14-03-2025 சரடு (நோன்பு கயிறு) கட்டிக்கொள்ளும் நேரம் வெள்ளிக்கிழமை மாலை 5.30 முதல் 6.30 மணிக்குள் சரடு கட்டிக் கொள்ளவும்.
விரைவில் திருமணம் நடைபெற வேண்டியும், நல்ல கணவன் அமைய வேண்டியும் கன்னிப் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு ஆகும்.
மாசி மாத முடிவில் பங்குனி மாத தொடக்கத்தில் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த பண்டிகையின் போது பெண்கள் திருமாங்கல்யத்தை மாற்றிக் கொள்வர்.
மற்ற நோன்புகளுக்கு கையில் சரடு கட்டிக் கொள்வார்கள். இந்த நோன்பின் போது தாலி கயிற்றுக்கு பதிலாக புதிய கயிற்றைக் கட்டிக் கொள்வார்கள்.
சிலர் சரட்டில் மஞ்சள் சேர்த்து கழுத்தில் கட்டிக் கொள்வர். காரடையான் நோன்பு– மாங்கல்ய பலன் தரும் விரதம் எனவும், தீர்க்க சுமங்கலி வரம் அருளும் நோன்பு எனவும் அழைக்கப்படுகிறது. இந்த நோன்பை சாவித்திரி விரதம் என்றும், காமாட்சி விரதம் எனவும் அழைப்பர்.
பதிவிரதையான சாவித்திரியின் கணவன் சத்தியவானின் உயிரை எமன் பறித்துச் சென்றார். சாவித்திரி அவனை தடுத்து, வாதாடி தன் கணவனின் உயிரை மீட்டு வந்தாள்.
இதற்காக இவள் நோற்ற நோன்பு தான் சாவித்திரி நோன்பு ஆகும். இது காரடையான் நோன்பு என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த நோன்புக்கு காரணமான சாவித்திரியின் வரலாற்றினை அறிந்து கொள்வது அவசியம். அஸ்வபதி என்ற மன்னனின் மகள் சாவித்திரி.
இவள் ஒரு சமயம் காட்டுக்கு சென்ற போது எதிரிகளால் நாடு இழந்து அங்கு வசித்து வந்த த்யுமற் சேனன் என்ற பார்வையற்ற மன்னரின் மகனான சத்தியவானை சந்தித்தார்.
பெற்றோருக்கு அவர் செய்த பணிவிடை சாவித்திரியை கவர்ந்தது. அவள் சத்தியவானை மணமுடிக்க விரும்பினாள். தனது விருப்பத்தை தந்தையிடம் தெரிவித்தாள்.
அவரும் மகிழ்ச்சி அடைந்து சத்தியவானின் ஜாதகத்தை பார்த்த போது அவருக்கு இன்னும் 1 வருடமே ஆயுள் இருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சாவித்திரியின் தந்தை வேறு மாப்பிள்ளை பார்க்கலாம் என்றார்.
அதற்கு மறுப்பு தெரிவித்த சாவித்திரி தனது முடிவில் பிடிவாதமாக இருந்து சத்தியவானையே திருமணம் செய்தாள். கணவரின் ஆயுள் முடிவதற்கு 4 நாட்களுக்கு முன்னதாக சாவித்திரி ஒரு விரதத்தை தொடங்கினாள்.
இரவும், பகலும் கண் விழித்து அன்ன ஆகாரமின்றி கடும் விரதம் இருந்தாள். அன்று சத்தியவான் பெற்றோருக்கு பழம் பறித்து வருவதற்காக காட்டிற்கு செல்ல கிளம்பினான். அவனுடன் தானும் வருவதாக கூறி சாவித்திரியும் சென்றாள்.
சத்தியவானின் ஆயுள் முடியும் நேரம் வந்தது. திடீரென அவன் தலை வலிக்கிறது என்று கூறி கீழே விழுந்தான். அவனை சாவித்திரி தாங்கி பிடித்து தனது மடியில் சாய்த்துக் கொண்டாள். அப்போது அங்கே பாசக்கயிற்றுடன் எமன் தோன்றினான்.
