இருபத்தி ஏழு நட்சத்திரங்களில் இரண்டே இரண்டு நட்சத்திரங்கள்தான் திரு என்ற அடைமொழியுடன் உள்ளன. முதலாவது திருவாதிரை. அது சிவனுக்குரியது. அடுத்தது திருவோணம். அது பெருமாளுக்குரியது.
வடமொழியில் சிரவண நட்சத்திரம் என்றழைக்கப்படும் திருவோணத்தில் பௌர்ணமி வருவதால் சிரவண மாதம், ஆவணி மாதம் ஆகியது. தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் முதலான நான்கு புருஷார்த்தங்களையும் தரக்கூடியதாக திருமாலின் நட்சத்திரமாக திருவோணம் அமைந்துள்ளது.
சிம்ம ராசிக்குரியவர் சூரியனாதலால் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவணியை சிங்க மாதம் என்று கூறுகிறார்கள். அம்மாதத்தையே அவர்கள் ஆண்டின் முதல் மாதமாகவும் கருதுகின்றனர்.
ஈரடியால் மண்ணும், விண்ணும் அளந்த திருமால், மூன்றாவது அடியால் மகாபலியைப் பாதாள உலகத்திற்கு அழுத்தி பேரருள் புரிந்தவர் என்று விஷ்ணுபுராணம் கூறுகிறது. மகாபலி, பெருமானுக்குத் தானம் கொடுத்தது இந்த ஆவணி மாத சிரவண துவாதசி நாளில்தான். சிரவணம் துவாதசி திதியில் வந்தால் அது மிகவும் உயர்வானது என்று சொல்லப்படுகிறது. இந்த நாளை ஒட்டிதான் மேஷ விஷு என்று கேரள மாநிலத்தில் விசேஷமாக பத்து நாட்கள் கொண்டாடுகிறார்கள். வீடுகளை அலங்கரித்து திருவிளக்கேற்றி வழிபடுவார்கள். கும்மியடித்துக் கோலாகலம் காண்பார்கள். எல்லா ஆலயங்களிலும் விசேஷ வழிபாடுகள் நடைபெறும். கேரள மாநிலத்தவர் எங்கிருந்தாலும் கொண்டாடி மகிழும் பண்டிகைகளில் ஒன்று திருவோண நாளாகும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திருவோண நாளை விரத நாளாக அனுசரிக்கின்றனர். முதல்நாள் இரவு உபவாசம். திருவோண நட்சத்திர நாளில் மகாவிஷ்ணுவைத் துதிப்பது, விஷ்ணு புராணத்தை பாராயணம் செய்வது, நிவேதனம் செய்த பொருட்களை ஒரு பொழுது மட்டும் உண்பது என விரதம் இருக்க வேண்டிய நாள் இது. விரதம் இருக்க இயலாதவர்கள் அருகாமையில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடலாம். சிரவண நட்சத்திரம் கூடிய நாளில் மாலைப் பொழுதில் மகாவிஷ்ணுவிற்கு கோயிலிலும் வீட்டிலும் நெய் விளக்கேற்றி வழிபட்டால் சிறந்த பலன்களைப் பெறலாம். இதை சிரவண தீபம் என்பர்.
திருமலை திருப்பதியில் சிரவண நாளன்று வெங்கடாசலபதியின் உற்சவரான மலையப்பசுவாமி ஊஞ்சல் மண்டபத்திற்கு எழுந்தருள்வார். அங்கே ஆயிரத்தெட்டு திரிகளைக் கொண்ட நெய் விளக்கு ஏற்றப்பட்டு மண்டபமே ஜோதி வெள்ளத்தில் மிதக்கும். இதை ஸஹஸ்ர தீபாலங்கார சேவை என்பர்.
