கள் கிராமத்தைப் பற்றிய விவரமனைத்தும் எனக்குத் தெரியும். உங்கள் நிலையை அறிந்துதான் நான் வந்துள்ளேன். என்னிடமுள்ள பட்டயத்தைக் காட்டி உங்களுடைய பூமியை மீட்டுத் தருகின்றேன். அப்படி மீட்டுத் தந்தால் நீங்கள் எல்லோரும் சேர்ந்து 300ல் 1 பங்கை எனக்குத் தரவேண்டும்" என்றார். அதுகேட்ட அந்தணர்கள், துண்டகனின் கொடுமையைக் கூறி அவரைத் தடுத்தனர். வந்த பெரியவர் அவர்களைத் தைரியப்படுத்தி அழைத்துக் கொண்டு மதுரை வந்தார். வீதியில் உரக்கக் கூவினார். மன்னனுக்குச் செய்தி தெரிந்தது. அவரை அழைத்து அமர்த்தி விவரம் கேட்டான். சிவபுர மகிமையையும், அரசனுடைய குலப்பெருமையையும் எடுத்துரைத்துக் தன் வசமிருந்த பட்டயத்தைக் காட்டினார். சினந்த மன்னன் அமைச்சனை அழைத்து விசாரிக்க, அவனும் தன்னிடமிருந்த பட்டயத்தைக் காட்டினான். இருப்பட்டயங்களையும் பார்த்த மன்னன் செய்வதறியாது திகைத்து, இருவரையும் அநத்ப் பூமிக்குரிய அடையாளங்களைச் சொல்லுமாறு கேட்டான்.
அமைச்சனோ தன் பூமியில் எவ்வளவு வெட்டினாலும் தண்ணீர் வாராது என்று சொன்னான். பெரியவரோ தன் பூமியில் வெட்டினால் நீர் வரும் என்றார். பாண்டியன் இருவரையும் அழைத்துக்கொண்டு சிவபுரம் வந்தான். கோயிலின் ஈசான திசையில் உயர்ந்த மேட்டில் நீரை வரவழைக்குமாறு கூறினான். பெரியவர்
அதற்குடன்பட்டு, அனைத்துத் தீர்த்தங்களையும் அவ்விடத்தில் வருமாறு சங்கற்பித்து, பூமியை வெட்டிக் கீழ் நீரை மேலே வரர்செய்து வெளிப்படுத்தினார், அத்துடன் பூமியின் நான்கு எல்லைகளையும் அடையாளம் காட்டினார். பாண்டியன் துண்டகனைத் தண்டித்ததுடன் அமைச்சர் பதிவியிலிருந்துமூ நீக்கிவிட்டு மதுரை திரும்பினான். அந்தணர்கள் தங்கட்குப் பூமியை மீண்டுத் தந்த பெரியவர் ஆத்மநாதச சுவாமியே என்று துதித்து, அவரைப் பிரம்ம ரதத்தில் ஏற்றி, உபசரித்து, ஊர்வலமாக அழைத்து வந்து, வாக்களித்தபடியே அவருக்கும் ஒரு பங்கை அளித்து, தங்களோடு அவரையும் சேர்த்துக் கொண்டனர். அவரும் (இறைவனும்) அவர்களோடு சேர்ந்து முந்நூற் றொருவராக ஆனார்.
தில்லை தீக்ஷிதர்கள் நடராசப் பெருமானை உள்ளிட்ட மூவாயிரவர் என்பது போல, இத்தலத்தில் "நம்பியார்கள்" ஆத்மநாதரை உள்ளிட்ட 301 பேர் என்று சொல்லப்படுகிறது.
ஆவணி மூலத்தில் குதிரைகள் வரும் என்று சொல்லச் செய்த பெருமான் அவ்வாறே நரிகளைக் குதிரைகளாக்கிக் கொண்டு சென்றார். அவ்வாறு செய்த இடம் நரிக்குடி என்று இன்று வழங்குகிறது.
