Breaking News :

Wednesday, February 05
.

தண்ணீரில் மூழ்கியிருக்கும் அதிசயக் கோயில்!


வடஇந்தியாவில் உள்ள மலைப்பாங்கான அழகிய ஊர் என்று எடுத்துக்கொண்டால், அதில் முதலில் இருப்பது ஹிமாச்சல பிரதேசம். இது பனி மூடிய மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்குகளுக்கு மட்டுமல்லாது, பல கோயில்களுக்கும் பெயர் பெற்றது. சிந்த்பூர்ணி, திரிலோகிநாத், மாதா ஜ்வாலா ஜி, பீமாகாளி, நயனா தேவி போன்ற பல கோயில்கள் இங்கு உள்ளன. ஆனால், வருடத்தில் 4 மாதங்கள் மட்டுமே பக்தர்களுக்கு தரிசனம் அளித்து, மீதமுள்ள 8 மாதங்கள் தண்ணீரில் மூழ்கியிருக்கும் ஒரு கோயில்.

இந்தியாவில் பல மர்மமான மற்றும் தனித்துவமான பல இடங்கள் உள்ளன. அவை வளமான வரலாற்றைக் கொண்டுள்ளன. ஹிமாச்சலத்தின் காங்க்ரா மாவட்டத்தில் உள்ள பாது கி லடி (Bathu ki ladi) கோயில்கள் அத்தகைய மர்மமான இடமாகும். பாது கோயில் பஞ்சாப்பின் ஜலந்தரிலிருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மஹாராணா பிரதாப் சாகர் ஏரியில் உள்ள பாங் அணையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் ஒரு தீவில் கட்டப்பட்டுள்ளது.

இக்கோயில் வளாகத்தில் உள்ள பிரதான கோயிலைத் தவிர, எட்டு சிறிய கோயில்களும் இங்கு உள்ளன. அவை தொலைவிலிருந்து பார்க்கும்போது ஒரு மலையில் உள்ள கற்களை போல காட்சி அளிக்கிறது. எனவே, இந்தக் கோயில் பாதுவின் சரம் (ஜபமாலை) என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஆலயத்தின் தனிச்சிறப்பு என்னவெனில், இந்த ஆலயம் வருடத்தில் எட்டு மாதங்கள் ஜூலை முதல் பிப்ரவரி வரை தண்ணீருக்கு அடியில் மூழ்கி இருக்கும். அதன் பின்னர், மார்ச் முதல் ஜூன் வரையிலான மாதங்களுக்கு இடையில் மட்டுமே இக்கோயிலை தரிசிக்க முடியும். பாங் அணை ஏரியின் நீர் மட்டம் உயரும்போது, மீண்டும் இந்தக் கோயில் நீருக்கடியில் ஒரு பகுதியாக மாறுகிறது. இப்படிப் பல மாதங்கள் நீருக்குள் மூழ்கியிருந்தாலும் கோயிலின் அமைப்பில் பெரிய சேதம் எதுவும் ஏற்படுவதில்லை.

அதற்கு இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ள சக்தி வாய்ந்த பாது என்ற கல்தான் காரணம் என்று உள்ளூர் மக்கள் நம்புகின்றனர். இந்தக் கோயிலுக்குள் கற்களில் செதுக்கப்பட்ட காளி தேவி மற்றும் விநாயகரின் உருவங்களை நீங்கள் காணலாம். கோயிலுக்குள் மகாவிஷ்ணுவின் சிலை அவரது ஆதிசேஷ நாகத்தின் மீது படுத்திருக்கும்படி இருப்பதைக் காணலாம். மழைக் காலத்தில் நீரில் மூழ்கிய இந்த கோயிலின் கோபுரத்தை மட்டுமே பார்க்க முடியும்.

இந்தப் பகுதியை ஆண்ட சில உள்ளூர் அரசர்களால் இந்தக் கோயில் கட்டப்பட்டது. ஆனால், ஒருசிலர் இதை புராணக் கதாபாத்திரங்களான பாண்டவர்களுடன் இணைக்கின்றனர். பாண்டவர்கள் வனவாசத்தின்போது 'சொர்க்கத்திற்கான ஏணி'யை இங்கு கட்ட முயன்றதாக நம்பப்படுகிறது. இருப்பினும், ஒரே இரவில் இந்த படிக்கட்டுகளை அவர்கள் கட்ட வேண்டியிருந்ததால், அதை உருவாக்குவதில் வெற்றி பெற முடியவில்லை.

இந்தக் கோயிலில் சொர்க்கத்திற்கு செல்லும் 40 படிக்கட்டுகள் என்று சொல்லப்படும் அமைப்பு இன்றும் உள்ளன.

மக்கள் படகு மூலம் இக்கோயிலை அடையலாம் மற்றும் கோயிலைச் சுற்றி 'ரென்சார்' (Rensar) என்று அழைக்கப்படும் ஒரு தீவு போன்ற அமைப்பு உள்ளது. அங்கு நீங்கள் வனத்துறையின் விருந்தினர் மாளிகையையும் காணலாம். அருகிலுள்ள விமான நிலையம் தரம்சாலாவில் உள்ள காகல் விமான நிலையம் ஆகும். அங்கிருந்து காங்க்ராவிலிருந்து, ஜவாலி அல்லது தமேதா கிராமம் வரை ஒரு டாக்ஸியை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம்...

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.