ஆவணி மூலம் திருநாள், அசுர சக்திகளை வென்று ஒழிப்பதற்குத் துணை செய்யும் என்று கருதுபவர்கள் உண்டு. மூல நட்சத்திரத்தின் அதிதேவதை நிருருதி என்ற அசுரன். தேவசக்தி, அசுரசக்தி என்ற இருவகை சக்திகள் உலகம் நன்மை பெறுவதற்குக் காரணம் என்றும் தெய்வ சக்திகள் ஆத்மாக்களின் பரிணாமத்திற்கு அனுகூலமானவை என்றும் அசுர சக்திகள் ஆன்ம முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பவை என்றும் சொல்லப்படுகிறது. இந்த தேவ&அசுரப் போராட்டத்தில் நாம் இயன்றவரை தெய்வ சக்திகளுக்குத் துணைபுரிய வேண்டுமென்றும் ஞான நூல்கள் கூறுகின்றன.
நிருருதி என்ற அசுரத் தலைவனின் செல்வாக்கு மூல நட்சத்திரத்தை ஆட்கொள்வதால் ஆவணி மூல விழாக் கொண்டாட்டத்தால் ஏற்படும் பக்தி உணர்ச்சியைக் கொண்டு அந்த செல்வாக்கை ஒழிக்க முயல வேண்டும் என்பர்.
நாடெங்கிலும் ஆவணி மூலத் திருவிழா கொண்டாடப்பட்டாலும் மதுரை பிட்டுத் திருவிழா குறிப்பிடத்தக்க ஒன்று. ஏழைக் கிழவியான வந்தி என்பவளுக்காக ஈசன் மனிதர்களோடு மனிதராய்க் கலந்து பிட்டுக்காக மண் சுமந்து, கூலி வாங்கி, பிரம்படியும் பெற்றுக் கொண்ட பெருநாள், ஆவணி மூல நாள்.
மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சுந்தரேஸ்வரர் பொற்கூடையுடனும் பொன் மண்வெட்டியுடனும் இந்த விழா நாளில் வைகையாற்றிலிருந்து கோயிலிற்கு எழுந்தருள்வதைக் காணும் பக்தர்கள் பரவசமடைகின்றனர்.
மாணிக்கவாசகப் பெருமானுக்குத் திருப்பெருந்துறையில் உபதேசம் செய்த குருமூர்த்தி, ‘நீ போய் பாண்டியனைப் பார்த்து ஆவணி மூல நாளில் குதிரைகள் வந்து சேரும் என்று கூறுவாய்’ என்று கூறினாராம்.
ஆவணி மாதம் பௌர்ணமி நாளில் ஆண்களுக்காகக் கொண்டாடப்படும் பண்டிகைதான் ஆவணி அவிட்டம். யஜுர் வேதத்தைப் பின்பற்றுகிறவர்கள் இந்தச் சடங்கைக் கொண்டாட இயலாதபடி ஏதாவது குறைபாடு இருந்தால் புரட்டாசி மாத பௌர்ணமியில் அதை மேற்கொள்வது வழக்கம். ரிக் வேதிகள் சிரவண நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது இதனை அனுசரிக்கிறார்கள். சாமவேதிகள் ஹஸ்த நட்சத்திரமும் பஞ்சமி திதியும் கூடிய நாளில் உபாகர்மம் நடத்துகின்றனர். வேறு விதமாக உபாகர்மம் கொண்டாடும் சாமவேதிகளும் உண்டு புதுப் பூணூல் அணிந்து கொள்வதால் இப்பிறவியிலேயே மற்றொரு பிறவி எடுத்ததாக பொருள். அதனால்தான் பூணூல் அணிபவர்களை துவிஜர்( இரு பிறப்பாளர்) என்று குறிப்பிடுவார்கள்.
துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் செய்வதற்காக ஏற்பட்ட கிருஷ்ணாவதாரம் எனும் பூர்ணாவதாரம் நிகழ்ந்தது, ஆவணி மாத தேய்பிறையின் எட்டாம் நாள். ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய அந்த நாளின் நடுநிசியே கிருஷ்ணன் அவதாரம் செய்த நாள். அந்நாளையே ஸ்ரீஜெயந்தி என்றும், கோகுலாஷ்டமி என்றும் கொண்டாடுகிறோம்.