சிவபுராணம்
"ஈசனடி போற்றி எந்யைடி போற்றி
தேசனடி போற்றி சிவன்சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலனடி போற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி
சீரார் பெருந்துறை நம்தேவனடி போற்றி
ஆராத இன்பம் அருளுமலை போற்றி"
திருச்சதகம்
"ஒருவனே போற்றி ஒப்பில் அப்பனே போற்றி வானோர்
குருவனே போற்றி எங்கள் கோமளக் கொழுந்து போற்றி
வருகஎன் றென்னைநின்பால் வணங்கிடவேண்டும் போற்றி
தருக நின்பாதம் போற்றி தமியனேன் தனிமை தீர்த்தே"
திருப்பள்ளியெழுச்சி
"முந்திய முதல்நடு இறுதியுமானாய்
மூவரும் அறிகிலர் யாவர்மற்றறிவார்
பந்தணை விரலியும் நீயும் நின்அடியார்
பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே
செந்தழல் புரை திரமேனியுங்காட்டித்
திருப்பெருந்துறையுறை கோயிலும் காட்டி
அந்தணனாவதும் காட்டி வந்தாண்டாய்
ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே
செத்திலாப்பத்து
"புலையனேனையும் பொருளென நினைந்துன்
அருள்புரிந்தனை புரிதலும் களித்துத்
தலையினால் நடந்தேன் விடைப் பாகா
சங்கரா எண்ணில் வானவர்க்கெல்லாம்
நிலையனே அலை நீர் விடமுண்ட
நித்தனே அடையார் புரமெரித்த
சிலையனே யெனைச் செத்திடப் பணியாய்
திருப் பெருந்துறைமேவிய சிவனே"
அடைக்கலப்பத்து
"வழங்கு கின்றாய்க்குன் அருளார்
அமுதத்தை வாரிக் கொண்டு
விழுங்குகின்றேன் விக்கினேன்
வினையேன் என் விதியின்மையால்
தழங்கருந்தேனன்ன தண்ணீர்
பருகத் தந்துய்யக் கொள்ளாய்
அழுங்கு கின்றேன் உடையாய் அடி
யேன் உன் அடைக்கலமே."
ஆசைப்பத்து
"கையால் தொழுதுன் கழற் சேவடிகள்
கழுமத் தழுவிக்கொண்டு
எய்யா தென்றன் தலைமேல் வைத்தெம்
பெருமான் பெருமானென்று
ஐயா என்றன் வாயா லரற்றி
அழல்சேர் மெழுகொப்ப
ஐயாற்றரசே ஆசைப்பட்டேன்
கண்டாய் அம்மானே."
அதிசயப்பத்து
"எண்ணிலேன் திருநாமம் அஞ்செழுத்தும் என்
ஏழைமை அதனாலே
நண்ணிலேன் கலைஞானிகள் தம்மொடு
நல்வினை நயவாதே
மண்ணிலே பிறந்திருந்து மண்ணாவதற்
கொருப் படுகின்றேனை
அண்ணல் ஆண்டுதன் அடியரில் கூட்டிய
அதிசயம் கண்டாமே."
புணர்ச்சிப்பத்து
"ஆற்றகில்லேன் அடியேன் அரசே
அவனி தலத்தைம் புலனாய
சேற்றிலழுந்தாச் சிந்தை செய்து
சிவன்எம் பெருமான் என்றேத்தி
ஊற்று மணல்போல் நெக்குநெக்கு
உள்ளே உருகி ஓலமிட்டுப்
போற்றி நிற்பதென்று கொல்லோ என்
பொல்லா மணியைப் புணர்ந்தே"
வாழாப்பத்து
"பாவநாசா உன்பாதமே யல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
தேவர்தந் தேவே சிவபுரத்தரசே
திருப் பெருந்துறையுறை சிவனே
மூவுலகுருவ இருவர்கீழ் மேலாய்
முழங்கழலாய் நிமிர்ந்தானே
மாவுரியானே வாழ்கிலேன் கண்டாய்
வருக என்றருள் புரியாயே
அருட்பத்து
எங்கள் நாயகனே என்னுயிர்த்தலைவா
ஏலவார் குழலிமார் இருவர்
தங்கள் நாயகனே தக்கநற்காமன்
தனதுடல தழலெழவிழித்த
செங்கண் நாயகனே திருப்பெருந்துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அங்கணா அடியேன் ஆதரித்தழைத்தால்
அதெந்துவே என்றருளாயே.
