Breaking News :

Friday, April 04
.

கொடுமலூர் முருகன் கோவில்!


ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியிலிருந்து சுமார் 22 கி.மீ தொலைவில் உள்ளது மேலக்கொடுமலூர். முருகப்பெருமான். சூர சம்ஹாரத்துக்குப் புறப்பட்ட போது, அன்னை சக்தியிடமிருந்து வேல் மற்றும் பல ஆயுதங்களைப் பெற்றுச் சென்றார். அவற்றுள் பிரதானமான `மழு' எனும் ஆயுதத்தை முருகப் பெருமான் பெற்ற தலம் தான் கொடுமழுவூர் என்றழைக்கப்படும் மேலக்கொடுமலூர்.

அசுரர்களை அழித்துவிட்டுத் திரும்பிய முருகப் பெருமான், மாலை வேளையில் இத்தலத்தை அடைந்தார். அங்கே தவமியற்றிக்கொண்டிருந்த முனிவர்களுக்கு மேற்கு முகமாகக் காட்சியளித்தவர், அவர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் இந்தத் தலத்திலேயே ஸ்ரீகுமரய்யா என்னும் திருப் பெயருடன் கோயில் கொண்டார்.

இங்கே முருகப்பெருமான் அஸ்தமன வேளையில் முனிவர்களுக்குக் காட்சி தந்ததால், சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகே அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. திங்கள், வெள்ளி, கிருத்திகை ஆகிய நாள்களில் இரவு வேளைகளில் 33 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறுவது குறிப்பிடத் தக்கது. வைகாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளால் செய்யப்படும் முப்பழ பூஜை மிகவும் பிரசித்திபெற்ற பூஜையாகும்.

இங்கே ஸ்ரீகுமரய்யாவுக்கு சுத்த அன்னம் நைவேத்தியம் செய்யப்படுவதில்லை. பழங்கள், தேன் கலந்த தினை மாவு, வெல்லம் கலந்த பாசிப் பருப்பு, கைக்குத்தல் அரிசி ஆகியவையே நைவேத் தியமாகப் படைக்கப்படுகின்றன.  பாம்பன் சுவாமிகள், திருவேகம்பத்தூர் கவி ராஜ பண்டிதர், எமனேஸ்வரம் ஜவ்வாது புலவர் ஆகியோர் இத்தலத்தில் அருளும் முருகனைப் போற்றிப் பாடியுள்ளனர். இங்கு முருகப்பெருமான் பல்துலக்கிவிட்டு வலப்புறமாக வீசிய குச்சியே உடைமரமாக வளர்ந்து, கோயிலின் தலவிருட்சமாக அமைந்திருப்பதாக நம்பிக்கை.

தீராத முழங்கால் வலியால் அவதிப்படுபவர்கள், இந்தக் கோயிலுக்கு வந்து குமரய்யாவை வேண்டிக் கொண்டு, மஞ்சள் பூசப்பட்ட உடைமரக் கால்களை (கவட்டையுடன் கூடியது) வாங்கி சமர்ப்பித்தால், நாள்பட்ட முழங்கால் வலி நீங்கி விடும் என்பது பக்தர்களது நம்பிக்கை. மேலும் வயிற்று வலி, நெஞ்சு வலி ஆகிய பாதிப்புகளால் அவதிப்படும் அன்பர்கள், இங்கு வந்து மாவிளக்கு ஏற்றி வைத்து முருகப்பெருமானை வணங்கி வழிபட்டுச் சென்றால், விரைவில் அந்தப் பிரச்னைகள் தீரும் என்கிறார்கள். அதேபோல், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் 48 நாள்கள் விரதம் இருந்து, கோயிலின் தலவிருட்சமான உடைமரத்தின் இலைகளைப் பிரசாதமாகப் பெற்று உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.