நீங்கள் யார்? என்று சாவித்திரி கேட்டாள். அதற்கு எமதர்மன், பெண்ணே! உன் கணவரின் ஆயுள் முடிந்து விட்டது.
பதிவிரதையானதால் உனது கண்களுக்கு தெரிந்தேன் என கூறிவிட்டு சத்தியவானின் உயிரை பறித்துக் கொண்டு கிளம்பினான்.
சாவித்திரியும் எமனை பின் தொடர்ந்து சென்று நண்பரே! சற்று நில்லுங்கள் என கூறினாள்.
இதைக்கேட்டு திடுக்கிட்ட எமன் நான் உனது நண்பனா? என வியப்புடன் கேட்க, அதற்கு ஒருவன் மற்றொருவருடன் ஏழு அடிகள் நடந்து சென்றால் நட்புக் குரியவர்கள் ஆகிறார்கள் என பெரியவர்கள் கூறுவார்கள். அந்த வகையில் நான் உங்களை பின் தொடர்ந்து வந்தேன்.
நீங்கள் என் நண்பர் ஆவீர்கள் என சாவித்திரி பதில் அளித்தாள். இதைக்கேட்டு எமன் புன்முறுவலுடன் அழகாக பேசும் உனக்கு பாராட்டுகள்.
உனக்கு வேண்டும் வரங்களை தருகிறேன்.
உன் கணவனின் உயிர் தவிர வேறு எதையாவது கேட்டு பெற்று கொள் என்றார். அதற்கு சாவித்திரி தர்ம மகாராஜா மிகவும் நன்றி.
என் மாமனாருக்கு பார்வை தெரிய வேண்டும்.
என் தந்தைக்கு ஆண் வாரிசு இல்லை. அவருக்கு நூறு குழந்தைகள் வேண்டும். மேலும் எனக்கு நூறு குழந்தைகள் வேண்டும் என்றாள்.
நீ கேட்ட வரத்தை தந்தேன்.
இனியும் என்னை பின் தொடராமல் போய்விடு என்றார் எமன். சாவித்திரி மீண்டும் எமனை பின் தொடர்ந்தாள். இதனால் கோபமடைந்த எமன் ‘வேறு என்ன வேண்டும்’ என கேட்க, அதற்கு சாவித்திரி ‘தர்மராஜாவின் வாக்கு தப்பாது. எனக்கு 100 குழந்தைகள் பிறப்பதாக வரம் தந்தீர்கள்.
என் கணவன் இல்லாமல் எப்படி குழந்தை பிறக்கும்?’ என்றாள். இதைக்கேட்டு வெலவெலத்துப் போன எமன், அவசரத்தில் சிந்திக்காமல் கொடுத்த வரத்தின் விபரீதத்தை உணர்ந்தார்.
பின்னர் சாவித்திரியின் சமயோசிதத்தை பாராட்டி, சத்தியவானின் உயிரை திருப்பிக் கொடுத்து வாழ்த்தினார். காரடையான் நோன்பு அன்று சாவித்திரியின் கதையை கேட்பவர்களுக்கு தீர்க்காயுசு கிடைப்பதாக ஐதீகம்.
விரதம் இருப்பது எப்படி?
காரடையான் நோன்பன்று வீட்டை தூய்மை செய்து மாக்கோலமிட வேண்டும். வாசல் நிலை, சுவாமி அறை நிலைகளில் மாவிலை தோரணம் கட்ட வேண்டும். பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட்டு காமாட்சி அம்மன் மற்றும் சுவாமி படங்களுக்கு பூமாலை அளிக்க வேண்டும். ஒரு கலசத்தின் மேல் தேங்காய் மாவிலை வைக்க வேண்டும்.
கலசத்தில் குங்குமம், மஞ்சள் பூசி அதன்மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும். அருகில் காமாட்சி அம்மன் படம் வைத்து அவளை சாவித்திரியாக கருதி வழிபட வேண்டும்.
