Breaking News :

Saturday, December 21
.

பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவில்!


நினைத்த நேரத்தில் கொட்டும் மழை! மர்மங்கள் நிறைந்த பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவில்...!

அய்யனார் என்றாலே காவல் தெய்வம் என்பது நம்மில் பலருக்கு தெரியும். அவர் காவல் தெய்வமாக நின்று ஊரைக் காப்பது இன்றும் நம்ம ஊர் பக்கம் வழக்கத்தில் இருக்கும் ஒன்றுதான். விநாயகர், ராமர் போன்ற வடநாட்டு கடவுளர்கள் வருகைக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே நம் காவல் தெய்வமாக ஏற்றுக்கொண்டு வணங்கிவருகிறோம். அதன்படி திருநெல்வேலி பகுதியில் சொரி முத்து அய்யனார் மிகவும் புகழ்பெற்ற காவல்தெய்வமாவார். இவர் இந்த காட்டில் நடக்கும் சில மர்மங்களுக்கு காரணமாகவும் இருக்கிறார். வாருங்கள் சொரிமுத்து அய்யனார் இருக்கும் இடத்துக்கே சென்று வருவோம்.

எங்கே இருக்கிறார்

தாமிரபரணி ஆற்றின் கீழ்க்கரையில், சொரிமுத்து அய்யனார் ஒய்யாரமாக அமர்ந்திருக்கிறார். இந்த பகுதிக்கு பாதுகாவல் தெய்வமாக இருக்கிறார் இவர்

காசிக்கு நிகரான தலம்

வட நாட்டில் இருக்கும் காசிக்கு நிகரான ஒரு தலம் என்றால் அது திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள சொரிமுத்து அய்யனார் கோவில் ஆகும்.

யாரும் திருட முடியாது

இந்த காட்டுப்பகுதியில் யாரும் மரங்களைத் திருட முடியாது என்ற நம்பிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. மேலும் இங்கு பெண்கள் பாதுகாப்பாக சென்று வரலாம் என்பதும் நீண்ட காலமாக நம்பப்பட்டு வருகிறது....

எரிந்து சாம்பலான மரம்

இந்த பகுதியில் காவல் தெய்வமாக இருக்கும் சொரிமுத்து அய்யனார் இங்குள்ள காடுகளில் நடைபெறும் அநியாயங்களை தட்டி கேட்பார் என்று நம்புகின்றனர் இங்கு வரும் பக்தர்கள். அதற்கு சான்றாக இவர்கள் கூறுவது, திருச்செந்தூர் கொடி மரத்துக்காக பொதிகை மலையிலிருந்து வெட்டி வரப்பட்ட மரம் ஒன்று கொண்டு செல்லப்படும் வழியில் விபத்துக்குள்ளாகி அந்த வாகனத்தில் பயணித்தவர்கள் சிலர் இறந்தனர். மீதி பேர் படுகாயம் அடைந்தனர். மரம் கொளுந்துவிட்டு எரிந்ததாக அவர்கள் கூறுகிறார்கள்....

சிங்கம்பட்டி ஜமீன்

இந்த கோவில் இருக்கும் பகுதி சிங்கம்பட்டி ஜமீனுக்கு சொந்தமானதாக முன்னர் இருந்துள்ளது. அந்த காலத்தில் சிங்கம்பட்டி ஜமீன் வாரிசுகள் இங்கு வந்து சொரிமுத்து அய்யனாரை வேண்டி செல்வர்.

இந்த பகுதியில் ஒரு பழக்கம் இருக்கிறது. அரசு அதிகாரிகளே இதை செய்ய முன்வருகிறார்கள். அது சொரிமுத்து அய்யனாருக்கு பூசை கொடுப்பது. பூசையிட்ட அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யுமாம். இது கண்கூடாக கண்ட நிகழ்வு என நிறைய பேர் கூறுகிறார்கள்.

காலத்தில் சரியாக பெய்யவேண்டிய மழை தாமதிக்கும்போது ஊர்காரர்கள் எல்லாரும் ஒன்று கூடி, அய்யனுக்கு பூசை செய்கிறார்கள். அய்யனுக்கு பிடித்த அனைத்தையும் படைத்து, ஏழைகளுக்கு அன்னதான வழங்குகிறார்கள். மழையை கண்கூட கண்டு திருப்தியுடன் வீடு போய் சேருகின்றனர்.

தமிழகத்தில் எந்த இடத்தில் வறட்சி இருந்தாலுமே, இந்த பகுதியில் வறட்சி என்பது எப்போதும் இருக்காதாம். அந்த காரணம் சொரிமுத்து அய்யனார்தான். அவர் தன்னுடைய மக்களை நல்லபடியாக காத்தருள்வதாக இறைவனுக்கு வாக்கு கொடுத்தார் எனவும், அதன்படியே இப்போது நடந்துவருவதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர்.

இந்த சொரிமுத்து அய்யனார் கோவில் செல்ல லோயர் கேம்பில் இருந்து அப்பர் கேம்ப் செல்லும் வழியில் இடது புறம் திரும்பி செல்கையில் கண்ணில் படும். ஆற்றைக் கடந்து அந்தப் பக்கம் சென்றால் எளிதில் அடையலாம். அந்த ஆறு மணி முத்தாறு என்று அழைக்கப்படுகிறது.

அமாவாசை நாட்களில் நடக்கும் இந்த சிறப்பு மிக்க விழா மர்மங்கள் நிறைந்ததாக இருக்கும். இன்றுவரை தெரியாத மர்மங்களில் முக்கியமானது சிங்கம்பட்டி ஜமீனின் ஆதி கால பொக்கிஷங்கள் இந்த கோவிலுக்கு அருகே இருக்கும் குகைகளில் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இந்த குகைக்கு யாரும் செல்லமுடியாது. அங்கு என்னென்ன இருக்கிறது என்பதை கூட அறியமுடியாதபடி இருக்கிறது. மீறி யாரேனும் சென்றால் உயிர் திரும்ப முடியாது என்று பயமுறுத்துகிறார்கள். இந்த குகையில் ஜமீன்களின் கோடி கோடியான புதையல்கள் இருக்கலாம் எனவும் பேச்சு உள்ளது.

இந்த கோவிலுக்கு செல்ல மூன்று வழித்தடங்கள் இருக்கின்றன.
வழித்தடம் 1 - தருவை , பத்தமடை, கல்லிடை குறிச்சி, அம்பாசமுத்திரம் வழியாக செல்லும்

வழித்தடம் 2 - பேட்டை, பழவூர், காரிக்குறிச்சி வழியாக வீரவநல்லூர், கல்லிடைக் குறிச்சி

வழித்தடம் 3 - அபிஷேகப்பட்டி, ஆலங்குளம், ஆழ்வார்குறிச்சி வழியாக பாபநாசத்தை அடைவது.

பாபநாசத்திலிருந்து காரையாறு அணையை அடையும் முன்பு கொஞ்சம் தூரத்துக்கு முன்னரே சொரிமுத்து அய்யனார் கோவிலை அடையலாம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.