Breaking News :

Saturday, May 17
.

மாரியம்மன் கோயில் பூஜை பரிகாரம்?


விருதுநகரில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் சிவாம்சம் கொண்டவள் அதனால் கருவறையில் தேவிக்கு முன் சிங்கத்திற்குப் பதிலாக நந்தி வீற்றருள்கிறார். கண்நோய் உள்ளவர்கள் தேவிக்கு அபிஷேகம் செய்த நீரால் தம் கண்களைக் கழுவி நோய் நீங்கப்பெறுகிறார்கள்.

மதுரை சோழவந்தானில் உள்ளது ஜெனகை மாரியம்மன். அம்மைநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பிரசாதமான தீர்த்தத்தை அருந்த நோய் மறைகிறது.

மதுரை எல்லீஸ் நகரில் தேவி கருமாரியம்மனை தரிசிக்கலாம். இத்தேவியை அனைத்து மதத்தினரும் வழிபட்டு அருள்பெறுவது சிறப்பு.

புதுக்கோட்டை நார்த்தாமலையில் முத்துமாரியம்மன் திருவருள் புரிகிறாள். இங்கு அக்னி காவடி எடுத்தால் தீராத நோய் தீர்கிறது. மழலை வரம் வேண்டுவோர் கரும்புத் தொட்டில் கட்டுகிறார்கள்.

நீலகிரி குன்னூரில் தந்திமாரியம்மன் அருளாட்சி புரிகிறாள். தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டால் பக்தர்கள் இந்த மாரியிடம் மனமுருக வேண்டிக்கொள்ள உடனே பெருமழை பெய்கிறது.

ஊட்டியில் மகாமாரி, மகாகாளி இரு தேவியரும் ஒரே கருவறையில் வீற்றருள்கின்றனர்.
இங்குள்ள காட்டேரியம்மன் சந்நதியில் மந்திரித்துத் தரும் முடிகயிற்றைக் கட்ட தோஷங்கள், நோய்கள், பில்லி சூனியம் விலகுகின்றனவாம்.

நாமக்கல் ராசிபுரத்தில் நித்ய சுமங்கலிமாரியம்மனை தரிசிக்கலாம். வருடம் முழுதும் அம்பிகையின் எதிரே சிவாம்சமான கம்பம் நடப்பட்டிருப்பதால் இப்பெயர். ஐப்பசி மாதம் புதுக் கம்பம் நடும்போது தயிர்சாதம் நிவேதிப்பர். அந்த தயிர்சாதப் பிரசாதத்தை உண்பவர்க்கு அடுத்த வருடமே மழலைப் பேறு கிட்டுகிறது.

கோவையில் ஆட்சிபுரியும் தண்டுமாரியம்மன், குடும்பவளம் பெருகவும், தீராத நோய்கள் தீர்ந்திடவும் அருள்கிறாள்.

சமயபுரம் மாரியம்மன், மாசி மாதம் தன் பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சைப்பட்டினி விரதம் இருப்பவள். தாலிவரம் வேண்டும் பெண்கள் தங்கள் தாலியை நேர்த்திக்கடனாகச்
செலுத்துகிறார்கள்.

திருச்சி மணப்பாறையிலுள்ள மாரியம்மன் கோயிலில் திருமணத்தடையுள்ளவர்கள் மஞ்சள்கயிறு வாங்கி அம்மன் சந்நதியின் பின்புறம் உள்ள வேப்பமரத்தில் கட்டி நேர்ந்து கொள்ள, விரைவில் மணவாழ்வு பெறுகிறார்கள்.

கோடீஸ்வரி மாரி என்ற கோட்டைமாரி திருப்பூரில் அருள்கிறாள். கருவறையில் அம்மனின் இரு புறங்களிலும் லட்சுமி, சரஸ்வதி இருவரும் அம்மனைப்போலவே சுயம்புவாக எழுந்தருளியிருக்கிறார்கள். இந்த அன்னையிடம் பூவாக்கு கேட்பது இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பு.

தேனி பெரியகுளத்தில் வீற்றிருக்கும் கௌமாரியம்மனுக்கு விவசாயம் செழிக்க தானியங்கள், காய்கறிகள், கனிகளைப் படைக்கின்றனர்.
கரூர் மகாமாரியம்மன், வழக்கு, வியாபாரச் சிக்கல் நீங்க, காணாமல் போன பொருட்கள் திரும்பக் கிடைக்க அருள்கிறாள்.

திண்டுக்கல் கோட்டை மாரியம்மனை பிரார்த்தித்து உப்பையும், மஞ்சளையும் கொடிமரத்தில் சமர்ப்பிக்க, வேண்டுதல் நிறைவேறுகிறது.

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன், துள்ஜா மன்னர் மகளின் கண்நோய் தீர்த்தவள். புற்றுருவாய் இருந்த இந்த அம்மனுக்கு யந்திரப் பிரதிஷ்டை செய்தவர் நெரூர் சதாசிவப் பிரம்மேந்திரர்.
காரைக்குடி, முத்துப்பட்டினம், மீனாட்சிபுரத்திலுள்ள முத்துமாரியம்மனுக்கு தக்காளிப் பழத்தை காணிக்கையாக்கி, தக்காளிப் பழச்சாறால் அபிஷேகம் நடத்தப்படுகிறது.

கோவை, உடுமலைப்பேட்டை மாரியம்மன் ஆலயத்தில் அருள்கிறாள். மார்கழி திருவாதிரையன்று 108 தம்பதியருக்கு மாங்கல்ய பூஜை செய்யப்பட்டு சுமங்கலிகளுக்கு மஞ்சள்கயிறு வழங்கப்படுகிறது.

ஈரோடு, பெரியமாரியம்மன், வெப்பநோய்களை நீங்குகிறாள். அம்மை நோய்கண்டவர்களை அன்னை குணப்படுத்துகிறாள்.

கோபிச்செட்டிப்பாளையம் சாரதாமாரியம்மன் ஆலயத்தில் மண்சட்டியில் நெருப்பை ஏந்தி பூசாரி வருவதை தரிசித்தால் வாழ்வு வளம் பெறுவதாக நம்பிக்கை நிலவுகிறது.

®️ ஈரோடு, கருங்கல்பாளையம், சின்னமாரியம்மன் மழலை வரம் அருள்கிறாள். இத்தல விபூதி பிரசாதத்தை நெற்றியில் பூசியும், தண்ணீரில் கரைத்து அருந்தவும் நோய்கள் நீங்குகின்றன

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.

News Hub