Breaking News :

Friday, April 04
.

மகா சிவராத்திரி - வீட்டில் பூஜை செய்வது எப்படி?


இரவு முழுவதும் கண் விழித்து 4 காலமும் பூஜை செய்ய முடியாதவர்கள் குறைந்தபட்சம் லிங்கோற்பவ காலத்தில் மட்டுமாவது கண்விழித்து பூஜை செய்யவேண்டும்..

மகா சிவராத்திரியன்று விரதம் இருந்து சிவனை வழிபட்டால் பாவங்கள் விலகும், நூறு அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும், இந்த பிறவியில் சுகவாழ்வும் மறுபிறவியில் சிவலோக வாசமும் கிட்டும் என்று இந்து மதம் கூறுகிறது. சிவபூஜை எல்லா பூஜைகளிலும் உயர்ந்தது. சிவனை வழிபடுபவர்கள் அனைத்து செல்வங்களையும் அடைகிறார்கள். சிவ என்ற சொல்லே மங்களத்தை குறிப்பது.

மாசி மாதத்தில் வரும் சதுர்த்தசி நாள் மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. மற்ற சிவராத்திரிகளில் பெறும் எல்லா நன்மைகளையும் இது ஒரு சேர வழங்கிவிடுவதால் இது மகா சிவராத்திரி என்று போற்றப்படுகிறது. எனவே மற்ற சிவராத்திரிகளில் விரதம் இருக்க முடியாதவர்கள் கூட மகா சிவராத்திரியன்று விரதம் மேற்கொண்டு சிவபெருமானை பூஜிப்பது வழக்கம்.

சிவராத்திரி அன்று விரதம் இருப்பவர்கள் அதிகாலை நீராடி வீட்டில் உள்ள சிவன் படத்தையோ அல்லது சிவலிங்கத்தையோ அலங்காரம் செய்து பூஜை செய்ய வேண்டும். பின்னர் சிவன் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். தொடர்ந்து வீட்டிலேயே பூஜை செய்யலாம். வீட்டில் பூஜை செய்ய முடியாதவர்கள், அதற்கான வசதி வாய்ப்புகள் இல்லாதவர்கள் கோவிலுக்கு சென்று அங்கு நடக்கும் பூஜையில் கலந்து கொள்ளலாம். அங்கு நடைபெறும் நான்கு கால பூஜை, அபிஷேகங்களை கண்டுகளிக்கலாம். பால், தயிர், நெய், தேன் மற்றும் பூஜை பொருட்களை கொடுக்கலாம். அன்று முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். பகலில் உறங்கக்கூடாது.

வீட்டில் பூஜை செய்பவர்கள் மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருநீறு அணிந்து கையில் உத்திராட்ச மாலையுடன் சிவபூஜையை தொடங்க வேண்டும். பஞ்சாட்சர மந்திரமான 'ஓம்நமசிவாய' என்ற மந்திரத்தை உச்சரித்து பூஜிக்க வேண்டும்.

நான்கு ஜாமங்களிலும் சிவலிங்கத்திற்கு பால், தயிர், தேன், நெய், சர்க்கரை ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும். முதல் ஜாமத்தில் சுத்த அன்னம், காய்கறி ஆகியவற்றையும், வில்வப்பழத்தையும் நிவேதனம் செய்ய வேண்டும். இரண்டாம் ஜாமத்தில் லட்டு, பலாப்பழத்தையும், மூன்றாம் ஜாமத்தில் நெய் கலந்த பலகாரங்கள், பாயசம், மாதுளை பழத்தையும் நிவேதனம் செய்து வணங்கி வழிபட வேண்டும்.
நான்காம் ஜாமத்தில் கோதுமையில் செய்யப்பட்ட பலகாரம் மற்றும் பழங்களை நிவேதனம் செய்து வழிபட வேண்டும். ஒவ்வொரு ஜாமத்தில் பூஜை செய்து முடித்ததும் தன்னால் முடிந்த அளவு தானங்களை செய்ய வேண்டும். இரவு முழுவதும் கண் விழித்து 4 காலமும் பூஜை செய்ய முடியாதவர்கள் குறைந்த பட்சம் லிங்கோற்பவ காலத்தில் மட்டுமாவது கண்விழித்து பூஜை செய்யவேண்டும்.

பொழுது விடிந்ததும் நீராடி நித்யக் கடன்கள் முடித்து சிவன் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்ய வேண்டும். அதன்பின் உணவு சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

அதன்பின்னரும் உடனடியாக தூங்க செல்லக்கூடாது. காலை பூஜையையும், உச்சிக்கால பூஜையையும் முடிக்க வேண்டும். அன்று சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ பகல் பொழுதை கழிக்க வேண்டும். அதன்பின்னர் தங்களால் இயன்ற அளவு உடைகள் மற்றும் உணவினை தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யவேண்டும். சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் ஒவ்வொரு ஜாமபூஜை முடிந்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை சாப்பிடலாம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.