Breaking News :

Friday, April 04
.

கற்பின் மேன்மையை உணர்த்திய அனுசுயா?


மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் அம்சமாக திகழும் தத்தாத்ரேயர் அவதரித்த நாள் நாளை இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாப்படுகிறது.

கலியுகத்தில் மக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காகவே மும்மூர்த்திகளும் ஒன்று சேர்ந்து ஆச்சார்ய வடிவாக வந்ததே ஸ்ரீ தத்தாத்ரேய ரூபம். பல தெய்வங்களை வழிபட்டாலும் எல்லா தெய்வங்களும் அந்த பரபிரம்ம வடிவமே.

படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழிலை நடத்தும் மும்மூர்த்திகளும் பரபிரம்மத்தின் மூன்று முகங்களே. இந்த கருத்தைச் சொல்ல வந்தது தான் ஸ்ரீ தத்தாத்ரேய அவதாரம். மற்ற எல்லா அவதாரங்களுக்கும் ஆரம்பம், முடிவு உண்டு. ஆனால் இந்த அவதாரத்திற்கு முடிவு கிடையாது. ஏனெனில் அனுமனைப்போல, மார்க்கண்டேயனைப் போல தத்தாத்ரேயரும் நித்ய சிரஞ்சீவியாக போற்றப்படுகிறார். அவரது அவதார நாளில் தத்தாத்ரேயரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

கற்பின் மேன்மை

அத்திரி மகரிஷியும், அவரது மனைவி அனுசுயாவும் காட்டில் வசித்தனர். கணவருக்கு பணிவிடை செய்வது மட்டுமே அனுசுயாவின் பணி. குழந்தை இல்லாத அவள், தனக்கு மும்மூர்த்திகளே தெய்வக் குழந்தைகளாக பிறக்க வேண்டுமென விரும்பினாள்.

இதனை அறிந்த மும்மூர்த்திகளும் தங்கள் தேவியரிடம் ஆலோசனை கேட்டனர். அனுசுயாவிற்கு சோதனை வைத்து, அதில் வெற்றி பெற்றால், அவளது குழந்தையாகப் பிறக்கலாம் என தேவியர்கள் மூவரும் யோசனை தெரிவித்தனர்.

சோதனையில், அவள் தோற்று விடுவாள் என்பது அவர்களது கணிப்பு. அதன்படி பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் துறவி வடிவில் அனுசுயாவின் குடிசைக்கு வந்து உணவிடும்படி கேட்டனர். அவள் உணவுடன் வரும் போது, “ பெண்ணே... நீ நிர்வாணமான நிலையில் உணவிட்டால் தான், அதை ஏற்போம்", என்றனர்.

அனுசுயா கலங்கவில்லை. அவளுக்கு தன் கற்பின் மீதும், பதிவிரதா தன்மையின் மீதும் அதீத நம்பிக்கையுண்டு. “கணவருக்கு பாத பூஜை செய்த தீர்த்தத்தை எடுத்து, நான், என் கணவருக்கு செய்யும் பணிவிடை உண்மையானால், இந்த துறவிகள் குழந்தைகளாகட்டும்.." எனச் சொல்லி, அவர்கள் மேல் தெளித்தாள்.

தெய்வங்களான மும்மூர்த்திகளும்

உடனே மூன்று குழந்தைகளாகி விட்டனர். தனக்கு பால் சுரக்கட்டும் என, அடுத்த வேண்டுகோளை வைத்தாள் அனுசுயா. நிர்வாண நிலையில், குழந்தைகளுக்கு பாலூட்டினாள். வெளியே சென்றிருந்த அத்திரி முனிவர், தன் ஞான திருஷ்டியால் நடந்ததை அறிந்தார்.

வீட்டுக்கு வந்த அவர், அந்தக் குழந்தைகளை ஒரு சேர அணைத்தார். ஒரு உடல், மூன்று தலை, இரண்டு கால்கள், ஆறு கைகளுடன் குழந்தை இணைந்தது. அதற்கு தத்தாத்ரேயர் என்று பெயரிட்டார்.

தங்கள் கணவன்மார்களுக்கு ஏற்பட்ட கதியை அறிந்த முப்பெருந்தேவியரும், அனுசுயாவின் குடிசைக்கு வந்தனர். நடந்ததை கூறி, தங்கள் கணவன்மார்களை சுயவடிவில் திருப்பித் தர கேட்டனர். அவர்களிடம், உங்கள் கணவன்மார் உங்களுக்கு திரும்ப கிடைக்க வேண்டும் என்பது போல், குழந்தையில்லாத எங்களுக்கு இந்தக் குழந்தையும் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் அத்திரி மகரிஷி.

உடனே, மூன்று தெய்வங்களும் எழுந்தனர். ரிஷியே... உங்கள் விருப்பப்படி இந்தக் குழந்தை இங்கேயே இருக்கும். இவன் பெரிய ரிஷியாக விளங்குவான் என்று கூறி, மறைந்தனர். இவரது இன்னொரு பெயர் ஆத்ரேயர், அதாவது அத்த்ரியின் புதல்வர். ஆகவே தத்தாத்ரேயர் என்று இரண்டும் சேர்த்துக் வழங்கப் பெறுகிறார்.

அவதார தலம்

தத்தாத்ரேயர் அவதாரம் நடந்த ஸ்தலம் சுசீந்திரம் என்று கூறப்படுகிறது. தாணுமலையானாக இங்கே இறைவன் இருக்கிறார்.

உத்திரப்பிரதேசத்தில் "குரு மூர்த்தி" என்றாலேயே அது தத்தரைக் குறிக்கின்றது. பிரயாகையில் இவரது கோவில் இருக்கின்றன. கர்நாடகாவில் ஆண்டுதோறும் மூன்று நாட்கள் தத்த ஜெயந்தி கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீதத்தாத்ரேயரை நினைப்பதாலேயே பக்தர்களின் சங்கடங்கள் விலகியோடும் என்று சொல்லப்படுகிறது. இவரை உபாஸித்தால் ஞான மார்க்கத்தில் ஈடுபாடும், தீவிர வைராக்யமும் சித்திக்கும் என்று கூறப்படுகிறது. நாமும் ஞான-வைராக்கியம் சித்திக்க அவரை பிரார்த்திப்போமாக.🙏

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.