மீரா அல்லது மீராபாய் (கி.பி 1498 – கி.பி 1547) வட இந்திய வைணவ பக்தி உலகில் மறுக்கமுடியாத கிருஷ்ண பக்தை ஆவார். தென்னிந்திய ஆண்டாள் போல இவர் கிருஷ்ணர் மீது தீவிர பற்று கொண்டவர். 1300 பாடல்களுக்கு மேல் பாடிய மீரா ராஜபுத்திர இளவரசியாக தற்போதைய ராஜஸ்தானில் பிறந்தவர்.பக்தி நெறியில் தீவிர பற்று கொண்ட இவர் , கிருஷ்ணரின் மீது இயற்றிய பக்திப் பாடல்கள் மிகவும் புகழ்பெற்றவை.
இவள் கையில் வீணை எடுத்து வாசிக்க தொடங்கியதும் உலகமே மயங்கும். இசையில் மட்டுமல்ல அழகிலும் சிறந்தவள். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் மிகச் சிறந்த பக்தர் ஆவர். மீரா பாய் தன் வாழ்க்கை முழுவதையும் கிருஷ்ணனை நோக்கியே தந்து விட்டார்.
மீரா வழிபட்ட கிருஷ்ணர் கோயில். கடவுளிடம் செல்வது அவ்வளவு சுலபமான காரியமல்ல. ஏராளமான தடைகளை தாண்ட வேண்டியிருக்கும். இதில் சில பக்தர்கள் மட்டுமே அசைக்க முடியாத பக்தியையும் நம்பிக்கையும் கொண்டு பக்தியின் உச்சநிலையை அடைகின்றனர். அப்படி தன்னையே அர்ப்பணித்தவர் தான் மீரா பாய்.
இவர் ராஜஸ்தானில் உள்ள செளகரி என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் ஜோத்பூரை ஆண்ட ரத்தன் சிங்கின் மகள் என்ற பெருமை பெற்றவர். அப்படி ஏகப்பட்ட வசதிகளுடன் பிறந்த மீரா பாய்க்கு நடனம், பாட்டு என்றால் உயிர். ஆனால் ராஜவம்சம் என்பதால் மற்றவர்கள் முன்னிலையில் பாட்டு பாடுவது தடுக்கப்பட்டது. அவர் தன்னுடைய சிறுவயதிலேயே கிருஷ்ணனின் மீது தீராத காதல் கொண்டு இருந்தார். அவரை நோக்கி இசைப்பதும் பாட்டு பாடுவதையுமே தன்னுடைய வாழ்நாள் முழுவதும் செய்து வந்தார்.
கிருஷ்ணனை நோக்கி தெய்வீக பாடல் பாடி தன் மனதை அதில் ஈடுபடுத்தினார். ஒரு நாள் ஒரு துறவி மீரா பாயின் தந்தையை காண அவர் வீட்டிற்கு வந்தார். அந்த துறவி மீரா பாய்க்காக ஒரு கிருஷ்ணர் சிலையை பரிசாக கொடுத்து சென்றார். அவரது தந்தை அதை மீராவிடம் கொடுத்த போது அவர் மிகவும் சந்தோஷம் அடைந்தார். தன் கிருஷ்ணன் தன்னை காண வந்ததாக நினைத்து சந்தோஷம் அடைந்தார். இந்த நிகழ்வும் மீராவின் மனதில் கிருஷ்ணர் இடம் பெற காரணமாக அமைந்தது.
அவரது தந்தையும் தாயும் சேர்ந்து மீரா பாய்க்கு திருமணம் முடிக்க திட்டமிட்டனர். அப்பொழுது என்னுடைய கணவர் யார் என்று கேட்டதற்கு உன் கிருஷ்ணர் தான் உன் கணவன் என்றதும் அவர் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார். கிருஷ்ணனையே தன்னுடைய மணவாளனாக ஆக்கிக் கொண்டாராம் .