பிரார்த்தனைப்பத்து
"மானோர் பங்கா வந்திப்பார்
மதுரக்கனியே மனம்நெகா
நானோர் தோளாச் சுரையத்தால்
நம்பி இத்தால் வாழ்ந்தாயே
ஊனே புகுந்த உனையுணயர்ந்தே
உருகிப் பெருகும் உள்ளத்தைக்
கோனே அருளுங் காலத்தான்
கொடியேற் கென்றோ கூடுவதே."
குழைப்பத்து
ஒன்றும் போதா நாயேனை
உய்யக் கொண்ட நின்கருணை
இன்றே இன்றிப் போய்த்தோதான்
ஏழை பங்கா குற்றங்கள்
குணமாம் என்றேநீ கொண்டால்
என்தான் கெட்டது இரங்கிடாய்
எண்தோள் முக்கண் எம்மானே.
உயிருண்ணிப்பத்து
நானார் அடியனை வானொரு
நாய்க்குத்த விசிட்டிங்கு
ஊனாருடல் புகுந்தானுயிர்
கலந்தான் உளம்பிரியான்
தேனார்சடை முடியான் மன்னு
திருப்பெருந்துறை உறைவான்
வானோர்களும் அறியாததோர்
வளம் ஈந்தனன் எனக்கே.
பாண்டிப்பதிகம்
அழிவின்றி நின்றதோர் ஆனந்த
வெள்ளத் திடையழுத்திக்
கழிவில் கருணையைக் காட்டிக்
கடிய வினையகற்றிப்
பழமலம் பற்றறுத்தாண்டவன்
பாண்டிப் பெரும்பதமே
முழுதுலகுந்தரு வான்கொடை
யேசென்று முந்துமினே.
திருஏசறவு
நானேயோ தவம் செய்தேன்
சிவாயநம எனப்பெற்றேன்
தேனாய் இன்னமுதமுமாய்த்
தித்திக்கும் சிவபெருமான்
தானேவந் தெனதுள்ளம்
புகுந்தடியேற் கருள்செய்தான்
ஊனாரும் உயிர்வாழ்க்கை
ஒறுத்தன்றே வெறுத்திடவே
அற்புதப்பத்து
மாடும் சுற்றமும் மற்றுளபோகமும்
மங்கையர் தம்மோடும்
கூட அங்குள குணங்களால் ஏறுண்டு
குலாவியே திரிவேனை
வீடுதந் தென்றன் வெந்தொழில் வீட்டிட
மென்மலர்க கழல் காட்டி
ஆடுவித்தென தகம் புகுந்தாண்டதோர்
அற்புதம் அறியேனே
சென்னிப்பத்து
அட்டமூர்த்தி அழகன் இன்னமு
தாய ஆனந்த வெள்ளத்தான்
சிட்டன் மெய்ச்சிவலோக நாயகன்
தென்பெருந்துறைச் சேவகன்
மட்டுவார் குழல்மங்கை யாளையோர்
பாகம் வைத்த அழகன்தன்
வட்டமாமலர்ச் சேவடிக்கண் நம்
சென்னி மன்னி மலருமே.
திருவார்த்தை
வந்திமை யோர்கள் வணங்கியேத்த
மாக்கருணைக்கடலாய் அடியார்
பந்தனை விண்டற நல்கும்எங்கள்
பரமன் பெருந்துறை ஆதிஅந்நாள்
வந்து திரைக்கடலைக் கடந்தன்று
ஓங்குமதில் இலங்கை அதனில்
பந்தணை மெல்விர லாட்கருளும்
பரிசறிவார் எம்பிரானாவாரே.
