Breaking News :

Friday, April 04
.

ஏழு ஜென்ம பாவத்தையும் தீர்க்கும் வில்வ இலை அர்ச்சனை!


உலகில் உள்ள ஆன்மாக்களின் பாவங்களைப் போக்கவல்லவரான ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது தான் வில்வ மரம். இதுவே சிவபெருமானின் தலவிருட்சம் ஆகும். இவ்விருட்சத்தைப் பூஜிப்பவர்கள் சகல நன்மைகளும் பெறுவார்கள்.

வில்வத்தின் பெருமையை பற்றி சாஸ்திரங்களிலும், புராணங்களிலும் மிக விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
வில்வ இலைகள் சிவனின் திரிசூல வடிவத்தையும் இறைவனின் முக்குணங்களையும் குறிப்பதாக விளங்குகின்றன. ஊழிக்காலத்தில் அனைத்தும் அழியும் என உணர்ந்த வேதங்கள் தாங்கள் அழியாதிருக்க என்னவழி என ஈசனிடம் கேட்க ஈசனும், திருவைகாவூர் ( திருகருகாவூர்) திருத்தலத்தில் வில்வ மரத்தின் வடிவில் நின்று தவம் செய்யுமாறு அருளினார்.

அதன்படி வேதங்களும் வில்வமரங்கள் அடியில் தவமியற்றியதால் திருவைகாவூர் என்ற ஊர் வில்வாரண்யம் எனச் சிறப்புப் பெயர் பெற்றது. வில்வத்தில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம், என பல வகைகள் உள்ளன. அதிலும் குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ இதழ்களையே பூஜைக்குப் பயன்படுத்துகிறோம்.

இவையல்லாமல் ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ மரங்களும் உள்ளன. பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியோதயத்துக்கு முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்ள வேண்டும். சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்த வேண்டும். தினமும் சிவனுக்கு வில்வம் சார்த்தி அர்சனை செய்து வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. மகா சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனை பூஜித்தால், நம்முடைய ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்.

சிவனுக்கு அர்ச்சனை செய்வதற்கு தேவையான வில்வத்தை மாதப் பிறப்பு சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, ஆகிய நாட்களில் பறிக்கக் கூடாது. மேலும் இந்நாட்களில் பூஜைக்குத் தேவையானதை முதல் நாளே பறித்து வைத்து கொள்ள வேண்டும். வில்வத்தைப் பறித்து ஆறுமாதம் வரை வைத்திருந்து பூஜை செய்யலாம். உலர்ந்த வில்வம் மற்றும் பூஜித்த வில்வம் முதலியவற்றாலும் பூஜை செய்யலாம். சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரவல்லது.

நாம் வீட்டில் வில்வமரம் வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் அடைய முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. மேலும் அஸ்வமேதயாகம் செய்த பலன் ஏற்படும். ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் உண்டாகும். கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும்.
108 சிவ தலங்களை வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும். வீட்டில் வில்வமரம் வைத்து வளர்த்து வழிபடுபவர்களுக்கு ஒரு போதும் நரகமில்லை. மேலும் எமபயம் எப்போதும் வாராது. ஒரு வில்வ இதழைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது இலட்சம் ஸ்வர்ணபுஷ்பங்களால் இறைவனை பூஜை செய்வதற்கு சமமானதாகும். வில்வ மரத்தின் காற்றை நுகர்ந்தாலோ அல்லது அதன் நிழல் நமது சரீரத்தில் பட்டாலோ அதீத சக்தி கிடைக்கும்.

சிவனின் நட்சத்திரம் திருவாதிரை. அது ஒரு எரி நட்சத்திரமாக விளங்குவதால் சிவனின் சூட்டினைத் தணிக்க நம் முன்னோர்கள் குளிர்ச்சி நிறைந்த வில்வத்தை சாத்தி வழிபட்டுள்ளனர்.  வில்வ இலையை பறிக்கும்போது வில்வ மரத்திடம் அனுமதி பெறுவதாக நினைத்துக் கொண்டு கீழ்காணும் இந்த சுலோகத்தைச் சொல்ல வேண்டும்.

“நமஸ்தே பில்வதரவே ஸ்ரீபலோதய ஹேதவே
ஸ்வர்காபவர்க ரூபாய நமோ மூர்தி த்ரயாத்மனே
ஸம்ஸ—ர விஷவைத்யஸ்ய ஸ–ம்பஸ்ய கருணாநிதே
அர்சனார்த்தம் லுனாமி த்வாம் த்வத்பத்ரம் தத்க்ஷமஸ்வ மகே”

*பொருள்:*
போகமோட்சம் உருவாகவும், மும்மூர்த்திகளின் உருவாகவும், லட்சுமி கடாட்சத்தை அளிப்பதற்குக் காரணமாகவும் உள்ள வில்வ மரத்தை வணங்குகிறேன். ஓ வில்வ மரமே! பிறப்பு இறப்பாகிற விஷயத்துக்கு மருத்துவனும், கருணைக்கடலான சிவனின் பூஜைக்காக தங்கள் வில்வ இலையைக் கிள்ளி எடுக்கிறேன். அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். -இவ்வாறு பிரார்த்தனை செய்து, பிறகு இலையைப் பறிக்க வேண்டும். இந்த அர்ச்சனை ஏழு ஜென்ம பாவத்தையும் தீர்த்துவைக்குமாம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.