ஐயப்பமார்கள் என்னென்ன செய்வார்கள்? அவர்களின் கடமைகள் என்னென்ன?
கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்ப பக்தர்களுக்கு ஸ்பெஷல் தான். ஏனெனில் கார்த்திகை மாதம் பிறந்த உடனே ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலைக்கு செல்வதற்காக கடுமையாக விரதம் இருக்க ஆரம்பித்து விடுவார்கள்.
அவ்வாறு விரதம் இருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்பமார்கள் என்னென்ன செய்வார்கள்? அவர்களின் கடமைகள் என்னென்ன? என்பதை பற்றி இன்று தெரிந்து கொள்வோம்.
ஐயப்பமார்கள் என்னென்ன செய்வார்கள்?
மாலை அணிந்த ஐயப்பமார்கள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு விரதத்தை ஆரம்பிப்பார்கள். மேலும் கடுமையாக விரதமிருந்து, "பார்த்த சாரதியின் மைந்தனே உனை பார்க்க வேண்டியே தவமிருந்து" என்ற ஐயப்பனின் பாடலை பாடி நம் செவிகளையும் குளிர செய்வதுண்டு.
இவ்வாறு ஐயப்பமார்கள் செய்யும்போது அந்த புனிதமான யாத்திரையை நாமும் ஒரு தடவையாவது மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் மனதில் ஏற்படும்.
ஐயப்பமார்கள் சரணகோஷத்தை சத்தமாக சொல்லும்போது அங்கிருப்பவர்களின் மனதிற்கும் ஒரு பக்தி பரவசம் வந்துவிடும். இதை நிச்சயம் அனைவரும் உணர்ந்திருப்போம்.
இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்லும் சுவாமிகளை பார்த்து விட்டால் நமக்கு அவர் யாரென்றே தெரியாத போதிலும் நாமும் சேர்ந்தே வழியனுப்புவோம். அந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்தது இந்த ஐயப்ப சுவாமி வழிபாடு.
ஐயப்பமார்களின் கடமைகள் என்னென்ன?
ஐயப்ப சுவாமிக்கு முதன்முதலாக மாலை அணிந்து செல்லும் பக்தர்களை கன்னி சுவாமி என்றே அழைப்பார்கள். அவ்வாறு முதல் வருடம் சபரிமலைக்கு செல்லும் கன்னி சுவாமி குருசாமியை கேட்டே அனைத்து விரதமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.
எருமேலியில் சரம் குச்சி ஒன்றை வாங்கி, அதை சரம் குத்தி (சரம் குத்தி என்றால் சரம் குத்துவதற்காக ஏற்படுத்தபட்ட இடம்) என்ற இடத்தில் சொருகி முதல்முறையாக சபரிமலைக்கு வந்ததை தெரிவிப்பது கன்னி சுவாமியின் கடமை ஆகும்.
3ஆம் வருடம் மாலை அணிந்து செல்லும் பக்தர்களை மணிகண்டன் என்று அழைப்பார்கள். இவர்கள் இருமுடியை கட்டும் பொழுது பித்தளையால் ஆன சிறிய மணியையும் மாலையாக கழுத்தில் அணிந்து சென்று, சபரிமலையில் தரிசனம் முடிந்த பின் சன்னிதானத்தின் பின்புறம் அந்த மணியை கட்டுவார்கள்.
அப்போது, மூன்று வருடங்கள் பூர்த்தியாகி விட்டது. இனி மேல் நான் சபரிமலைக்கு வருவது உன் கருணையில் தான் நடக்க வேண்டும் சுவாமி என்றும், நான் கட்டும் இந்த மணியோசை கேட்டு எனக்கு அருள்புரிவாய் சுவாமி என்றும் சுவாமியிடம் வேண்டி கொள்வார்கள்.
மேலும் குழந்தை இல்லாதவர்களுக்கு இந்த மணியை கொடுத்தால் மணிகண்ட பாலனே பிறப்பார் என்பது பெரும்பாலான குருசாமிகளின் நம்பிக்கை.
18ஆம் வருடம் மாலை அணிந்து செல்லும் பக்தர்களை குருசாமி என்று அழைப்பார்கள். 18ஆம் வருடம் சபரிமலை யாத்திரை என்பது நாம் செய்த கோடி புண்ணியத்திற்கு சமமாகும்.
18ஆம் வருடம் சபரிமலை யாத்திரையின்போது சிறிய தென்னங்கன்று ஒன்றை எடுத்து செல்வார்கள். இதை கண்டதும் குருசுவாமி என்று மற்ற சுவாமிமார்கள் ஆசி வாங்குவார்கள். இதனால் தான் 18ஆம் வருடம் சபரிமலை யாத்திரையை புனித யாத்திரை என்றும் அழைக்கின்றனர்.
18ஆம் வருடம் எப்படி அற்புதங்களை உடையதோ அது போல் இந்த 36ஆம் வருட சபரிமலை யாத்திரையையும் புனித யாத்திரை என்று அழைக்கின்றனர்.
36ஆம் வருடம் மாலை அணிந்து செல்லும் பக்தர்களை மகா குருசாமி என்று அழைப்பார்கள். ஒருமுறை சபரிமலை யாத்திரை சென்று வந்தால் மறுமுறை செல்ல ஆன்மிக ஆவலை தூண்டும் சக்தி வாய்ந்த இந்த புனிதமான யாத்திரையை, ஐயப்பன் மனது வைத்தால் மட்டுமே மாலை போட்டு சபரிமலைக்கு செல்ல முடியும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
கு பண்பரசு