சாவித்திரி காட்டில் தன் கணவர் சத்தியவானுடன் வாழ்ந்த போது அங்கு கிடைத்த செந்நெல்லையும், காராமணி -யையும் கொண்டு அடை தயார் செய்து வெண்ணையுடன் அன்னைக்கு சமர்ப்பித்து வழிபட்டாள்.
அதனால் சிறிது வெண்ணை -யுடன் விளைந்த நெல்லைக்குத்தி கிடைத்த அரிசி மாவில் அடை தயாரித்து நைவேத்தியமாக படைக்க வேண்டும்.
நுனி வாழை இலையில் வெற்றிலைப்பாக்கு மஞ்சள், வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்ட பொருட்களை ஒரு தட்டில் வைக்க வேண்டும்.
மஞ்சள் சரடு (மஞ்சள், பூ இதழும் நடுவில் கட்டி) இவைகளை வைத்து இலை நடுவில் வெல்ல அடையும், வெண்ணையும் வைக்க வேண்டும்.
நோன்பு சரடை அம்மனுக்கு சாத்தி, பின்னர் தங்கள் கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும். மூத்த பெண்கள் இளைய பெண்களுக்கு சரடு கட்ட வேண்டும்.
பிறகு தானும் கட்டிக் கொண்டு அம்மனை வணங்கிய பின்னர் அடையை சாப்பிடலாம். நோன்பு தொடங்கியது முதல் முடிக்கும் வரை, தீபம் சுடர்விட்டு எரிய வேண்டியது முக்கியமானது. அன்று பாலும், பழமும் சாப்பிடுவது மாங்கல்ய பலத்தை பெருக்கும்.
நிவேதனப் பொருட்களை உண்டு விரதத்தை முடிக்க வேண்டும். மறுநாள் சூரிய உதயத்திற்கு முன் பசுவிற்கு இரண்டு வெல்ல அடைகள் கொடுக்க வேண்டும்.
காரடையான் நோன்பு
( சாவித்ரி விரதம் ) :
சரடு_கட்டிக்கொள்ளும்_போது_சொல்லவேண்டிய_ஸ்லோகம்:
தோரம் க்ருஹ்ணாமி ஸுபகே ச
ஹாரித்ரம் தராம்யஹம்
பர்த்து ஆயுஷ்ய ஸித்யர்த்தம்
ஸுப்ரீதா பவ ஸர்வதா.
*தீர்க்க_சுமங்கலித்துவத்தை_அளிக்கும்_ப்ரார்த்தனை :
( பதிவ்ரதா ஸிரோண்மணியான சாவித்திரி என்பவள் தனக்கு தீர்க்க சுமங்கலித்தன்மையை அளிக்கும்படி அம்பாளை ப்ரார்த்தித்த இந்த ஸ்லோகத்தை அனைவரும் ப்ரார்த்தித்துக் கொள்ளவும் )
ஓங்கார பூர்விகே தேவீ
வீணா புஸ்தக தாரிணீ
வேதமாதா நமஸ்துப்யம்
அவதவ்யம் ப்ரயஸ்ஸமே.
பதிவ்ரதே மஹாபாகே
பர்த்துஸ் ச ப்ரியவாதிநீ
அவதவ்யம் ச ஸௌபாக்யம்
தேஹி த்வம் மம ஸுவ்ரதே.
புத்ராந் பௌத்ராநாம் ச ஸௌபாக்யம்
ஸௌமாங்கல்யம் ச தேஹி மே.
ப்ரார்த்தனை_ஸ்லோகம் :
உருகாத வெண்ணெயும்
ஓரடையும் நான் நூற்றேன்
ஒருநாளும் என் கணவர்
என்னை பிரியாதிருக்கணும்.
ஸர்வ மங்கள மாங்கல்யே ஸிவே
ஸர்வார்த்த ஸாதிகே
ஸரண்யே த்ரையம்பிகே கௌரீ
நாராயணீ நமோஸ்துதே.