திருவெண்பா
யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான்
யாவர்க்கும் கீழாம் அடியேனை - யாவரும்
பெற்றறியா இன்பத்துள் வைத்தாய்க்கென் எம்பெருமான்
மற்றறியேன் செய்யும் வகை.
பண்டாய நான்மறை
காணும் கரணங்கள் எல்லாம் பேரின்பமெனப்
பேணும் அடியார் பிறப்பகலக் - காணும்
பெரியானை நெஞ்சே பெருந்துறையில் என்றும்
பிரியானை வாயாரப் பேசு.
"உருவெளி தான்வாதவூர் உத்தமர்க்கு அல்லால் இனமுங்
குருவழி நின்றார்க்கும் உண்டோ கூறாய்பராபரமே." (தாயுமானவர்)
திருப்புகழ்
வரித்தகுங் குமமணி முலைக்குரும் பையர்மன
மகிழ்ச்சி கொண் டிடஅதி விதமான
வளைக்கரங் களினொடு வளைத்திதம்
மயக்கவந் ததிலறி வழியாத
கருத்தழிந் திடஇரு கயற்கணும் புரள்தர
களிப்புடன் களிதரும் மடமாதர்
கருப்பெரங் கடலது கடக்கஉன் திருவடி
களைத்தரும் திருவுளம் இனியாமோ
பொருப்பகம் பொடிபட அரக்கர்தம் பதியடு
புகைபரந் தெரிஎழ விடும்வேலா
புகழ்ப்பெருங் கடவுளர் களித்திடும் படிபுவி
பொறுத்தமந் தரகிரி கடலூடே
திரித்தகொண் டலுஒரு மறுப்பெறும் சதுமுக
திருட்டிஎண் கணன் முதல் அடிபேணத்
திருக் குரந் தடியமர் குருத்வசங் காரொடு
திருப்பெருந் துறையுறை பெருமாளே
"மங்கள மதாகவே வந்து துறைசைதனில்
வந்தடிமை கொண்டலிங்கம்
வளமான கலைக்கு நிகரான சதுர்வேத
மங்களம் இருந்த லிங்கம்
கங்கை பங்காளராய் வேதியர்க்காகவே
காணிபறி கொண்ட லிங்கம்
திங்களும் மும்மாரி பெய்திடவே குருந்தடியில்
சிறப்புடன் வளர்ந்த லிங்கம்."
"சிவசங்கர குருதேசிக பூசித்த
சிந்தை வடிகொண்ட சிவனே
அங்க வேதனையினால் உங்களிடம் அபயமென்று
அலறினேன் ஆதிசிவயோகமாது
அடியனை ரட்சிக்க வரவேணும் இதுசமயம்
ஆளுடை மகாலிங்கமே
மூவரும் முப்பத்து முக்கோடி தேவரும்
முனிவரும் தஞ்சமெனவே
முப்புமெரித்த வழி அப்பனே கதியென்று
மூலமே உமை நம்பினேன்
ஏவலொடு வஞ்சனை மொரப்போடு
எதிரி பகையாளி எல்லாம்
எண்முகம் கண்ட போதிலே திகைத்தோட
ரவி கண்ட பனிபோலவே
தாவிவரும்ட சூரனைவெல் கொண்டரித் தகுரு
ஷண்முகனை ஈன்ற பரனே
தயவு வைத்துன்பாத தெரிசனம் கொடத்தென்று
சஞ்சலம் தீர்த்து வைப்பாய்
அடைக்கலமே நம்பினேன் ஆதிசிவ யோகமா
தரைப் பங்கில் கொண்டபரனே
அடியனை ரட்சிக்க வரவேணு மிதுசமயம்
ஆளுடை மகாலிங்கமே (கவிக்குஞ்சரபாரதியார்)
அஞ்சல் முகவரி -
அருள்மிகு. ஆத்மநாதசவாமி திருக்கோயில்
ஆவுடையார் கோயில் - அஞ்சல் - 614 618.
ஆவூடையார் கோயில் வட்டம் - புதுக்கோட்டை மாவட்டம்