ஆனால் குடும்பத்தின் வற்புறுத்தலின் பேரில் 1516-ல் பதினெட்டு வயதில் சுய விருப்பமின்றி போஜராஜன் எனும் சித்தோர்கர் இளவரசனுக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டார்.திருமணத்துக்கு பிறகு அவளது வசதி வாய்ப்புகள், செல்வ செழிப்பு, சமூக நிலை எல்லாம் உயர்ந்தும் மீராவிற்கு எதுவும் பெரியதாக தெரியவில்லை. அவளுக்கு திருமணம் ஆனாலும் மாலையில் கிருஷ்ணனை வழிபடுவதும், அவரை நோக்கி மனதார பாடுவது மட்டுமே தன் உலகமாக கொண்டு இருந்தாள்.
தங்களுடைய குடும்ப தெய்வமான துர்கா தேவியை வழிபடாமல் இருப்பது அவரது மாமியாருக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கியது. ஆனால் அவள் அதை மறுத்து விட்டாள். தன்னை முழுமையாக கிருஷ்ணனுக்கு அர்ப்பணித்து விட்டதாக அவள் கூறிவிட்டாள். மீராவின் பக்திமயமான காதல் கிருஷ்ணனை நோக்கி அதிகரிக்க அதிகரிக்க அதை அவரது மாமியரால் பொருத்துக் கொள்ள முடியவில்லை.
அவள் கிருஷ்ணன் மீது வைத்திருந்த காதலை யாராலும் அசைக்க முடியவில்லை. இதனால் மீரா பாயை கொல்லுவதற்கு அவரது மாமியாரால் திட்டம் தீட்டப்பட்டது. பலமுறை கொலை முயற்சிகள் செய்யப்பட்டன. கிருஷ்ணனுக்கு படைத்த நெய்வேத்யத்தில் நஞ்சு, மீராவின் படுக்கையில் இரும்பு முட்கள் என்று எத்தனை எத்தனையோ முயற்சிகள். ஆனால் எல்லாம் கடவுள் கிருஷ்ணனின் அருளால் மறைந்தது. ஒவ்வொரு முறையும் மீராவை காப்பாற்றி விட்டார் கிருஷ்ணர்.
ஒரு நாள் அவரது மாமியார் நஞ்சு கலந்த தண்ணீரை புனித நீர் என்று கூறி குடிக்க சொன்னார். ஆனால் அவள் இதயமெங்கும் நிரம்பி இருக்கும் கிருஷ்ணன் அவள் உயிரை விட வில்லை. என்ன ஆச்சரியம் நஞ்சை நீக்கி அவளை காப்பாற்றி விட்டார். இதை அவரது மாமியரால் நம்பவே முடியவில்லை.
ஒரு நாள் மீராவிற்கு பணிப் பெண் மூலம் பூக்கூடை ஒன்றை அனுப்பினார் அவரது மாமியார். ஆனால் அதில் பூக்கள் இல்லாமல் பாம்பை வைத்து சதி செய்து இருந்தது மீராவிற்கு தெரியாது. மீரா அந்த பூக்கூடையை திறந்த போது பாம்பெல்லாம் ஸ்ரீ கிருஷ்ணனின் அருளால் பூ மாலையாக மாறி விட்டது.
ஒரு நாள் மீராவை கிணற்றில் தள்ளி கொல்ல நினைத்தனர். ஆனால் அதுவும் நடக்கவில்லை. அப்பொழுது தன் மனம் கவர்ந்த கிருஷ்ணன் அவளை காப்பாற்றி விட்டார்.
மீரா பாய் தன் இறுதிக் காலத்தில் குஜராத்தின் துவாரகைக்கு வந்தடைந்தார். அங்கு கோயில்கொண்ட துவாரகதீசன் (கண்ணன்) முன்பு பாடிக்கொண்டே அனைவரும் கண்ணெதிரிலேயே இறைவனோடு கலந்து மாயமானார். அவருடைய அன்பு, காதல், பக்தி எல்லாம் ஸ்ரீ கிருஷ்ணனுக்கே என்று வாழ்ந்து வந்தார். அப்படியே இறுதி நாளில் இரண்டறக் கலக்கவும் செய்து விட்டார். இவரின் காதல் பரிசுத்தமானது என்று இந்து மதம் இன்றளவும் புகழ்ந்து வருகிறது.